மார்கழி முடிந்து வரும் தை தெளிந்த நீர் ஓடும் காலம்.
"நீ தக்காய், தைந் நீர்! நிறம் தெளிந்தாய்’ என்மாரும்”,
(பரிபாடல்)
கார் கால நீர் போலன்றி, தெளிவாக இருக்கும் தை மாத நீர், பளிங்கு போல இருக்கிறது.
அதிகாலையில் இளம் பெண்கள் துயிலெழுவது, எல்லோரும் சேர்ந்து குளிர்ந்த நீர்நிலைகளுக்குச் செல்வது, அதில் நீராடி நல்ல கணவனை அருளுமாறு நோன்பிருப்பது ஆகிய வழக்கங்கள் சங்ககாலம் முதற்கொண்டே நம் மக்களிடையே நிலவி வந்திருக்கின்றன.
தைத் திங்களில் இந்த நோன்பினை இளம் பெண்கள் மேற்கொண்டனர்.
புறநானூறு:
ஆவணி மாதம் முதல் பெய்த மழையால் ஆறு குளங்கள் எல்லாம் நிரம்பி அதன்பிறகு பெய்த பனியாலும் வாடைக் காற்றாலும் தைத் திங்களில் நீரெல்லாம் குளிர்ந்து கிடக்கும்.
"தை இத் திங்கள் தண்கயம் போலக்
கொளக் கொளக் குறையா கூழுடை வியனகர்"
(புறநானூறு)
அதாவது தைத் திங்களின் தண்மையான குளம்போல அள்ள அள்ளக் குறையாத அன்னம் நிறைந்த வீடுகளை உடைய பெரிய நகரங்களை உடையதாம் கிள்ளி வளவனின் நாடு.
குறுந்தொகை:
"பாரி பறம்பிற் பனிச்சுனைத் தெண்ணீர்
தைஇத் திங்கள் தண்ணிய தரினும்
வெய்ய உவர்க்கும் என்றனிற்"
(குறுந்தொகை)
அதாவது முன்பு, வேம்பின் பசுங்காயைத் தந்தாலும் பூந்தேனின் இனிய கட்டி இது என்று போற்றிய நீங்கள் இப்போது, தை மாதத்தின் குளிர்ந்து கிடக்கும் பாரியின் பறம்பு மலையிலுள்ள இனிய சுனை நீரைக் கொடுத்தாலும் வெம்மையாக இருக்கிறது. உவர்ப்பாக இருக்கிறது என்கின்றீர்! என்று குறைப்பட்டுக் கொள்கிறாள் ஒருத்தி!
நற்றிணைப் பாடல்:
தை நீராடும் இளம் பெண்களைப் பற்றி நற்றிணைப் பாடல் ஒன்று நல்ல கணவனைப் பெறவேண்டி தைத் திங்களில் குளிர்ந்த குளத்து நீரில் நீராடும் ஓர் இளம் பெண்ணை நமக்குக் காட்டுகிறது...!
"இழையணி ஆயமொடு தகுநாண் தடைஇ
தைஇத் திங்கள் தண்கயம் படியும்
பெருந்தோட் குறுமகள் அல்லது
மருந்து பிறிது இல்லை யான்உற்ற நோய்க்கே"
(நற்றிணை)
நாணம் மிக்க இளம் பெண்ணான அவள் தன் தோழிகளோடு கூடிச் சென்று தைத் திங்களில் குளிர்ந்த நீரால் நிரம்பிக் கிடக்கும் குளத்தில் நீராடி நோன்பிருக்கிறாள். அப்போது,
"தான் உற்ற காதல் நோய்க்கு அவளே மருந்து' எனக் கூறுகிறான் இளைஞன் ஒருவன்.
அம்பா ஆடல்:
மகளிர் ஆடல், "அம்பா ஆடல்' எனப் பரிபாடலில் குறிப்பிடப்படுகிறது.
திருமணம் ஆகாத இளம் பெண்கள் தம் தாயர் அருகிருக்க நீராடுவதால், "அம்பா ஆடல்' என்று அழைக்கப்பட்டதாக விளக்கம் கூறுவர். "அம்பா' என்பதற்கு "அன்னை' என்று பொருள்.
சில்லென்று பனி பெய்கின்ற தை மாதத்து வைகறைப் பொழுதில் இளம் பெண்கள் வைகை ஆற்றில் நீராடி, அதன் கரையோர மணற் பரப்பில் அந்தணர்களால் எழுப்பப்பட்ட வேள்வித் தீயின் வெப்பத்தில் தம் ஈர ஆடைகளை உலர்த்திக் கொள்ளுகின்றனர்.
"வெம்பாதாக வியல்நில வரைப்பென
அம்பா ஆடலின் ஆய்தொடிக் கன்னியர்
முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப்
பனிப் புலர்பு ஆடிப் பருமண லருவியின்
ஊதை யூர்தர உறைசிறை வேதியர்
நெறிநிமிர் நுடங்கழல் பேணிய சிறப்பின்
தையல் மகளிர் ஈரணி புலர்த்தர"
(பரிபாடல்)
கலித்தொகை:
உள்ளத்தில் உள்ள நோக்கம் நிறைவேறும் பொருட்டு துன்பங்களைப் பொறுத்துக் கொண்டு சில ஒழுக்கம், கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பது நோன்பு எனப்படும்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள்.
திருமணத்திற்குக் காத்திருக்கும் கன்னிப் பெண்களுக்கும் அப்படித் தானே.
“இவளோ என்னைப் பார்க்கவே மாட்டேன் என்கிறாள். ஆனால், வருடம் தோறும், தையில் நீராடி, நல்ல கணவன் வேண்டும் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறாள். என்னைக் காணாது இருக்கையில், தை நீராடி தவம் இருந்து என்ன பயன்?” என்று ரசனையாகப் பேசுகிறான்.
“நீ தையில் நீராடிய தவம் தலைப் படுவாயோ?”
(கலித்தொகை)
Comments
Post a Comment
Your feedback