"முந்தியெல்லாம் அத்தனை குருவி இருக்கும் . இப்போது தான் எதையும் காணோம்". இப்படி யாராவது பேசுவதைக் கேட்டிருப்போம்.
குருவிகள் மட்டுமல்ல; பல பெரிய பெரிய விலங்குகள் கூட நேற்று இந்தப் பூமியில் இருந்தவை எல்லாம் இன்று எங்கோ மறைந்துவிட்டன.
முன்பு இருந்து தற்போது அந்த இடங்களில் இல்லாமல் மறைந்தவை பல. மனிதர்களுக்குள் வாழ்ந்து பழகிய அல்லது அவ்வப்போது மனிதர்களின் கண்ணில் பட்டவை தான் காணாமல் போய்விட்டனவா என்றால் நிச்சயமாக இல்லை. மனிதர்கள் புழங்காத காட்டுப்பகுதிகளில் யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் தன் போக்கில் வாழ்ந்து வந்த காட்டுயிர்கள் கூட உலகம் பூராவும் இப்படி மறைந்து வருகின்றன.
மனித மேலாதிக்கம், பேராசை என அதற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கின்றன.
அப்படி மறைந்துவிட்ட சில உயிர்களை அவை உலகத்தில் எங்காவது தப்பிப் பிழைத்து வாழ்கின்றனவா எனப் பார்த்து அதை எப்படியாவது அழியாமல் காப்பாற்றவேண்டும் என்ற முயற்சியும் ஒரு பக்கம் நடக்கிறது. அந்த முயற்சியை captive breeding என்று சொல்லுகிறார்கள். காப்பிட இனப்பெருக்கம் என்று தமிழில் சொல்லிக்கொள்ளலாம். நம்மால் மறைந்த உயிர்களை எப்படியாவது மறுபடி வாழவைத்துவிட வேண்டும் என்பது தான் இதன் நோக்கம்.
மனிதனுக்கு வெகுகாலம் முன்பாகவே இந்த மண்ணில் பிறந்து மண்ணுக்கு வளம் சேர்த்து தனக்கென ஒரு வாழ்விடம் அமைத்துக் கொண்டு அந்த எல்லைக்குள் வாழ்ந்து வந்தவை மெல்ல மெல்ல தன் வாழ்விடம் சுருங்க, ஒரு கட்டத்தில் வாழ்வதற்கு எந்த இடமும் இல்லாமல் போக பின் வாழ்க்கையை இழந்து அழிவுக்குத் தள்ளப்பட்டவை அவை.
உலகில் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருந்த சில உயிரினங்கள் காப்பிட இனப்பெருக்க முறையில் இப்படி முற்றாக அற்றுப்போவதிலிருந்து காப்பாற்றப்பட்டிருக்கின்றன. இதை (Noak's Ark method) நோக்ஸ் அர்க் முறை என்று சொல்லுவார்கள்.
இந்த Noak's Ark முறைக்கு ஒரு முக்கியமான கட்டுப்பாடு உண்டு. எந்த விலங்கை அழியாமல் காப்பாற்ற விரும்புகிறோமோ அது வாழ்ந்து பழக்கப்பட்ட அந்தச் சூழல் காப்பாற்றப்பட வேண்டும்.
உதாரணமாக மீனுக்குத் தண்ணீர் தான் வாழ்க்கை. ஆனால் எல்லா மீனையும் எல்லாத் தண்ணீரிலும் வாழ வைக்க முடியாது. ஆற்றிலும் குளத்திலும் வாழ்ந்து பழகிய மீன் கடலில் விடப்பட்டவுடன் இறந்துவிடும். கிணற்றுக்குள் வாழ்ந்து பழகிய மீன் ஆற்றின் ஓட்டத்தில் இரை தேடுவதே போராட்டமாகிவிடும்.
அதற்கான பூமி அல்லது வாழிடம் அழிக்கப்படாமல் எங்காவது கொஞ்சம் இருந்தால் மட்டுமே இந்த மண்ணில் வாழ்ந்து பழகிய ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.
உயிரை வாழ வைப்பது வேறு; உயிரோட்டமாக வைப்பது வேறு.
காடு கரைகளில் வாழ்ந்து பழகியவர்களை நகரத்தில் உள்ள பெரிய வீட்டுக்கு அழைத்து வந்து தங்க வைக்கும்போது அவர்களால் இயல்பாக இருக்க முடியாமல் ஒரு வெறுமை வந்துவிட இந்த வாழிட நெருக்கம் தான் காரணம்.
'மண்ணைக் கூட குழந்தை போல' நினைத்து வாழ்ந்த முன்னோர்கள் காலம் மறைய மறைய 'மண்ணுக்குப் பூச்சி மருந்து' என்று இயல்பாகிவிட்டது.
மண் தன் இயல்பை இழக்கும் போது மண்ணோடு தன்வயப்பட்டு வாழ்ந்து வந்த எல்லா உயிர்களும் மறைந்து போகின்றன. மண் அந்நியப்பட்டுப் போகும்போது மனம் உயிரோட்டத்தை இழந்து பாசாங்கு வாழ்க்கைக்குப் பழகிக் கொள்கிறது.
பாசாங்கு வாழ்க்கையில் இழந்ததை உயிர்ப்பிக்க முடியாது. ஏனென்றால் வாழ்ந்து பழகிய பூமி மிஞ்சியிருந்தால் தானே Noak's Ark எல்லாம் சாத்தியம்.
Comments
Post a Comment
Your feedback