- கலை என்ற ஒன்று இல்லாமல் இருந்திருந்தால் மனித சமூகம் விரக்தியும் வெறுப்பும் கலந்து ஏனோதானோ என ஒரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்திருக்கும்.
இன்பத்தை அடிப்படையாகக்கொண்டு கலைகள் முதன்முதலில் தோன்றியிருக்க வேண்டும்.
காட்டு விலங்குகளும் பறவைகளும் எழுப்பிய ஒலிகளைஆதி மனிதன் தானும் செய்து காட்டினான். அந்த ஒலிகளை ஏற்ற இறக்கங்களோடு சீராக்கிக் கொண்டான். தன் இன்ப துன்பங்களை அந்த ஒலிகளில் ஏற்றிக் காட்டினான். இதுவே பின்னாளில் இசைக் கலையாகப் பிறப்பதற்கு விதையாகி இருக்க வேண்டும்.
கலகல என்னும் ஒலிக்குறிப்பு ஒலிப் பரவலைக் குறிக்கப் பயன்படுகின்ற ஒரு சொல். அதை தமிழில் இரட்டைக்கிளவி என்பார்கள். (இரட்டைக் கிழவி அல்ல).
கலகலவெனப் பேசினாள். சலசலவென நீர் ஓடியது. இவை போன்றவை பேச்சு மொழியிலிருந்து வந்த ஒலிக் குறிப்புகள். அதாவது நம் காட்டுமிராண்டிக் கால முன்னோர்கள் கற்றுத் தந்தவை.
சமஸ்கிருத மொழியில் Ghala என்ற சொல் இருக்கிறது. கிபி 5ஆம் நூற்றாண்டில் காளிதாசர் பயன்படுத்திய சமஸ்கிருத சொற்களான கலாவதி, கல்பனா போன்றவை கலை என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து வந்தவை என டர்னர் (R.L. Turner)போன்ற மொழியியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.
வித்யா என்ற சொல் காளிதாசன் காலம் வரை கலா என்று தான் குறிப்பிடப்பட்டது.
'கற்கப்படுவன அனைத்தும் கலையே' என்பது சேந்தன் திவாகர நிகண்டு கூறும் பொருள்.
கலை எப்படி வந்தது என்ற கேள்விக்கு ஒரு திரைப்படப் பாடல் விடை கூறுகிறது. 1964 ல் வந்த தொழிலாளி என்ற எம்ஜிஆர் படத்தில் கேவி மகாதேவன் இசையில் பி சுசிலா அந்த பாட்டைப் பாடியிருப்பார். அந்தப் பாடலின் ஆசிரியர் கூத்தம்பூண்டி சுந்தரம்.
அந்தப் பாடல் ,
கலை வந்த விதம் கேளு கண்ணே
உடல் கட்டோடு அழகாகக் கூத்தாடும் பெண்ணே
காற்றினிலே பிறந்து ஒலியானது -அது
காட்டுப் புல்லில் நுழைந்து இசையானது
மாட்டிடையன் கையில் குழலானது
குழந்தை வாயினிலே நுழைந்து மொழியானது.
உள்ளத் துடிப்பில் தாளம் உருவானது
உயிரின் உணர்ச்சியில் சுருதி லயமானது
தெள்ளு தமிழ்க் குழந்தை எழிலானது அதன் தித்தித்தை தித்தித்தை நடை சதிராடுது.
Comments
Post a Comment
Your feedback