காத்திருப்பது காதல் படுத்தும் பாட்டை விட கஷ்டம் .
இங்கே ஒரு பெண் அவள் காதலனுக்காகக் காத்திருக்கிறாள். பகலில் வந்தால் ஊரெல்லாம் தெரிந்து விடும். ஆகவே இரவில் வருவதாகச் சொல்லியிருக்கிறான்.
அன்றைக்குப் பார்த்து உள்ளுர் கோவிலில் திருவிழா.
அவளுக்கு ஏமாற்றம்.
அப்போது சொல்கிறாள் அந்தப் பெண்.
அவன் வருவான் என்று நான் காத்துக் கொண்டிருக்கிறேன். இன்றைக்குப் பார்த்து ஊரில் கோவில் திருவிழா. விழா என்றால் யாரும் தூங்க மாட்டார்கள். அப்படியே விழாவே இல்லை என்றாலும் என் அன்னை தூங்க மாட்டாள். அன்னை தூங்கி விட்டாலும் இந்தக் காவலர்கள் சுற்றிக் கொண்டே இருப்பார்கள். காவலர்கள் தூங்குகின்ற நேரம் பார்த்து நாய்கள் குரைக்க ஆரம்பித்து விடும். நாய்கள் வாயை மூடும்போது 'பெண் இல்லாத ஊரில் பிறந்தது போல' இந்த வெண்ணிலா வந்து பகல் போல வெளிச்சம் தரும். வெண்ணிலா வெளிச்சம் கொஞ்சம் மறைந்தாலோ எலியை நினைத்துக்கொண்டு கூகை குழறும். கூகை குழறுவது நின்றால் விடிந்து விட்டது என மனைக் கோழி கூவும். ஒருவழியாக எல்லாரும் தூங்கிய நான் காத்துக் கொண்டிருக்கும் போது அவனும் வராமல் போய் விடுவான். சுடுகாட்டில் தட்டித்தட்டி விழச் செய்யும் முட்டுக்கற்கள் போல இப்படியாகப் போய்க் கொண்டிருக்கிறது என் காதல்.
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;
மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;
பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின்,
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;
இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;
அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின்
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;
திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;
வளைக்கண் சேவல் வாளாது மடியின்,
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;
எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே; அதனால்,
அரி பெய் புட்டில் ஆர்ப்பப் பரி சிறந்து,
ஆதி போகிய பாய்பரி நன் மா
நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
கல் முதிர் புறங்காட்டு அன்ன
பல் முட்டின்றால் தோழி! நம் களவே.
(அகநானூறு 122- பரணர்)
Comments
Post a Comment
Your feedback