குறுந்தொகையில் ஆண் பெண் உறவு நிலைகள்
தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமுமுள்ள மொழி
தமிழென்ற பெருமைக்குரிய தகுதிக்கு பாட்டும்
தொகையும் இன்றியமையாதவை. ஈராயிரம் ஆண்டுத் தொன்மையும் அக இலக்கியங்களில் முதன்மையானதுமானது
குறுந்தொகை. ஓர் இனத்தின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் மரபு சார் நம்பிக்கைகள்,
வரலாற்றுப் பதிவுகள், சமூக நிலை ஆகியவற்றையும் புற இலக்கியங்கள் வழி அறியக் கிடைக்கின்றன.
கூற்றுகளில் ஆண் பெண் :
அக இலக்கியங்களில் உள்ள பாடல்கள் தலைவன் தலைவி
தோழி அல்லது பிற மாந்தர்களுள் ஒருவரது கூற்றாக அமைந்திருக்கும். அல்லது பாடல் சுட்டும்
செய்தி, பின்புலம், கூறப்படும் உவமைகள், காட்டப்படும் உள்ளுறை வழி யாருடைய கூற்று என
அறிந்து கொள்ளமுடியும். குறுந்தொகைப் பாடல்களுள்
தலைவன், தலைவி, தோழி, பரத்தை, இற்பரத்தை, காதற்பரத்தை, செவிலித்தாய், பாங்கன்,
கண்டோர் என ஒன்பதின்மருடைய கூற்றுக்கள் வந்துள்ளன. இதில் தலைவன், பாங்கன் என்னும் இருவர்
மட்டும் ஆண்பாலாக இருக்க தலைவி உள்ளிட்ட எண்மர்
பெண்பாலாக அமைந்துள்ளது அக்கால சமூகத்தின் ஆண், பெண் ஆதிக்கம், பெண்ணுரிமை என்ற எல்லைகளைக்
கடந்து பெண்களுக்கான முக்கியத்துவத்தைக் காட்டுவதாகக் கொள்ளலாம். கண்டோர் என்பது இருபாலரையும் குறிப்பதாகக்
கொள்ளலாம்.
கூற்று வகை:
குறுந்தொகையுள் காணக்கிடைக்கும் கூற்றுகளை,
இற்பரத்தை–1, கண்டோர்-3, காதற்பரத்தை-2, செவிலித்தாய்–9,
தலைவன்–62, தலைவி–180, தோழி-140,.பரத்தை–2,
பாங்கன்–2 என உ.வே.சா உரை.(1)
வகைப்படுத்திக்காட்டும். இவ் வகைப்பாட்டினை
நோக்க மொத்தமுள்ள 400 பாடல்களுள் தலைவியும் தோழியும் மட்டும் 320 பாடல்களில் இடம் பெறுவதைக்
கொண்டு அக உணர்வினைப் பாடும் போது ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு அளித்த முக்கியத்துவம்
தெற்றென விளங்குகிறது.தோழி பாடும் பாடல்களுள் தலைவனை நோக்கி 49 பாடல்களும் தலைவியை
நோக்கி 79 பாடல்களும் உள்ளன. தலைவியின் அழகைப் பாடும் பாடல்கள் பல இருப்பினும்,
மலைச்செஞ் சாந்தி னார மார்பினன்
சுனைப்பூங் குவளைச் சுரும்பார்
கண்ணியன் (குறு- 321) .
என ஒரு பாடல் மட்டுமே தலைவனின் மார்பின் அழகினைப் பேசி நிற்கிறது.
இல்லறம்:
தலைவனும் தலைவியும் ஒத்த அன்புடையவர்களாக இல்லறம்
நடத்தினர். வரைவுக்குப் பொருள் தேடியோ வேந்துவிடு தொழிலின் காரணமாகவோ வேற்றுப்புலம்
செல்ல வேண்டிய நிலையிலும் தலைமக்கள் உடலாலன்றி உள்ளத்தால் பிரியா நிலையை,
சீறூறோளே,
மடந்தை வேறு ஊர்
வேந்துவிடு
தொழிலொடு செலினும்
சேந்துவரல்
அறியாது செம்மல் தேரே. (குறு- 242)
என்ற பாடல் அடிகள் காட்டுகின்றன.
