வீரம், புகழ் என்பதெல்லாம் இந்தச் சமூகம் சொல்லிக்கொடுத்தவை.
இறந்தாலும் புகழோடு இறந்திருக்கிறான் என்றால் அந்த இறப்பிலும் தமிழ்ப் பெண்கள் மகிழ்ந்தார்கள் என்பது அப்படிச் சொல்லித்தரப்பட்ட ஒன்று.
ஆனால் ஒரு தாய்க்குத் தான் தெரியும் தன் குழந்தையின் பிரிவு எவ்வளவு வலி தரும் என்று.
தாய்மை உணர்வுக்கும் சமூகம் சொல்லித் தந்த நெறிகளுக்கும் நடுவில் சிக்கிக் கொண்ட ஒரு தாயின் வலி இந்தப் பாடலில்...
அந்தத் தாய் கொஞ்சம் வயது முதிர்ந்தவள்.
மீன் பிடிக்க வரும் கொக்கு மாதிரி அவள் தலை முடி வெளுத்திருக்கிறது.
அவள் மகன் போர்க்களத்தில் ஒரு எதிரி யானையைக் கொன்றுவிட்டு வீர மரணம் அடைந்தான் என்ற செய்தி வருகிறது.
அவளுக்கு சமூகம் சொல்லித் தந்த படி அவனைப் பெற்றபோது மகிழ்ந்ததை விட மிகவும் மகிழ்ச்சி கொண்டாள்.
ஒரு வினாடி தான்...
அடுத்த வினாடி அவள் கண்களில் கண்ணீர்.
மழை பெய்யும்போது மூங்கில் இலைகளின் நுனியிலிருந்து சொட்டுச் சொட்டாக விழும் நீர்த்துளிகள் போலக் கண்ணீர்த் துளிகள்...
ஓ.. என வாய்விட்டுக் கூட அழ முடியாதபடி தன் மகனின் மரணத்தில் ஒரு தாய் மகிழ வேண்டும் என்பது அந்தத் தாய்க்கு எவ்வளவு கொடுமையானது.
அதை நுட்பமாக எடுத்துக் காட்டுகிறது இந்தப் பாடல்.
மீன் உண் கொக்கின் தூவி அன்ன
வால் நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறு எறிந்து பட்டனன்' என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்
நோன் கழை துயல்வரும் வெதிரத்து
வான் பெயத் தூங்கிய சிதரினும் பலவே.
(புறநானூறு)
Comments
Post a Comment
Your feedback