என் தோழியோ ஏழைப் பரதவர் மகள்.
நீலக்கடலின் உள்ளே சென்று மீன் கொண்டுவரும் எளிய குடும்பம்.
கடலை அடுத்திருக்கிற கானல்துறையில் உள்ள சிறுகுடியில் வாழ்கிறோம்.
நீயோ, கொடி பறக்கும் தேரில் செல்லும் செல்வம் படைத்த பெருமகனின் மகன்.
திரும்பிய பக்கமெல்லாம் கடைத்தெருக்கள் கொண்ட பழமையான ஊரில் நீ வசதியாக வாழ்கிறாய்.
நாங்களோ, சுறாமீன் துண்டங்களைக் காயவைத்துக்கொண்டு, அதனைக் கொத்திப் போக வரும் பறவைகளை ஓட்டிக்கொண்டிருக்கிறோம்.
எங்களுக்காக நீ இத்தனை அழகிய அணிகலன்களைக் கொண்டு வந்திருக்கிறாய்.
எங்கள் கை பட்டாலே அதன் அழகு மாசுபடும்.
இங்கே புலால் நாற்றம் அடிக்கிறது.
நீ கொஞ்சம் தள்ளியே நில்.
கடலில் கிடைத்ததைக்கொண்டு வாழும் எங்களின் இந்த வாழ்க்கை எங்களுக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் உனக்கு இந்த வாழ்க்கை ஒத்துவராது.
நாங்கள் எங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முடியாது.
உன் பெருமைக்கும் வசதிக்கும் எங்கள் வாழ்க்கை பொருந்தாது.
இவளே, கானல் நண்ணிய காமர் சிறுகுடி,
நீல் நிறப் பெருங் கடல் கலங்க உள்புக்கு
மீன் எறி பரதவர் மகளே; நீயே,
நெடுங் கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந் தேர்ச் செல்வன் காதல் மகனே:
நிணச் சுறா அறுத்த உணக்கல் வேண்டி,
இனப் புள் ஓப்பும் எமக்கு நலன் எவனோ?
புலவு நாறுதும்; செல நின்றீமோ!
பெரு நீர் விளையுள் எம் சிறு நல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே;
எம்மனோரில் செம்மலும் உடைத்தே!
(நற்றிணை)
Comments
Post a Comment
Your feedback