வணிகன் ஒருவன் வாணிபம் பற்றிக் கூறு என்றான்.
அவன் தொடர்ந்தான்.
வள்ளல் தன்மை மிகுந்த இந்த மண் உங்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது.
அதை அள்ளி எடுத்து அடுத்தவர்களுக்குக் கொடுப்பதால் அது அபரிமிதமாவதோடு ஆன்மாவும் மகிழ்கிறது.
அன்பற்ற பேரம் சிலரைப் பேராசைக்கும் பலரைப் பசியின் எல்லைக்கும் தள்ளிவிடும்.
மீன் பிடிப்பவர்களும் பழரசம் பிழிபவர்களும் துணி நெய்பவர்களும் வாசனை வியாபாரிகளும் சந்தையில் கூடுகிற போது உங்கள் தராசுகளில் அந்த நியாய தேவன் குடியிருக்கட்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.
வார்த்தைகளை வைத்து வாணிபம் செய்பவர்களை அங்கே அனுமதிக்காதீர்கள்.
அவர்களிடம் கூறுங்கள்;
நிலத்திற்கும் கடலுக்கும் எங்கள் மீது உள்ள கருணை போலவே உங்கள் மீதும் உள்ளது!
அது எங்களோடு வந்து பாடுபட்டால் உனக்கும் வேண்டியதை அள்ளித்தரும்.
சந்தைக்கு வருகின்ற பாடகர்களும் நடனக்காரர்களைப் போல அங்குமிங்கும் அலைபவர்களும் கனவுகளில் கூடு கட்டி நனவுகளில் நம்மை மகிழ்ச்சியடையச் செய்கிறார்கள்.
அவர்களும் கொடுத்துப் பெறட்டும்.
சந்தையை விட்டு அகன்று செல்கின்ற போது யாரும் வெறுமனே இல்லம் திரும்பாது பார்த்துக் கொள்ளுங்கள்.
கடைசி மனிதனின் இறுதித் தேவையும் தீர்ந்து போகாத வரை இந்த உலகத்தின் உன்னதமான சக்தி அமைதியில் உறங்காது என்பதை அறிந்து வைத்திருங்கள்.
Comments
Post a Comment
Your feedback