அக்டோபர் 20 : 1922
வானொலிக்காகவே எழுதப்பட்ட முதல் நகைச்சுவை நிகழ்ச்சி பி.பி.சி யில் ஒலிபரப்பப்பட்டது.
அக்டோபர் 20 : 1952
தனி ஆந்திர மாநிலம் அமைக்கக் கோரி பொட்டி ஸ்ரீராமுலு சென்னையில் உண்ணாவிரதம் தொடங்கினார்.
அக்டோபர் 20 : 1938
தன்னந்தனியாக உலகை விமானத்தில் சுற்றி வந்து சாதனை படைத்த முதல் பெண்மணி லாஸ்காட் லண்டனில் காலமானார்.
அக்டோபர் 20 : 2008
திரைப்பட இயக்குநர் ஸ்ரீதர் மறைந்த நாள்.
கல்யாணப் பரிசு,நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை நினைவெல்லாம் நித்யா,தென்றலே என்னைத் தொடு உள்ளிட்ட பல வெற்றி படங்களின் இயக்குநர் இவர்.
ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை திரைப்படம் தான் ஜெயலலிதாவின் முதல் தமிழ்ப்படமாகும். இந்தப் படத்தின் பெயரோடு சேர்த்து அறியப்படும் வெண்ணிற ஆடை நிர்மலா, வெண்ணிற ஆடை மூர்த்தி போன்ற பெயர்கள் இவரது படத்தின் புகழுக்குச் சான்றுகள்.
அக்டோபர் 20 : 2014
ராஜம் கிருஷ்ணன் மறைந்த நாள்.
இன்றைக்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான கதைகள், பல்வேறு புத்தகங்களில் வெளியாகின்றன. ஒரு நிமிடத்தில் நினைத்து ஐந்து நிமிடத்தில் எழுதி முடித்த கதைகளெல்லாம் இன்று சர்வ சாதாரணம். அப்படி மேம்போக்காக எழுதப்படுகின்ற கதைகளுக்கு மத்தியில் கதை எழுதுவது என்றால் அந்தச் சூழலை வாழ்ந்து பார்த்து மட்டுமே எழுதுவது என்பதை ஒரு கொள்கையாக வைத்திருந்தவர் ராஜம் கிருஷ்ணன்.
'குறிஞ்சித் தேன்' என்பது இவர் எழுதிய ஒரு புகழ் பெற்ற நாவல்.
அந்த நாவல் எழுத நீலகிரி மலைவாழ் மக்களுடன் தங்கி சில காலம் அவர்களோடேயே வாழ்ந்தார்.
சம்பல் பள்ளத்தாக்கு கொள்ளையர்கள் சரணடைந்த நிகழ்வை வைத்து 'முள்ளும் மலர்ந்தது' என்று ஒரு நாவல் எழுதினார். அதற்காக சரணடைந்து ஜெயிலில் உள்ள கொள்ளையன் ஒருவனின் குடும்பத்தைப் பார்த்து வரக் கிளம்பினார். அழைத்துச் சென்றது சரணடைந்து வெளியே வந்திருந்த அவதார் சிங் என்ற இன்னொரு கொள்ளையன். துணைக்கு கணவர் தவிர யாரும் இல்லாமல் நீண்ட தூரம் நடந்து கொடூரமான கொள்ளையர்களுக்கு மத்தியில் தங்கி இருந்த வித்தியாசமான அனுபவத்துக்குச் சொந்தக்காரர் அவர்.
கோவா மக்களின் சுதந்திரப் போராட்டத்தை வைத்து எழுதப்பட்ட 'வளைக்கரம்'...
தூத்துக்குடி கடற்கரை மீனவ மக்கள் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட 'அலை வாய்க் கரையில்'...
தஞ்சாவூர் நெல் விவசாயக் கூலிகளின் வாழ்க்கையைச் சொல்கின்ற 'சேற்றில் மனிதர்கள்'...
மதுரை உசிலம்பட்டி பெண் சிசுக்கொலையை மையமாக வைத்து எழுதப்பட்ட 'மண்ணகத்துப் பூந்துளிகள்'...
உப்பள மக்களின் வாழ்க்கையைப் பேசும் 'கரிப்பு மணிகள்'...
சிவகாசி பட்டாசு ஆலைக் குழந்தைத் தொழிலாளர்களின் சோகத்தைச் சொல்லும் 'கூட்டுக் குஞ்சுகள்'...
எல்லாம் இப்படி அந்தந்தச் சூழலில் தானே தங்கியிருந்து கதாபாத்திரமாகவே வாழ்ந்து எழுதப்பட்டவை தான்.
50க்கும் மேற்பட்ட நாவல்கள்
500 எண்ணிக்கையில் சிறுகதைகள்
20 வானொலி நாடகங்கள்
3 வாழ்க்கை வரலாற்றுக் கதைகள்
எல்லாம் இவர் படைப்பில் வந்தவை.
திருச்சி மாவட்டம் முசிறியில் 1925 ஆம் ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி பிறந்த அவர் 2014 அக்டோபர் 20ஆம் தேதி மறைந்தார்.
Comments
Post a Comment
Your feedback