இப்படியெல்லாம் கடிதம் கொடுத்தால் எப்படி இந்தக் காதல் கை கூடும்?
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே கேளாய்
உண்மையாய் ஐயரையும் அரையும் கேட்டேன்
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும் சொல்லாய்
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்
பெருநான்கும் அறுநான்கும் பெறுவாய் பெண்ணே
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே
சகிக்க முடியாதினி என்சகியே மானே!
(விவேகசிந்தாமணி)
பாட்டில் சொல்ல வந்த செய்தி இது தான்.
“கன்னியே கேள்! உன் சிவந்தவாயைக் கேட்கிறேன், உன் பதிலைச் சொல்லவாயா?
நான் சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாயானால் வெற்றி பெறுவாய் பெண்ணே!
இதற்குப்பின் வேறு ஏதும் சாக்குப் போக்குச் சொல்லவேண்டாம்.
மான் போன்றவளே! மன்மதன் படுத்தும் பாட்டால் இனியும் காதல் வேதனையை என்னால் சகிக்க முடியாது”
இதை நேராகச் சொல்ல பாவம் என்ன தயக்கமோ பயமோ தெரியவில்லை. அதை யாருக்கும் தெரியாமல் இப்படிச் சொல்லியிருக்கிறான். அந்தப் பெண்ணுக்காகவது புரிந்ததோ என்னவோ!
ஒருநான்கும் ஈரரையும் ஒன்றே:
4 + [½ + ½] + 1 = 6
பன்னிரெண்டு இராசியில் ஆறாவது இராசி கன்னிராசி.
ஆதலால் கன்னியே கேளாய்! என்கின்றான்.
ஐயரையும் அரையும் :
[5 x ½] +½ = 3
கிழமைகளிலே மூன்றாவதாக இருப்பது செவ்வாய்.
செவ்வாயை அதாவது சிவந்த வாயைக் கேட்டேன் எனச் சொல்கிறான்.
இருநான்கும் மூன்றுடனே ஒன்றும்:
[2 x 4] + 3 + 1 = 12
நட்சத்திரங்களிலே பன்னிரெண்டாவது நட்சத்திரம் உத்தரம்.
உத்தரம் என்றால் பதில். உன் பதிலைச் சொல்வாய்.
இம்மொழியைக் கேட்டபடி ஈந்தாய் ஆயின்:
சொல்வதைக் கேட்டபடி பதில் தருவாய் ஆனால்
பெருநான்கும் அறுநான்கும்:
4 + [6 x 4] = 28
வருடங்களில் இருபத்தெட்டாவது வருடம் ஜெய வருடம்.
ஜெயம் என்றால் வெற்றி.
வெற்றி பெறுவாய் பெண்ணே.
பின்னேஓர் மொழிபுகல வேண்டாம் இன்றே :
இதற்குப் பின்னும் வேறு ஒன்றும் சொல்லவேண்டாம். (அதாவது, No சொல்லி விடாதே பெண்ணே)
சரிநான்கும் பத்தும் ஒரு பதினைந்தாலே :
4 + 10 + 15 = 29
வருடங்களில் 29 ஆவது வருடம் மன்மத வருடம். மன்மதன் படுத்தும் பாட்டால்,
சகிக்க முடியாதினி என்சகியே மானே!
இப்படி எழுதிய கடிதம் அந்தப் பெண்ணின் அம்மாவிடம் கிடைத்தால் கூட ஒன்றும் சொல்ல மாட்டார்.
புரிந்தால் தானே கோபம் வரும்?
Comments
Post a Comment
Your feedback