தலைவி செல்வச் செழிப்பில் வளர்ந்தவள். ஆயினும் தலைவன் மனைக்கு
வந்தபின் தலைவனே தன் மகிழ்ச்சி எனக் கொண்டு வாழும் இல்லற மாண்பினை,
முளிதயிர்
பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு
கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை
யுண்கண் குய்ப்புகை கமழத்
தான்
றுழந் தட்ட தீம்புலிப் பாகர்
இனிதெனக்
கணவ னுன்டலின்
நுண்ணிதின்
மகிழ்ந்தன் றொண்ணுதன் முகனே. (குறு- 167)
என்ற பாடல் காட்டுகிறது.
‘காந்தள் மெல்விரல்’ என்பது நற்றாய் மனையில்
தலைவி இருந்த செல்வச் சூழலையும் ‘குவளையுண்கண் குய்ப்புகை’ தலைவன் மனையில் செல்வச்
செழிப்பை மறந்து வாழ்வதையும் ‘இனிதெனக் கணவனுண்டலின் மகிழ்தலால்’ தலைவன் மேல் கொண்ட
அன்பினையும் புலப்படுத்துகிறது.
தலைவன் அன்பின் மாற்றம்:
தலைவி தலைவன் மேல் கொண்ட அன்பு மாறாததாயிருக்க
சிற்றின்ப வேட்கையின் பாற்பட்ட தடுமாறும் அன்பினனாக தலைவன் நிலை உள்ளதை குறுந்தொகை
காட்டுகிறது. தலைவன் பரத்தையிற் சேரும்போது தலைவியை மறத்தலும் பரத்தையிற் பிரிந்த நிலையில்
தலைவியைச் சேர விழைந்து வாயில் வேண்டலும் என காற்றில் சருகு போல அலைபாய்வதைக் காணும்
போதும் தன்னிலை பிறழாத அன்பினளாக தலைவி விளங்குகிறாள். மாறா அன்புடைய நிலையிலும் வாயில்
மறுக்கும் திண்மையுடையவளாகவும் தலைவி விளங்குகிறாள்.
கார்ல் ஜங் என்ற உளவியலாளர் பெண்ணிடம் உள்ள
தன்னிலை மறந்த ஆண்மையை அனிமஸ் என்றும் ஆணிடம் இருக்கும் தன்னிலைமறந்த பெண்மையை அனிமா
என்றும் வரையறுக்கிறார். ஆணிடம் தோன்றும் அனிமா ஒரு நோக்கில் மட்டும் அமைய பெண்ணிடம்
உள்ள அனிமஸ் கலப்புக் குணாதிசயங்களையும் திண்மையையும் கொண்டதாக இருக்கும் என அவர் தெளிவுபடுத்துகிறார்.(2)
குறுந்தொகை பெண்களின் பெண்மையைப்பாடும் அதேநேரம், அவர்களிடம் பொதிந்துள்ள மனவன்மை,
திண்மைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது. வாயில் மறுக்கும் போதும் வாயில் நேரும் போதும்
தோழியின் பங்கு தலைவியை ஆற்றுப்படுத்துகிறது.
தலைவனின் பொய்யுரை;
'உன் மேல் கொண்ட அன்பில் மாறேன்' என சூளுரைத்த
தலைவன் அச்சூள் பொய்க்கும் படி தலைவியைப் பிரிந்து சென்றான். பரத்தையிற் பிரிந்து மீண்டுவந்து
தலைவியின் உடன்பாட்டைப் பெறும்பொருட்டு தோழியை அணுகுகிறான். தான் பரத்தமையுடையவனல்லன்
எனப் பொய்யுரை கூறும்போது நீ பொய்யன் என இடித்துரைத்து வாயில் மறுக்கும் தோழி அவர்களது
இல்லறமாண்புக்கு ஏற்ப முடிவெடுக்கிறாள்.
