ஆகஸ்ட் 25, 1819
நீராவி இஞ்சினைக் கண்டுபிடித்து தொழில் புரட்சிக்கு முக்கியமான காரணமாக விளங்கிய ஜேம்ஸ் வாட் இங்கிலாந்தில் இன்று காலமானார்.
ஆகஸ்ட் 25, 1867
டைனமோவைக் கண்டுபிடித்த மைக்கேல் பாரடே இங்கிலாந்தில் இன்று காலமானார்.
ஆகஸ்ட் 25, 1906
வாரியார் ஸ்வாமிகள் என்று அழைக்கப்பட்ட திருமுருக கிருபானந்த வாரியார் பிறந்த தினம்.
எட்டுவயதிலேயே கவிபாடும் ஆற்றலைப் பெற்றவர். 12 வயதிலேயே ஆயிரக்கணக்கான பாடல்களை மனப்பாடமாகச் சொல்லும் திறன் பெற்றிருந்தார். சிறு வயதிலேயே சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் ஆற்றலுடையவராய் விளங்கினார். இவர் இயற்றியுள்ள வெண்பாக்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்.
முறையான சங்கீதப் பயிற்சி பெற்றிருந்தவர். வீணை வாசிப்பதில் சிறந்து விளங்கியவர். அதனால் இவர் தன்னுடைய ஆன்மீகச் சொற்பொழிவுகளில் இசையோடு நகைச்சுவை கலந்து எளிய தமிழில் பேசி எல்லோருடைய விருப்பத்துக்கும் உரியவராக விளங்கினார்.
1993 நவம்பர் 7 இல் இந்தியா வரும் போது விமானப் பயணத்திலேயே காலமானார். தன்னுடைய வாழ்க்கையின் கடைசி நிமிடம் வரை முருகனைப் பாடுவதையும் பேசுவதையும் ஓய்வறியாமல் செய்துவந்தவர்.
ஆகஸ்ட் 25, 1961
உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை போன்றவற்றையும் தன்னுடைய பேச்சுத்தமிழிலேயே கொண்டு வந்தவரான தமிழறிஞர் இரா.பி.சேதுப்பிள்ளை மறைந்த தினம்.
இவர் எழுதிய தமிழின்பம் என்ற நூலுக்கு 1955 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
ஆகஸ்ட் 25, 1970
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மறைந்த நாள்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் சென்னை மாகாணத்தில் இருந்த, திண்டிவனத்துக்கு அருகில் உள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார்.
சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார்.
இன்று ஹைதராபாத் நம் நாட்டுடன் இருப்பதற்கு முக்கியமான காரணம் இவர் தான்.
ஹைதராபாத்துக்கு விமானம் மூலம்பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்கள் கொண்டுவரப்படுகின்றன என படேலுக்கு ஒமந்தூரார் எச்சரிக்கை செய்தார். இவருடன் ஆலோசனை செய்த பிறகே உள்துறை அமைச்சர் சர்த்தர் வல்லபாய் படேல் ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். ஹைதராபாத் இந்தியாவோடு இணைக்கப்பட்டது.
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகிய பின் வடலூரில் விவசாயம் செய்துவந்தார்.
வடலூரிலுள்ள சன்மார்க்க நிலையம்இவர் அமைத்தது தான்.
வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், சான்றோர் இல்லம் எனப் பல நிறுவனங்களை அவர் தொடங்கினார்.
ஆகஸ்ட் 25, 1989
தமிழ் இமயம் என்று அழைக்கப்பட்ட டாக்டர் வ. சுப. மாணிக்கம் மறைந்த நாள்.
ஆகஸ்ட் 25, 2018
சிட்டுக் குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா என்னை விட்டுப்பிரிந்த கணவன் இன்னும் வீடு திரும்பலே ..
என்ற இனிய குழைவான குரலுக்குச் சொந்தக்காரரான பின்னணிப் பாடகி எம். எஸ். இராஜேஸ்வரி மறைந்த நாள்.
களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தைகள் பாடுவதாக வரும் அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற படலைப் பாடியதும் இவர் தான்.

Comments
Post a Comment
Your feedback