பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த நினைத்தால் வெட்கம் தடுக்கிறது.
பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான்.
அவளுக்கு மன்னன் மேல் காதல்.
சொல்லவா முடியும் ?
அவனைப் பார்க்கவாவது செய்யலாம் என்றால் அவனைச் சுமந்து
வரும் அந்த பட்டத்து பெண் யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது.
யானையிடம் அவள் சொல்கிறாள்...
"ஏய் யானை, நீ இப்படி டங்கு டங்கு என்று வேகமாய் நடந்து
போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு
பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள் அல்லவா?
எனவே , மெல்லப் போ " .
அந்த யானை மேல் ரொம்ப அக்கறை தான்!
பாடல்
எலா அ
மடப் பிடியே எங்கூடல்க் கோமான்
புலா அல்
நெடு நல் வேல் மாறன் - உலாங்கால்
பைய
நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை
ஐயப்
படுவது உடைத்து.
(முத்தொள்ளாயிரம்)
பொருள்:
எலா அ மடப் பிடியே - ஏய் பெண் யானையே
எங்கூடல்க் கோமான் - எங்கள் பாண்டிய மன்னன்
புலா அல் நெடு நல் வேல் - எதிரிகளின் தசை
ஒட்டியிருக்கும் நீண்ட வேலைக் கொண்ட
மாறன் உலாங்கால் - அவன் உலா வரும் போது
பைய நடக்கவும் - மெல்ல நடக்கவும்.
தேற்றாயால் -இல்லையென்றால்
நின் பெண்மை -உன்னுடைய பெண் தன்மை
ஐயப் படுவது உடைத்து - சந்தேகத்துக்கு இடமாகும்.
அக்கம் பக்கம் யாரும் பார்த்தால் வெட்கம் வெட்கம்
அன்பே உன்னை நேரில் கண்டால் நாணம் நாணம்
ஆசை நெஞ்சை சொல்லப் போனால் அச்சம் அச்சம்
அன்றும் இன்றும் அதுதான் நெஞ்சில் மிச்சம் மிச்சம்
(கண்ணதாசன்)
Comments
Post a Comment
Your feedback