அது நேரடியாக நடந்த நிகழ்ச்சிகளைக் கொண்ட புத்தகம். ஆனால் ஒரு மர்ம நாவல் போல சுவாரஸ்யமானது. இத்தனைக்கும் அது ஒரு அறிவியல் கருவூலம்.
டார்வின் எழுதிய On the Origin of Species தான் அது.
டார்வின் தனது 22 வது வயதில் HMS Beagle (எஸ்.எம்.எஸ் பீகிள்) என்ற கப்பலில் தனது கடல் பயணத்தைத் துவக்கினார்.
இந்தக் கப்பல் இங்கிலாந்து மன்னரின் ஆணைப்படி தென்னமெரிக்காவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ள நிலவியல் மற்றும் இயற்கை வளங்களை ஆராய்ந்து வரும்படியாக அனுப்பப்பட்டது.
வெளிப்படையாக இயற்கையைத் தேடும் பயணம் போல தெரிந்தாலும் உள்ளூர இந்தப் பயணத்துக்கு வேறு நோக்கம் இருந்தது. அது பூமியில் எந்த இடங்களில் கனிமங்கள் கிடைக்கும், எந்த நாட்டின் துறைமுகம் எப்படி உள்ளது, எங்கே தங்கம் கிடைக்கிறது, எந்த நாட்டில் என்ன இயற்கை வளங்கள் இருக்கின்றன என்று கண்டுபிடிக்கும் பேராசையே அது. அதாவது நாடுபிடிக்கும் ஆசைக்குப் பின் உள்ள அரசியல் நோக்கமும் தான்.
இதற்காக பீகிள் கப்பல் மூலம் நீண்ட கடல் பயணத்தை மேற்கொண்டு கடல் வரைபடத்தை உருவாக்க முனைந்தது இங்கிலாந்து அரசு.
இந்தக் கப்பலின் முதல் பயணம் 1826 இல் துவங்கியது. அப்போது இதன் கேப்டனாக இருந்தவர் Captain Pringle Stokes. 380 டன் எடையுள்ள இந்தக் கப்பலில் ஆறு பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன.
புயல் மழையில் சிக்கி அவர்கள் பயணம் நீண்டு சென்றது. அவர்களின் கடல் பயணம் நினைத்தது போல எளிதாக இல்லை. பயணத்தின் நடுவே மனத் தடுமாற்றம் கொண்ட கேப்டன் தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டவர் Robert FitzRoy.
இவர்தான் டார்வினை தனது கப்பலின் இயற்கை ஆய்வாளராக பணியாற்றும்படி அழைத்து அதற்குத் தேவையான பண உதவிகளைச் செய்தவர்.
மூன்று ஆண்டுப் பயணம் எனத் திட்டமிடப்பட்டு முடிவில் ஐந்து ஆண்டு காலமாகிப் போனது.
ஒவ்வொரு தீவாகச் சென்று ஆராய்ந்து அதன் இயற்கை வளங்களைப் பற்றி நுட்பமாகப் பதிவு செய்தார் டார்வின்.
இந்தக் கப்பலில் மருத்துவர், நிலவியலாளர், கனிம ஆய்வாளர், வரைபட உதவியாளர், வானவியல் ஆய்வாளர் என்று 74 பேர் இருந்தார்கள்.
1831 ஆம் ஆண்டு டிசம்பர் இந்தக் கப்பல் புறப்பட்டது. ஐந்தாண்டு காலம் இது பிரேசில், அர்ஜென்டினா, பெரு, மாலத்தீவு, சிட்னி, தென் ஆப்பிரிக்கா என்று சுற்றியலைந்து இங்கிலாந்தை வந்தடைந்தது. இந்தப் பயணம் தான் டார்வினை உருவாக்கியதில் முக்கியப் பங்குவகித்திருக்கிறது. இந்தப் பயண அனுபவத்தை டார்வின் மிக விரிவான மூன்று தொகுதிகளாக எழுதியிருக்கிறார்.
தங்களது கப்பல் எந்தத் திசையில் சென்றது; எந்தத் தீவில் கரை இறங்கினார்கள்; அங்கு தீவுவாசிகள் எப்படி இருந்தார்கள்; எந்த நிறத்தில் மணல் இருந்தது; எந்த வடிவில் பாறைகள் இருந்தன; தண்ணீரில் என்ன உயிர்கள் வசித்தன; எத்தனை வகையான பறவைகள் வசித்தன; புதையுண்டு கிடந்த எலும்புகள் என்ன விதமானவை என்று அவர் ஆழ்ந்து அறிந்து குறிப்புகளை எழுதி இருக்கிறார்.
