என்.ராமதுரை
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் பரவலாக மழை இருக்கலாம் என்று டிவி அல்லது ரேடியோவில் வானிலை அறிவிப்பின் போது தெரிவிப்பார்கள்.மழை சீசனின் போது இவ்வித அறிவிப்பைக் கேட்கலாம்.
அதென்ன காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்?

தரையிலிருந்து தொடங்கி வானில் பல கிலோ மீட்டர் உயரம் வரை காற்று வியாபித்துள்ளது.காற்றுக்கு எடை உண்டு. ஆகவே மேலிருந்து கீழ் வரை உள்ள காற்று நம்மை அழுத்துகிறது. எந்த ஒருவரையும் காற்றானது கடல் மட்டத்தில சதுர செண்டி மீட்டருக்கு ஒரு கிலோ வீதம் அழுத்துகிறது. ஒரு புறத்திலிருந்து மட்டும் அழுத்தம் இருந்தால் நம்மால் உணர முடியும்.
ஓர் இடத்துக்கு மேலே இருக்கின்ற மொத்தக் காற்றின் அளவு இடத்துக்கு இடம் வித்தியாசப்படும். ஆகவே காற்றழுத்தமும் வித்தியாசப்படும். ஓரிடத்தில் காற்றழுத்தம் மிக அதிகமாக இருக்கும்.வேறிடத்தில் குறைவாக இருக்கும்.இதற்கு சூரியனும் காரணம்.
காற்றழுத்தம் அதிகமாக உள்ள இடத்திலிருந்து காற்றழுத்தம் குறைவாக உள்ள பகுதியை நோக்கி காற்று வீசும். காற்றுடன் மேகங்களும் நகரும். ஆகவே காற்றழுத்த நிலைமைகள் வானிலைத் துறையினருக்கு மிக் முக்கியம்.
வானிலைத் துறையினர் காற்றழுத்தத்தை அளக்க மேலே சொன்ன (சதுர செண்டிமீட்டருக்கு இவ்வளவு என்ற) கணக்கை பின்பற்றுவதில்லை.அவர்கள் கணக்குப்படி கடல் மட்டத்தில் சராசரி காற்றழுத்தம் 1013 மில்லி பார். காற்றழுத்தம் இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ஆங்காங்கு காற்றழுத்த அளவு மானி வைக்கப்படுகிறது.
காற்றழுத்தமானிகள் தெரிவிக்கின்ற எண்ணற்ற தகவல்களை வைத்து காற்றழுத்த நிலவரப் படம் தயாரிப்பார்கள். எந்தெந்த இடங்களில் ஒரே மாதிரி அழுத்தம் இருக்கிறதோ அந்த இடங்களை எல்லாம் சேர்த்து கோடு போடுவார்கள். இதற்கு Isobar என்று பெயர்.அருகே உள்ள படத்தில் L என்ற எழுத்து Low என்பதைக் குறிப்பதாகும்.H என்பது High என்பதைக் குறிப்பதாகும்.படத்தில் 1008 என்று குறிப்பிடப்பட்ட கோட்டைக் கவனிக்கவும்.அக் கோடு அமைந்துள்ள இடங்கள் அனைத்திலும் காற்றழுத்தம் அந்த அளவில் இருக்கிறது என்று அர்த்தம்.
ஓரிடத்தில் காற்றழுத்தம் குறைவாக இருக்க, அதைச் சுற்றியுள்ள இடங்களில் எல்லாம் அதிகமாக இருக்க நேரிடலாம். நட்ட நடுவே காற்றழுத்தம் குறைவாக உள்ள இடத்தை Low என்று குறிப்பிடுவார்கள். நேர் மாறாக நட்ட நடுவே ஓரிடத்தில் அதிகமாக இருந்தால் அது High.
மேடாக இருக்கும் இடத்திலிருந்து தண்ணீர் பள்ளமாக இருக்கின்ற இடத்தை நோக்கிப் பாய்வது போலவே காற்றும் செயல்படுகிறது. வடகிழக்குப் பருவ மழைக் காலத்தின் போது காற்று வட கிழக்கிலிருந்து வீசுகிறது. கடல் மீதாக வருகின்ற மேகங்கள் ஆவி வடிவிலான நீரைத் தாங்கியவையாக வருகின்றன். காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அந்த மேகங்களை ஈர்க்கும் போது மழை பொழிகிற்து.. ஆகவே கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் தோன்றினால் மழை பெய்யும் வாய்ப்பு தோன்றுகிறது.


Comments
Post a Comment
Your feedback