ராமனுக்குத் திருமணம். திருமண விழாவிற்காக தசரதன் தன் பரிவாரங்களோடு மிதிலையை நோக்கிப் பயணம் செய்கிறான். வழியிலே ஒரு சோலையிலே தங்குகிறார்கள். சோலையிலே ஒரு பெண்ணும் அவளுடைய உள்ளம் கவர்ந்தவனும் இருக்கிறார்கள்.
அவள் யாழ் போல இனிமையான குரலில் ஏதோ சொல்கிறாள். அவன் ஒரு நாட்டின் மன்னன்.
அன்றைய தினம்
அவர்களுக்குள் ஏதோ ஊடல். அவனைக் கண்டும் காணாமல் நகர்ந்து போகிறாள். அவனோ அவளிடம்
கெஞ்சுகிறான். ஆனால் அவள் மனமிரங்கவில்லை. அவனைத் தாண்டிச் செல்கிறாள்.
கொஞ்ச நேரம்
போனபின் அவள் கோபம் போய்விடுகிறது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டுமென்று
விரும்புகிறாள். அவன் அவ்வளவு கெஞ்சியபோதும் ஏற்றுக்கொள்ளாமல் வந்துவிட்டு
இப்பொழுது வலியப்போனால் அவன் சிரிப்பானே என்ற தயக்கம் அவளுக்கு.
அதற்கும் அவளுக்கு குறும்பாக ஒரு யோசனை தோன்றுகிறது. தன் கையில் இருந்த கிளியை அவன் இருக்கும் இடத்திற்கு ஏவி விடுகிறாள். பின் கிளியைத் துரத்துபவள் போல அவனை நோக்கி ஓடுகிறாள்.
யாழ்
ஒக்கும் சொல் பொன் அனையாள், ஓர்
இகல் மன்னன்
தாழத் தாழாள், தாழ்ந்த மனத்தாள், தளர்கின்றாள்
ஆழத்து உள்ளும் கள்ளம் நினைப்பாள்; அவன் நிற்கும்
சூழற்கே தன் கிள்ளையை ஏவித் தொடர்வாளும்.
கம்பராமாயணம் (பாலகாண்டம் பூக்கொய் படலம்)
பொருள்:
யாழ் ஒக்கும் சொல் – யாழ் போல இனிமையான குரலில்
பொன் அனையாள் – திருமகளைப் போன்ற பெண்
ஓர் இகல் மன்னன் – ஒப்பற்ற வலிமை வாய்ந்த அரசன்
தாழ – வணங்கி நிற்க
தாழாள் – சிறிதும் மனம் மனமிரங்காதவளாயிருந்து
தாழ்ந்த மனத்தாள் –பின்புமனம் இளகி
தளர்கின்றா –வருந்தி
ஆழத்து உள்ளும் – ஆழ்ந்து எண்ணி
கள்ளம் நினைப்பாள் –குறும்பாக ஒரு யோசனை கொண்டவளாய்
அவன் நிற்கும் சூழற்கே – அவன் நிற்கின்ற பகுதிக்கே
தன் கிள்ளையை– தான் வளர்த்த செல்லக் கிளியை
ஏவித் தொடர்வாளும்– முன்னால் ஏவிப்பின்னால் அதனைத் தொடர்ந்து செல்வாள்.
ஆனந்த யாழை மீட்டுகிறாய்
அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய்
அன்பெனும் குடையை நீட்டுகிறாய்
அதில் ஆயிரம் மழைத் துளி
கூட்டுகிறாய்
இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில்
பாஷைகள் எதுவும் தேவையில்லை
சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும்
மலையின் அழகோ தாங்கவில்லை
உந்தன் கைகள் பிடித்து போகும் வழி
அது போதவில்லை இன்னும் வேண்டுமடி
இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே
எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி.
- நா.முத்துக்குமார்
Comments
Post a Comment
Your feedback