ஒவ்வொரு நாளும் புதிய புதிய முகங்கள்...புதிய நிகழ்வுகள்...
புதியவை படரப் படர... பழைய நினைவுகள் அமிழ்ந்து போகின்றன. நிகழ்காலத்தின் ஆக்கிரமிப்பு கடந்த கால நினைவுகளை மங்கிப் போகவைத்து விடுகிறது.
அனுபவித்த ஒவ்வொரு நாளையும் மீண்டும் நினைவடுக்குகளுக்குக் கொண்டு வந்து அசைபோட நினைத்தாலும் அதை சிந்தாமல் சிதறாமல் அப்படியே கொண்டுவர முடிவதில்லை.
வாழ்ந்து கடந்த நாட்களின் பூரணத்தை நம்மால் மீண்டும் கொண்டுவருவது முடியாதபோது வாழ்க்கை வரலாறு என்பது வாழ்ந்தவர்களின் உண்மை வரலாறு என்று யார் நம்புவார்கள்?
அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்களை வைத்துக்கொண்டு கற்பனையில் எழுதப்படுவது தானே வாழ்க்கை வரலாறு!
தன்னுடைய வாழ்க்கையையே முழுதாக யாராலும் நினைவுபடுத்த முடியாதபோது யாரைப் பற்றியோ யாரோ எழுதும் வரலாறு எப்படி இருக்கும்?
இப்படி ஒரு கேள்வி இந்தக் கவிதையில்.
இது Walt Whitman (வால்ட் விட்மன்) எழுதிய கவிதை.
புத்தகங்களைப் பற்றிப் பேசும் கவிதை இது. ஆனால் பேசப்படுவது புத்தகம் அல்ல வாழ்க்கை.
When I read the book, the biography famous,
And is this, then, (said I,) what the author calls a man's life?
And so will some one, when I am dead and gone, write my life?
(As if any man really knew aught of my life;
Why, even I myself, I often think, know little or nothing of my reall ife;
Only a few hints- a few diffused, faint clues and indirections,
I seek, for my own use, to trace out here.)
(Walt Whitman)
கவிதை சொல்லும் செய்தி இது தான்.
நான் படிக்கின்ற இந்தப் புத்தகம் ஒரு பிரபலமான ஒருவரைப் பற்றிய வாழ்க்கை வரலாறு. அதைப் படிக்கும்போது நான் சொல்லிக்கொண்டேன்.
'இதைத் தானா ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாறு' என்று அந்தப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் சொல்லிக்கொண்டிருக்கிறாரா?
நான் இறந்து போனபின் யாராவது ஒரு ஆசிரியர் என் வாழ்க்கையைப் பற்றியும் இப்படியெல்லாம் எழுதுவாரோ?
எந்த மனிதனுக்கும் என்னைப் பற்றி, என் வாழ்க்கையைப் பற்றி பெரிதாக என்ன தெரிந்திருக்கும்? ஒன்றும் இருக்காது.
அட உண்மையில் எனக்கே என் உண்மையான வாழ்க்கை பற்றி ஒன்றும் தெரிவதில்லை. அப்படியே இருந்தாலும் என்னைப் பற்றி எனக்கு ஏதோ கொஞ்சம் தெரிந்திருக்கலாம்.
இப்படித் தான் நான் அடிக்கடி நினைத்துக் கொள்வதுண்டு.
என்னுடைய தேவைக்காக என் வாழ்க்கைக்குள் புகுந்து நான் தேடினாலும் எப்போதோ நடந்த ஒன்றிரண்டு விஷயங்கள், மங்கியும் மங்காமலும் சில நினைவுகள், தெளிவில்லாமல் தெரிகிற சில முகங்கள் இப்படித்தான் என்னால் பார்க்கமுடிகிறது.
இதோடு கவிதை முடிந்து விடுகிறது.
கவிதை முடிந்த புள்ளியிலிருந்து அதன் அர்த்தம் புரியத்தொடங்குகிறது...
Comments
Post a Comment
Your feedback