மார்ச் 24 1766
இந்தியாவில் அஞ்சல் முறை ஆரம்பிக்கப்பட்டது.
மார்ச் 24 1882
காச நோயை உண்டாக்கும் மைக்கோ பாக்டீரியம் என்னும் கிருமியை ராபர்ட் கோச் எனும் ஜெர்மனி விஞ்ஞானி இன்று கண்டுபிடித்தார்.
மார்ச் 24 1905
தமிழ் இலக்கிய உலகில் மணிக்கொடி என்ற பெயரைப் பதிய வைத்த பி எஸ் ராமையா இன்று வத்தலக்குண்டு ஊரில் பிறந்தார்.
எழுத்துலகில் புரட்சியையும் புதுமையையும் உருவாக்கிய பத்திரிக்கை மணிக்கொடி. இதை ஆரம்பித்தவர் கே சீனிவாசன். இவர் விடுதலைப் போராட்ட வீரர். இவர் தொடங்கிய இந்தப் பத்திரிக்கையில் தமிழ்நாட்டின் தலைசிறந்த எழுத்தாளர்கள் எல்லாம் பணியாற்றினார்கள். அந்தப் பட்டியலில் மூத்த எழுத்தாளர் பிஎஸ் ராமையாவும் ஒருவர். இப் பத்திரிகையின் தொடக்க கால ஆசிரியராக இருந்த வ.ரா இலங்கை வீரகேசரி பத்திரிக்கைப் பணிக்குச் சென்றதும் ராமையா மணிக் கொடியின் ஆசிரியர் ஆனார்.
புது எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் பத்திரிக்கையை நடத்தினார். அந்தக் காலத்தில் தரமான சிறுகதைகளை இலக்கிய நயத்தோடு வெளியிட்ட பத்திரிக்கை எது என்று கேட்டால் மணிக்கொடி என்று தயங்காமல் சொல்வார்கள். ஐந்தாவது வரையே படித்தவர் இவர். சென்னை வந்து கூலி வேலை செய்யும் தொழிலாளியாக பணி தொடர்ந்தார். அப்போது அவருக்கு தினக்கூலி பத்தணா மட்டுமே.
இந்த வேளையில் தான் இந்திய விடுதலைப் போர் சூடு பிடித்துக் கொண்டு இருந்தது. அதில் கலந்துகொண்டு சிறை சென்றார். இவரின் முதல் சிறுகதை 1933 ஆனந்த விகடன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்றது. மலரும் மனமும் என்பது அக்கதையின் பெயர். சிறப்பான நாடகங்களையும் எழுதியுள்ளார். இவர் எழுதிய படைப்புகள் திரைப்படமாகவும் வந்துள்ளன. போலீஸ்காரன் மகள் திரைப்படம் இவர் எழுதிய நாடகம் தான். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆறு நாடகங்களையும் மூன்று நாவல்களையும் எழுதி உள்ளார். இவர் பல எழுத்தாளர்களை உருவாக்கினார் என்பதோடு இவர் படைப்புகளை படித்தவர்கள் எழுத்தாளர்கள் ஆனார்கள் என்றும் சொல்லலாம். இவரது மணிக்கொடி காலம் என்ற நூலுக்கு சாகித்திய அகடமி விருது வழங்கப்பட்டது.
மார்ச் 24 1922
காலம் கடந்தும் காற்றில் உலாவரும் குரலுக்குச் சொந்தமான தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் சௌந்தரராஜன் பிறந்தநாள்.
மார்ச் 24 1933தற்செயலாக இன்று பாலித்தீன் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து உற்பத்தி செய்தால் தொழிற்சாலைகளில் வெடி விபத்து ஏற்படும் அபாயமும் அப்போது இருந்தது. எனவே அத் தொழிற்சாலைகள் அவ்வப்போது உற்பத்தியை நிறுத்திவிட்டு எந்திரங்களை சுத்தம் செய்து உற்பத்தியை மீண்டும் துவக்கி பாலித்தீன் உற்பத்தி செய்தனர்.
மார்ச் 24 1947
மவுண்ட்பேட்டன் இந்தியாவின் வைஸ்ராயாக பதவியேற்றார்.
மார்ச் 24 1975
சங்கீத கலாசிகாமணி முசிறி சுப்பிரமணிய ஐயர் காலமானார். இசைப் பேரறிஞரான இவர் பத்மபூஷன் பட்டம் பெற்றவர்.
மார்ச் 24 1977
காங்கிரஸ் கட்சி தேர்தலில் தோல்வி அடைந்தது. மொராஜி தேசாய் தலைமையில் புதிய ஜனதா அரசு உதயமானது. இவர் தான் காங்கிரஸ் கட்சியைச் சேராத முதல் பிரதமர்.
மார்ச் 24 1984
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.
மார்ச் 24 2020
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இன்று இந்திய முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

Comments
Post a Comment
Your feedback