உறவினர்வீடுகளுக்குச் செல்லும்போது வெறுங்கையோடு போகவேண்டாம் என ஏதாவது திண் பண்டங்கள் அல்லது குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருள்களை வாங்கிச் செல்வது வழக்கம். திருமணங்களுக்கு செல்லும்போது ஓரளவு விலைமதிப்புள்ள பொருட்களை வாங்கிச் செல்வது வழக்கம். அத்தகைய பொருட்களை அன்பளிப்பு எனக் கூறுகிறோம். ஆனால் தெரிந்தவர்களைப் பார்க்க வெறுங்கையோடு போக வேண்டாம் என ஏதாவது கையோடு எடுத்துச் செல்வதற்கு பெயர் கையுறை எனக் கூறப்படும். இராமனைப் பார்க்க குகன் கையுறைப் பொருட்களாக தேனும் மீனும் கொண்டு சென்றதை அறிந்திருப்போம். சீடை, முறுக்கு, கச்சாயம்(அதிரசம்) போன்றவையெல்லாம் கையுறைப் பொருட்களாக இருந்ததொரு காலம். இப்போது எந்த உறவினர் வீட்டுக்குச் செல்கிறோமோ அந்த வீட்டிற்குப் பக்கத்தில் உள்ள ஒரு கடையில் ஏதோ இரண்டு பாக்கெட் வாங்கி செல்வது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். கையுறைப் பொருள்கள் ஒவ்வொருவருடைய சிறப்பை எடுத்துக் கூறுவதாக இருக்கும். அத்தை வந்தால் பாசிப்பருப்பு மாவு , பெரியம்மா கொண்டு வரும் அரிசி முறுக்கு என பொருள்கள் வழியாக பிரியமும் சென்று சேரும். கோயம்புத்தூரில் இருக்கக்கூடிய வீட்டிற்கு கிராமத்திலிருந்து கோலப் பொடியை இடித்து எடுத்து செல்வது கூட கையுறையாக இருந்தது ஒரு காலம். பயணம் திட்டமிடப்பட்டவுடன் உறவினர் வீட்டிலுள்ள ஒவ்வொருவருக்கும், யாருக்கு என்ன பிடிக்கும் என பார்த்துப் பார்த்து வீட்டிலேயே ஏதாவது செய்து பிரியத்தோடு கொடுத்து உரிமையோடும் உண்மையோடும் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்ட நாட்கள் இன்றைய தலைமுறைக்கு வெறும் கதையாகத்தான் இருக்கும்.
வாயுறை என்பது என்ன?
நாம் உணவு உண்ணும் போது நம்மைச் சுற்றி இருப்பவர்கள் யாரேனும் பசியோடு இருக்கிறார்களா என நினைத்துப் பார்ப்பது கடவுளை வழிபடுவதற்கான அடிப்படை என திருமூலர் கூறுவார். பெரிதாக எதுவும் கொடுக்க முடியாவிட்டாலும் ஒரு கட்டுப்புல், ஒரு வாய் சோறு, ஒரு கையளவு தானியம் என பசு மாட்டுக்கோ, சக மனிதனுக்கோ, சிட்டுக்குருவிக்கோ வாஞ்சையோடு கொடுப்பதற்குப் பெயர் வாயுறை.
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.
என்பது திருமந்திரப் பாடல்.
கோயிலுக்குப் போகும்போது விலை உயர்ந்த மாலை வேண்டாம். உன் கைக்கெட்டும் தூரத்தில் இருக்கின்ற பச்சிலையைப் பறித்துக் கொண்டு போ போதும். பசியோடு இருக்கிற பசுமாட்டிற்கு கையளவேனும் புல் கொடு போதும். உணவு உண்ணும்போது உணவில்லாமல் பட்டினி கிடக்கின்ற சக மனிதனுக்கு ஒரு கை அளவு சோறு போடு போதும். உன்னால் இதை எதையுமே செய்ய முடியவில்லை என்றால் மற்றவரிடம் பேசும்போது அவர்களுக்கு ஆறுதலாகவாவது பேசு. கடவுளை வழிபட்ட பலன் அனைத்தும் உனக்குக் கிடைக்கும். இது எதையும் செய்யாமல் வெறுமனே கோவிலுக்குப் போவது என்பது ஆத்மார்த்தமானது அல்ல என்பது திருமந்திரம் காட்டும் பாதை.
Comments
Post a Comment
Your feedback