வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருளும் பெற்றோர்க்கு பிள்ளைகளைப் பற்றி ஒரு பிணைப்பை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கும். அந்தப் பொருள் எந்த நாளில் அல்லது எந்த
விழாவில் வாங்கப்பட்டது என்பதற்கு ஒரு இனிய கதை மனதிற்குள் இருக்கும்.
வாங்கித் தந்த ஒரு பொருள் பழையதான பின்னும் அதை
அப்புறப்படுத்தாமல் பத்திரமாக வைத்திருப்பதற்குக் காரணம் பொருள்களோடு பிணைந்துள்ள
அந்த அழகிய நினைவுகளை இழக்க விரும்பாததே. அந்த நினைவுகள் தரும் சுகம் ஈடுஇணை
இல்லாதது. குழந்தைகள் வீட்டில் இல்லாத நாட்கள் அந்தப் பொருட்களோடு ஒரு
நெருக்கத்தைத் தரும்.
அவர்கள் இருந்த அறை , அவர்கள் உபயோகப் படுத்திய பொருட்கள் இப்படி எல்லாம் அவர்களை நினைவு படுத்திக்கொண்டே இருக்கும்.
"இது அவன் குழந்தையாக இருந்தப்ப ஓட்டிக்
கொண்டிருந்த சைக்கிள்"
" இது அவ ஆசை ஆசையா வாங்கின உண்டியல்"
இப்படி வீட்டில் ஒவ்வொன்றும் பிள்ளைகளை
நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.
இந்த உணர்ச்சிகளை சங்கப்பாடலான ஐங்குறுநூறில், ஓதலாந்தையார் படம் பிடித்துக் காட்டுகிறார்.
மகள்,
திருமணம் ஆகி, கணவனோடு சென்று விட்டாள்.
இங்கே வீட்டில் தாயின் மனம் நினைத்துப்பார்க்கிறது.
"இது என் மகள் வைத்து விளையாடிய
பொம்மை. இது என் மகள் கொஞ்சிய கிளி. இப்படி எதைப் பார்த்தாலும் அவள் ஞாபகமே
வருகிறது. எப்படித்தான் என்னை விட்டுச் சென்றாளோ "
பாடல்
இது என் பாவை பாவை, இது என்
அலமரு நோக்கின் நலம்வரு சுடர்
நுதல்
பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை
காண் தொறும் காண் தொறும் கலங்க,
நீங்கினளோ என் பூங்கணோளே.
(ஐங்குறுநூறு)
பொருள்
இது என் பாவை பாவை - இது என் மகள்
விளையாடிய பொம்மை
இது என் - இது என்
அலமரு நோக்கின் -அலை பாயும் கண்களை உடைய
நலம்வரு சுடர் நுதல் -நல்ல சுடர் விடும்
நெற்றியைக் கொண்ட
பைங்கிளி எடுத்த பைங்கிளி - கிளி போன்ற
என் மகள் விளையாடிய பச்சைக் கிளி
என்றிவை - என்று இவை
காண் தொறும் காண் தொறும் - பார்க்கப் பார்க்க
கலங்க - என் மனம் கலங்க
நீங்கினளோ - என்னை விட்டுச் சென்று விட்டாள்
என் பூங்கணோளே. - பூ போன்ற அழகிய கண்களை
உடைய என் மகள்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதிய
பாடல்.
ஆனாலும், அந்த உணர்ச்சி இன்றும் அப்படியே இருக்கிறது.
ஆம்..
ReplyDeleteநிதர்சன உண்மை... திருமணத்திற்கு பின்
மகளைப் பிரிந்த
" தாய் "
தன் மகள் விளையாடிய
அந்த பூங்கொத்து
பொம்மையைப் பார்த்து
எழுதிய கவிதை
இதோ.....
" மலர் எங்கோ
மணம் வீசிக்
கொண்டிருந்தாலும்
மனம் மட்டும்
நறுமணத்தின்
நிறைவாய்..!!! .
அந்த தாய்க்கு வாழ்த்துக்கள்.!