96 சிற்றிலக்கிய வகைகளில் ஒன்று பிள்ளைத்தமிழ். பாடுவதற்கு தேர்ந்தெடுத்துக் கொண்ட தெய்வத்தையோ அரசனையோ வள்ளலையோ மக்களில் சிறந்தவர்களையோ குழந்தையாக நினைத்து பாடப்படுவது பிள்ளைத்தமிழ்.
குழந்தையின் வயது 3 மாதம் முதல் 21 மாதங்கள் வரை பத்துப் பருவங்களாகப் பிரித்துக் கொண்டு இது பாடப்படும்.
1 ஆம் பருவம் -காப்புப் பருவம்
இது குழந்தைக்கு வயது 2 மாதம் இருக்கும் போது பாடப்படும். தன்னுடைய இஷ்ட தெய்வங்களை எல்லாம் இந்தக்குழந்தையை காக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வது காப்புப் பருவம்.
2 ஆம் பருவம் -செங்கீரைப் பருவம்
குழந்தைக்கு 5 மாதம் ஆகும்போது பாடப்படுவது செங்கீரைப் பருவம்.
சிறிய சொற்களை ஒலிக் குறிப்பால் குழந்தை சொல்ல முடியும் போது ஆடிக்கொண்டே அந்தச் சொற்களைச் சொல்லும் வயது இது.
3 ஆம் பருவம்- தாலப்பருவம்
தால் என்றால் நாக்கு. குழந்தையைத் தூங்க வைக்க தாயார் பாடும் தாலாட்டுப் பாடலை குழந்தை கேட்கின்ற பருவம் தாலப்பருவம்.
இந்தப் பருவத்தில் குழந்தையினுடைய வயது ஏழு மாதமாக இருக்கும்.
4 ஆம் பருவம்- சப்பாணிப் பருவம்
இரண்டு கைகளையும் சேர்த்து தட்டும் போது உண்டாகின்ற ஒலி சப். பாணி என்றால் கை என்று பொருள். இந்தப் பருவத்தில் குழந்தைக்கு 9 மாதம் ஆகியிருக்கும்.
சப்பாணி சப்பாணி தட்டுவானாம் தயிருஞ் சோறு உண்பானாம்...
என்று பாடுவதைக் கேள்விப்பட்டிருப்போம்.
5 ஆம் பருவம்- முத்தப் பருவம்
மொத்தமுள்ள பத்துப் பருவங்களில் சிறந்த பருவமாக இது கருதப்படுகிறது. குழந்தையை முத்தம் தருமாறு தாயும் தந்தையும் வேண்டும் பருவம் இது. இது குழந்தையின் பதினோராவது மாதத்தில் நடைபெறும் பருவம்.
6 ஆம் பருவம்- வாரானைப் பருவம்
தத்தித்தத்தி தளிர் நடை இட்டு வருகின்ற குழந்தையை அதனுடைய இயல்புகளை எல்லாம் சொல்லி அருகில் வருமாறு அழைக்கின்ற பருவம் இது. இந்தப் பருவத்தின் போது குழந்தைக்கு 13 மாதம் நடந்து கொண்டிருக்கும் .
7 ஆம் பருவம்- அம்புலிப் பருவம்
குழந்தைக்கு நிலாவை காட்டி குழந்தையோடு வருமாறு விளையாட வருமாறு நிலாவை அழைக்கின்ற பருவம் அம்புலிப் பருவம் . இந்தப் பருவத்தில் குழந்தை பதினைந்தாம் மாதத்தில் இருக்கும்.
8 ஆம் பருவம்- சிற்றில் பருவம்
பிள்ளைத்தமிழில் மற்ற பருவங்கள் எல்லாம் பெற்றோரும் மற்றோரும் பாடுவது. குழந்தை பாடுமாறு அமைவது சிற்றில் பருவம். இந்தப் பருவத்தில் குழந்தை பதினேழாம் மாதத்தில் இருக்கும்.
ஒரு பெண் குழந்தை தான் விளையாட சிறிய வீட்டை மணல் வீட்டை கட்டிக் கொண்டிருக்கிறது. அக்குழந்தையின் அண்ணன் அவனோடு விளையாட வருமாறு தன் தங்கையை அழைக்கிறான். தங்கை செல்லவில்லை. விளையாட வராத கோபத்தில் தங்கை கட்டிய மணல் வீட்டைக் கலைத்துவிட முற்படுகிறான் அண்ணன். அப்போது வீட்டைச் சிதைக்காதே என்ற பொருளில் தங்கை பாடுவது இந்தப் பருவம்.
9ஆம் பருவம்-சிறுபறைப் பருவம்
குழந்தையிடம் சத்தம் எழுப்புகின்ற சிறிய பறை முதலிய கருவிகளைக் கொடுத்து சத்தமிடும் போது கேட்டு மகிழ்வதாக பெற்றோர் பாடுவது சிறுபறைப் பருவம்.
குழந்தையின் பத்தொன்பதாவது மாதத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும்.
10 ஆம் பருவம்- சிறுதேர்ப் பருவம்
மரத்தாலான சிறிய தேரினை உருட்டி விளையாடுகின்ற பருவம் இது. இப்போது தேருக்குப் பதிலாக பொம்மை காரை வாங்கிக் கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.
இது குழந்தையின் இருபத்தி ஒன்றாம் மாதத்தில் நிகழும் நிகழ்ச்சியாகும்.
இதனால்
ReplyDeleteதான்
என்னவோ???!!!
""தமிழும்".
நாளொரு மேனி
பொழுதொரு
வண்ணமாய்
வளர்ந்து
கொண்டே
வருகிறதோ..!!
சிற்றில் பருவத்தில் மாதம் குறிப்பிடப்படவில்லை.எந்த மாதத்தில் பாடப்படுவது என்று குறிப்பிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்
ReplyDeleteசிற்றில் பருவத்தில் குழந்தையின் வயது குறிப்பிடப்படாததைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது
ReplyDeleteமகிழ்ச்சி..!
ReplyDelete