ஒருவருக்கு நல்ல பேச்சுத்திறமை இருந்தால், அவர் பொய்யைக்கூட நிஜம்போல் சொல்லிவிடுவார்.
இன்னொருவர், உண்மைதான் சொல்கிறார்,
ஆனால் அவருக்குச் சரியாகப் பேசத் தெரியவில்லை, எனவே அது நமக்குப் பொய்போலத் தோன்றுகிறது.
ஆக,
ஒருவர் சொல்வது உண்மையா பொய்யா என்று வெறும் பேச்சைமட்டும் வைத்து முடிவு
செய்வது சரியல்ல.
உங்கள் முன்னால் ஒரு பிரச்னை வந்து
நிற்கும்போது, இருதரப்பினருடைய
வாதத்தையும் தலா ஏழு முறை தெளிவாகக் கேளுங்கள்.
அதன்பிறகு,
அவர்கள் இருவரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு தீர்ப்பைச் சொல்லுங்கள்.
அப்படிச்
செய்யாமல் மேலோட்டமான சொற்களில் மயங்கி,
அவசரப்பட்டு ஒரு தீர்ப்பைச் சொல்லிவிட்டால்,
நியாயம் தவறிவிடும்.
வழக்கில் தோற்றுப்போனவர் வருந்தி அழுவார்.
அந்தக் கண்ணீர்,
தப்பான தீர்ப்புச் சொன்னவரைச் சும்மா விடாது.
அவருடைய சந்ததியையே அறுக்கும் வாள் ஆகிவிடும்.
மூன்று தேவர்களும் ஒன்றாகச் சேர்ந்தால்கூட அவர்களைக்
காப்பாற்றமுடியாது.
பொய்யுடை ஒருவன் சொல்வன்மையினால்
மெய்போலும்மே; மெய்போலும்மே.
மெய்யுடை ஒருவன் சொலமாட்டாமையினால்
பொய்போலும்மே; பொய்போலும்மே
அதனால்
இருவர் சொல்லையும் எழுதரம் கேட்டே
இருவரும் பொருந்த உரையார் ஆயின்
மனுமுறை நெறியின் வழக்கு இழந்தவர்தாம்
மனம் உற மருகி நின்று அழுத கண்ணீர்
முறை உறத் தேவர் மூவர் காக்கினும்
வழிவழி ஈர்வது ஓர் வாளாகும்மே.
வெற்றிவேற்கை - அதிவீரராம பாண்டியர்
Comments
Post a Comment
Your feedback