" --- என் நலந்தந்து
கொண்டனை
சென்மோ மகிழ்நநின் சூளே" (குறு-
238)
எனக் கவர்ந்து கொண்ட தலைவியின்
நலத்தைத் தந்துவிட்டு முன்பு நீயுரைத்த சூளுரையைப் பெற்றுச் செல் எனக் கூறுகிறாள்.
கவர்ந்துகொண்ட பெண்மைநலம் எப்படி மீளப்பெறப்பட முடியாததோ அது போல தன் சொற்களும் பொய்யுரையாகக்
கூடாது என தலைவன் உணர்ந்து நல்வழி திரும்ப வாயில் மறுக்கப்படுகிறது.
குற்றம் மறைத்து ஏற்றுக்கொள்ளல்:
குற்றங்கடிந்து
ஒதுக்கும்போதும் அவனது நற்குணங்களை மீள நினைந்து , மனந்திருந்தி வந்த தலைவனை மன்னித்து
ஏற்றுக்கொள்ளும் தலைவியின் மனப்பாங்கு தலைவனின் மனதுடன் ஒப்பிடமுடியாத அளவு உயர்ந்ததாக
உள்ளதை,
தீதி
னெஞ்சத்துக் கிளவி நம்வயின்
வந்தன்று
வாழி தோழி நாமும்,
நெய்பெய்
தீயினெதிர் கொண்டு
தான்மணந்
தனையமென விடுகந் தூதே. (குறு-
106)
என்ற பாடல் காட்டுகிறது. தலைவன் அன்பில்லாமல் பிரிந்து சென்றுவிட்டான்
என தலைவி எண்ணியிருந்த போது தலைவன் விட்ட தூதுடன் தன் எண்ணத்தையும் சேர்த்து 'தலைவன்
தலை நாளன்ன அன்பினன். அவனை ஏற்றருள வேண்டும்' எனத் தலைவியிடம் கூறுகிறாள் தோழி. 'அவன்
அத்தகையனாயின் நாமும் மணநாளின் கண் வைத்திருந்த அன்பில் குறைவின்றி உள்ளோம்' என தூதுவிடுவோம்
என்று தோழியிடம் தலைவி கூறுகிறாள். தவறுக்கு மன்னிப்புக்கோரும் தலைவனை மன்னிக்கும்
போதும் தான் மன்னிக்கும் அளவு உயர்ந்தும் தலைவன் தாழ்ந்தும் போவது மன்னிப்பாகுமே தவிர
நெருக்கமான அன்பிற்கு வித்திடாது என உணர்கிறாள் தலைவி. தலைவனின் தடுமாற்றத்தை விரிவாகப்
பேசாமல் 'இன்று தான் புதிதாக மணந்த நாள் போலக்கருதிக்
கொள்வோம்' என்ற தலைவியின் மொழி இல்லறம் ந Decல்லறமாகத் திகழ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே
பெண்கள் கொண்டிருந்த உளவியல் அணுகுமுறையைக் காட்டுகிறது. ஆண், பெண் உறவு நிலையின் நெருக்கம்
பெண்ணின் கடிதலும் சேர்தலும் பொருந்திய தலைமைப் பண்பால்தான் நீடிக்கிறது என்பது இன்றளவும்
உண்மையாகத் திகழ்வதை அறியலாம்.
பிரிவில் ஆண், பெண்:
ஒத்த அன்பில் திளைத்த நிலையில் வினையாலோ தலைவன்
பிழையாலோ பிரிவு நேர்கிறது. வினையால் நேரும் பிரிவு தலைவனின் நற்செயலைக் காட்டுவதாகவும்
வரைவின் மகளிரை விழைந்த தலைவனின் செயலால் நேரும் பிரிவு அவனது உளத் தடுமாற்றத்தைக்
காட்டுவதாகவும் அமைகிறது. வினையால் நேரும் பிரிவு இருவருக்கும் துன்பம் தருவதாக இருக்க
பிழையால் நேரும் பிரிவில் தலைவன் மனைக்கு வெளியே இன்பம் துய்க்க தலைவியோ மனையில் பிரிவுத்
துயரில் தவிக்க நேர்கிறது.