அதே நேரம் தீவுவாசிகள் அவர்களை நடத்திய விதம் மற்றும் அவர்களின் விசித்திரமான உணவு முறைகள் பற்றியும் எழுத்தாளர்களைப் போல சுவாரஸ்யமாக எழுதிப் போகிறார்.
கப்பலின் கேப்டனாக இருந்த பீச் முந்தைய கேப்டனைப் போலவே மனக்கோளாறு கொண்டவர். அது அவர்கள் குடும்பத்தின் பரம்பரை வியாதி. அவர் எப்போதும் யாராவது தன்னோடு கூடவே இருக்க வேண்டும் என்று நினைத்தார். கற்பனையான பயம், அச்சம், மனத் தடுமாற்றம் என்று மிகுந்த உணர்ச்சி வசப்பட்ட கேப்டனை டார்வின் அன்போடு நேசித்தார். அவர்களது நட்பு வலிமையாக இருந்தது.
ஒரு சில தீவுகளில் மாதக் கணக்கில் டார்வின் ஆய்வு செய்து வர அனுமதி தந்ததோடு தனது ஆய்விற்காக டார்வின் சேகரித்த உயிரினங்கள் கற்கள் எலும்பு படிவங்கள் மிருகங்கள் அத்தனையும் தனது கப்பலில் ஏற்றிக் கொள்ளவும் செய்தார்.
இப்படி ஆழமான தேடலுக்கு நடுவே ஒரு நிகழ்ச்சி நகைச்சுவையாகிப் போனதை டார்வின் தன்னுடைய புத்தகத்தில் எழுதி இருக்கிறார்.
என்ன அது?
கேப்டன் தீவிரமான மதப் பற்றுக் கொண்டிருந்தவர். ஆகவே அவர் உலகம் அறியாமல் வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகளை எப்படியாவது கிறிஸ்தவர்களாக மாற்றவேண்டும் என பெரும் முயற்சி எடுத்துக் கொண்டார்.
எனவே, கேப்டன் ஆதிவாசிகளை சந்தித்துப் பேசினார். அவர்களோடு நன்கு பழகி மூன்று ஆதிவாசிச் சிறுவர்களை விலைக்கு வாங்கி தன்னோடு நகருக்கு அழைத்துச் சென்று, ஆங்கிலம் கற்றுத்தந்து, உடைகளை மாற்றி, நாகரீகமான மனிதர்களைப் போல ஒரு மாற்றி மறுபடியும் அதே தீவுக்கு அழைத்துச் சென்றார்.
தீவைக் கண்டதும் அந்தச் சிறுவர்கள் தங்களது ஆடைகளை அவிழ்த்து எறிந்து விட்டு தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு மாறிப் போய்விட்டார்கள்.
ஐந்து வருடங்கள் அந்த சிறுவர்களை திருத்தியபோதும் அவர்கள் மனம் மாறவே இல்லை என்று கேப்டன் மிகவும் மனம் வருந்தி தன்னுடைய டைரியில் எழுதி இருக்கிறார்.
கேப்டனின் கடிதங்களும் குறிப்புகளும் தனிப் புத்தகமாக வெளியாகி இருக்கின்றன.
டார்வின் இந்த நாட்களில் கடல் வாழ் உயிரினங்கள் குறித்தும் நிலவியல் குறித்தும் அதிக ஈடுபாடு காட்டியிருக்கிறார்.
எந்தப் பணிக்கோ அனுப்பப்பட்டு அதில் கிடைத்த அனுபவங்கள் அவரை ஒரு விஞ்ஞானியாக மாற்றத்தொடங்கின.
டார்வின் தியரி என்று உலகப் புகழ் பெற்ற கண்டுபிடிப்பை உருவாக்கப் போகிறோம் என்பது அப்போது அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
டார்வின் பற்றிய சில செய்திகளை எஸ்.ராமகிருஷ்ணன் 'கலிலியோ மண்டியிடவில்லை' என்ற புத்தகத்தில் எழுதியிருக்கிறார்.
அதில் டார்வின் வாழ்க்கை ஒரு சினிமாவாக எடுக்கப்பதைக் கூறுகிறார்
Creation என்பது அந்தப் படத்தின் பெயர். You tube இல் கிடைக்கிறது.
Comments
Post a Comment
Your feedback