யாரை வேலைக்குச் சேர்த்தாலும் ஒழுங்காக இருப்பதில்லை. வேலை ஆட்களால் எனக்கு துன்பம் தான் வந்திருக்கிறது.
யாரையும் வேலைக்குச் சேர்க்காமல் விட்டு விடலாம் என்றால் எந்த வேலையும் நடப்பதில்லை.
என்னடா செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.
அப்போது தான் அவன் வந்தான்.
எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றான்.
நான் ஒரு இடைச்சாதிக்காரன்.
மாடு மேய்க்கத்தெரியும்.
மக்களைக் காக்கத் தெரியும்.
வீடு கூட்டத் தெரியும்.
துணிமணிகளை எல்லாம் கூட கவனமாகப் பார்த்துக்கொள்வேன்.
சின்னக் குழந்தைகளுக்கு அழகாகப் பாடல்கள் சொல்லித் தருவேன்.
குழந்தைகள் அழாதபடி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பேன்.
நீங்கள் காடு மேடு என எங்கே போனாலும்
இரவு பகல் எந்த நேரமானாலும்
உங்களோடு வருவேன்.
கள்ளர் பயம் கொஞ்சம் கூட உங்களுக்கு இருக்காது.
எந்தத் துன்பமும் உங்களை அணுகாமல் பார்த்துக்கொள்வேன்.
என்றான் அவன்.
"சரிப்பா உன் பேர் என்ன" என்றேன்.
"கண்ணன்" என்றான்.
பார்த்தால் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் கண்ணைப் பார்த்தால் பொய் சொல்ல மாட்டான் என்று தோன்றியது.
அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது.
எனக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டது.
அவனை என் சேவகனாக வைத்துக் கொள்வது என முடிவு செய்து கொண்டேன்.
"என்ன கூலி எதிர்பார்க்கிறாய் என்னிடம் வேலைக்குச் சேர" என்று கேட்டேன்.
"ஐயா, எனக்கு பொண்டாட்டி , பிள்ளைகள் என்று யாரும் இல்லை. நான் ஒரு தனியாள்.
பார்க்கத் தான் நான் சின்ன வயசு மாதிரி இருக்கிறேன்.
தலை முடி நரைக்காமல் இருக்கிறது.
ஆனால் வயசு எவ்வளவு என்று சொல்லமுடியாத அளவு காலம் ஆச்சு எனக்கு.
கூலி இவ்வளவு கொடுங்கனு உங்களை நச்ச மாட்டேன்.
காசு பணம் எனக்கு முக்கியமில்லை.
உங்ககிட்ட வேலைக்குச் சேர்த்துக் கொண்டால் போதும்" என்றான்.
இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா? பைத்தியக்காரப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்.
அவனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டேன்.
அவனை வேலைக்குச் சேர்த்த பின்பு,
ஒவ்வொரு நாளும் அவனுக்கு என் மேல் பிரியம் கூடிக்கொண்டே இருக்கிறதை உணர்கிறேன்.
எனக்கும் இனி அவன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றே தோன்றத் தொடங்கிவிட்டது.
இது பாரதி பாடிய கண்ணன் பாட்டு.
கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பின் கீழ் உள்ளது.
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ...
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ...
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ...
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ...
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ...
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ...
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;
Comments
Post a Comment
Your feedback