ராஜஸ்தானில் உள்ள ஒரு குக்கிராமத்தில் ‘குடியரசுத் தலைவர் ஆடு மேய்க்க சென்றுள்ளார்’ என்றோ பிரதமர் பலசரக்கு வாங்க நகரத்துக்கு சென்றுள்ளார் என்றோ யாராவது சொன்னால் ஆச்சரியப்பட வேண்டாம். ஆம். அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அரசு பதவி, பிரபல பிராண்ட்களின் பெயரைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் புந்தி மாவட்டத்தில் ராம்நகர் கிராமம் உள்ளது. சுமார் 500 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கஞ்சார் சமுதாயத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். பெரும்பாலானவர்கள் படிப் பறிவில்லாதவர்கள். ஆனாலும், இங்கு குழந்தைகளுக்கு அரசு உயர் பதவி மற்றும் உயர் அலுவலகங்களின் பெயர்களைச் சூட்டுவது வழக்கமாக உள்ளது.
ஒருமுறை மிடுக்கான தோற்றத்துடன் தனது கிராமத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியரைப் (கலெக்டர்) பார்த்து அசந்துபோன ஒரு பெண், தனது பேரனுக்கு கலெக்டர் என பெயரிட்டுள்ளார். அவருக்கு இப்போது 50 வயதாகிறது. அவர் பள்ளிக்குச் சென்றதே இல்லை.
இதுகுறித்து ராம்நகர் கிராம அரசு பள்ளி ஆசிரியர் கூறும்போது, “சூழ்நிலை காரணமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் சென்ற கிராம மக்கள், அங்கு அதிகாரிகளுக்கு கிடைக்கும் மரியாதையைக் கண்டு ஆச்சரியம் அடைந்துள்ளனர். இதையடுத்து, தங்கள் குழந்தைகளுக்கு ஐஜி, எஸ்பி, ஹவில்தார், மாஜிஸ்திரேட் என பெயரிடத் தொடங்கினர்” என்றார்.
இதுபோல மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஹை கோர்ட் என பெயரிட்டுள்ளனர். இவர் பிறந்தபோது, குற்ற வழக்கில் சிக்கிய இவரது தாத்தாவுக்கு ஹை கோர்ட் ஜாமீன் வழங்கியதால் இந்த பெயர் வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் ஸ்மார்ட்போன் புரட்சி ஏற்பட்டுள்ள நிலையில், புந்தி மாவட்டம் நைன்வா தாலுகாவுக்குட்பட்ட கிராமங்களில் செல்போன் பிராண்ட்கள், சாப்ட்வேர் மற்றும் அதன் உதிரி பாகங்களின் பெயரையும் சூட்டத் தொடங்கி உள்ளனர்.
இதுகுறித்து, நைன்வா தாலுகா சுகாதார மையத்தில் பெயர் பதிவு அதிகாரியாக பணியாற்றும் ரமேஷ் சந்த் ரத்தோர் கூறும்போது, “பர்கானி, அர்னியா, ஹனுமந்தபுரா, சுவாலியா உள்ளிட்ட கிராம மக்கள், தங்கள் குழந்தைகளுக்கு சாம்சங், நோக்கியா, ஜியோனி, ஆண்ட்ராய்டு, ஸ்மார்ட்போன், சிம் கார்டு, சிப், மிஸ்டு கால் உள்ளிட்ட பெயர்களைச் சூட்டுகின்றனர்” என்றார்.
(18.04.2017
தமிழ்
இந்து)
Comments
Post a Comment
Your feedback