ஏப்ரல் 13, 1919
ரத்த ஞாயிறு என்று குறிப்பிடப்படுகின்ற ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்த நாள் இன்று.
மக்களால் பெரிதும் மதிக்கப்பட்ட கச்சிலுவையும் சத்தியபாலையும் அமிர்தசரசிலிருந்து பிரிட்டிஷ் அரசு வெளியேற்றியது. இந்தச் செயலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க ஞாயிற்றுக்கிழமையான இன்று அமிர்தசரத்தில் ஜாலியன் வாலாபாக்கில் மாபெரும் பொதுக்கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தைக் கலைக்க ஜெனரல் டயர் தலைமையில் வந்த படையினர் கண்மூடித்தனமாகச் சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். 2000 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டது. கண்ணில்படுகின்ற மக்களை எல்லாம் கைது செய்து சிறையில் தள்ளினர். அந்தக் கொடுமையான ஞாயிறு இன்று.
ஏப்ரல் 13, 1930
கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பிறந்த நாள்.
எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை மனதில் நிற்கும் வகையில் பாடுவது இவரது சிறப்பாகும்.
குட்டி ஆடு தப்பி வந்தால் குள்ளநரிக்குச் சொந்தம்!
குள்ளநரி மாட்டிக்கிட்டா கொறவனுக்குச் சொந்தம்!
தட்டுக்கெட்ட மனிதர் கண்ணில்
பட்டதெல்லாம் சொந்தம்!
சட்டப்படி பார்க்கப்போனால் எட்டடிதான் சொந்தம்!
உனக்கெது சொந்தம் எனக்கெது சொந்தம்
உலகத்துக் கெதுதான் சொந்தமடா?
என்பது திரைப்படத்தில் இடம்பெற்ற அவரது அவரது முதல் பாடல்.
ஒருவகையான பாமரத் தமிழில் அமைந்த அவரது பாடல்கள் எல்லோரையும் சென்று சேர்த்தன.
குறுக்கு வழியில் வாழ்க்கை தேடிடும் திருட்டு உலகமடா ...
காடு வெளஞ்சென்ன மச்சான் நமக்கு கையும் காலும் தானே மிச்சம்...
போன்ற இவருடைய பல பாடல்கள் இன்றும் புகழுடன் விளங்குகின்றன.
காமராஜர் தமிழ்நாடு முதலமைச்சராக இன்று பதவியேற்றுக்கொண்டார்.
அவருடன் எம்.பக்தவச்சலம், சி.சுப்பிரமணியம், எம்.ஏ.மாணிக்கவேலர், பி.கக்கன், பி.ராமையா, லூர்து அம்மாள் சைமன் ஆகிய ஆறு பேர் அடங்கிய அமைச்சரவை பொறுப்பேற்றது.
பிரபல வீணை இசைக் கலைஞர் எஸ். பாலச்சந்தர் இன்று மாரடைப்பால் காலமானார்.
இவர் சிறந்த திரைப்பட நடிகரும் இயக்குநரும் கூட .

Comments
Post a Comment
Your feedback