வரைவுக்குப் பொருள் சேர்க்க வினைமேற்சென்ற
தலைவனின் பிரிவில் தூங்காமல் தவிக்கும் தலைவியின் நிலை,
முட்டு வேன்கோ றாக்கு வேன்கொல்
ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்
டாஅ வொல்லெனக் கூவு வேன்கொல்
அலமர லசைவளி யலைப்பவென்
உயவு நோயறியாது துஞ்சுமூர்க்கே. (குறு - 28)
என்ற பாடல் வழிக் காட்டப்படுகிறது. வருத்தம் தரும் தனது உயவு
நோயால் தூங்காமல் தவிக்கும் தலைவி, ஆழ்ந்து தூங்கும் ஊரை முட்டுவேனோ, தாக்குவேனோ எனச்
சிந்திக்கிறாள். முட்டுதல் என்பது உடம்பால் தீண்டுதல் என்றும் தாக்குதல் என்பது கோல்
முதலியவற்றால் தீண்டுதல் என்றும் உ.வே.சா விளக்குவார்.
பிரிவு இருவருக்கும் துன்பம் தருவதாயினும்
பிரிவை ஏற்றுக்கொள்வதில், பிரிவால் நேரும் துன்பத்தின் அளவு ஆண்களைவிட பெண்களுக்கே
அதிகம் என்பதைக் குறுந்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன. தலைவியைப் பிரிந்த தலைவன் உள்ளத்தால்
வருந்தும் நிலையிலும் அவனது உடலில் மாறுபாடு தோன்றுவதில்லை. ஆனால் தலைவனைப் பிரிந்த
தலைவியின் வருத்தம் உடலையும் பாதிக்கிறது. பிரிவாற்றாமையால் வரும் கண்ணீர் வெந்நீராகிறது.
(குறு-4). வளை நெகிழுமளவு மேனி மெலிகிறது.(குறு-190). மேனி தலைவனைப் பிரிந்தவிடத்துப் பசலை கொள்கிறது.(குறு-48).
...சேர்ப்பனீப்பனொருநம்
இன்னுயிரல்லது பிறதொன்
றெவனோ தோழி நாமிழப் பதுவே. (குறு-
334)ற்
என தலைவன் பிரிந்தால் உயிரைத் தவிர நாம் எதை
இழக்கப் போகிறோம் என்ற தலைவியின் கூற்றுவழி தலைவியின் உள்ளத்தில் தலைவனுக்கு இருந்த
இடத்தை அறியலாம். ஆனால் தலைவன் அத்தகைய அன்பிற்குத்
தகுதியுடையவனா என்பது ஆய்வுக்குரியது.
முடிவுரை
- அகவுணர்வைப் பாட ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கே குறுந்தொகைப் பாடல்கள் அதிக இடமளிக்கின்றன. அன்பு என்ற நிலையில் ஆண் பெண் உறவு நிலைகளில் ஒருமை உள்ள போதும் ஆண்கள் போல புலனின்ப நாட்டத்தில் பெண்கள் தடுமாற்றமடையவில்லை என்பது பெறப்படுகிறது. புலன் வழி நுகர்வால் ஆண் இயல்பில் கீழிறங்கிய நிலையும் சூழ்நிலை சார்ந்து முடிவெடுக்க ஏற்ற தோழியின் உறவு, வாயில் மறுத்தல், மன்னித்தல் எனத் தக்கவழி தேர்தல், தவறு செய்த ஆண்மகனை மன்னிக்கும் போதும் அவன் பண்பு நலன் அழியாமல் காத்து ஏற்றுக் கொள்தல் ஆகியவழி பெண்ணிடம் உள்ள தலைமைப் பண்புகள் இல்லறம் செழிக்க தக்கவாறு கையாளப்பட்ட பாங்கு இக்காலத்துக்கும் பொருந்தும் படிப்பினையாகக் கொள்ளும் வண்ணம் உள்ளதை குறுந்தொகைப் பாடல்கள் காட்டுகின்றன.
குறிப்புகள்:
1. குறுந்தொகை மூலமும்,உரையும், டாக்டர். உ.வே.சா நூல் நிலையம்.பக்கம்IXXXI
2. Carl Jung- Wikipedia
Nice.
ReplyDelete