பெரும் வருத்தத்தில் இருப்பவர்களை பெரியவர்கள் "தவுதாயப்படாதே நாங்கெல்லாம் இருக்கோம்ல" என்று ஆறுதல் சொல்வது வழக்கம். தவுதாயம் என்பது தபுதாரம் என்ற சொல்லின் பேச்சு வழக்கு. தாரமிழந்த நிலையை தொல்காப்பியம் தபுதார நிலை எனக் கூறுகிறது. மனைவியை இழந்த கணவன் மறுமணம் செய்துகொள்ளாமல் வருத்தத்தோடு தனியே வாழும் நிலையே தபுதார நிலை என்று புறப்பொருள் வெண்பா மாலை விளக்கமாக விவரிக்கிறது. அவள் பச்சை நிறத்தில் வளையல் அணிந்துகொண்டிருப்பாள். அவள் கணவனோ வலிமை வாய்ந்தவன். எல்லோருக்கும் மேகம் போல வாரிக்கொடுக்கும் வள்ளல் அவன். எனக்கு அவன் தந்தை போன்றவன். இன்று அவள் இறந்துவிட்டாள். அவன் தனிமைத் துயரில் ஆழ்ந்த செய்தியைக் கேட்காமல் இருக்க என் காதுகள் செவிடாகப்போகட்டும் என ஒருவன் பாடுகிறான். பைந்தொடி மேலுலகம் எய்தப் படருழந்த மைந்தன் குரிசில் மழைவள்ளல்-எந்தை தபுதாரத் தாழ்ந்த தனிநிலைமை கேளாச் செவிடாய் ஒழிகென் செவி. தபு - இறத்தல் தாரம்- மனைவி மனைவி இறந்தபின் அவன் மறுமணம் செய்ய எண்ணவில்லை என்பதால் தான் "தபுதாரத் தாழ்ந்த தனிநிலைமை" எனக் கூறுகிறான்.