பாசாங்கில்லாத பதிலுக்கு கண்ணதாசனுக்கு நிகர் கண்ணதாசன் தான். கவிதை பற்றிய கேள்விக்கு கண்ணதாசன் ஒரு முறை சொன்ன பதில் இது.
என் குடும்பம் ரொம்ப பெருசு. எல்லாரையும் காப்பாற்ற வேண்டுமே என்ற பயத்தில் இருக்கும் போது பாட்டு தான் எனக்கு வாழ்க்கை தந்தது.
அது போலவே ஒரு பாசாங்கில்லாத பதில் இது.
கவிஞர் வாலியின் தலைமையில் புதுவையில் ஒரு கவியரங்கம் நடைபெற்றது.
கவியரங்கம் முடிந்தபின் தமிழ்ப் புலவர் ஒருவர் வாலியைப் பார்த்து,
"ஐயா இவ்வளவு அற்புதமாகக் கவிதையைப் படைக்கும் தாங்கள், திரைப்படங்களில் வர்த்தக நோக்கோடு தரமில்லாத பாடல்களைத் தருகிறீர்களே, இது நியாயமா ? என்றார்.
அவருக்கு கவிஞர் வாலி கவிதையாகவே உரைத்த பதில்.
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குத்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
எந்தப் பா சினிமாவில்
எடுபடுமோ விலைபெறுமோ
அந்தப் பா எழுதுகிறேன்;
எந் தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்து என்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா!
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்கு தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி.
Comments
Post a Comment
Your feedback