பல பழந்தமிழ் இலக்கியப் பாடல்கள் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் இடம் பெற்றுள்ளன.
திரைப் படங்களில் சில பாடல்கள் பொருத்தமாகும் அழகாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
சில பாடல்களை திரைப்படங்கள் வீணாக்கி இருக்கும்.
நறுமுகையே என்று தொடங்கும் பாடல் மணிரத்தினம் இயக்கத்தில் இருவர் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலாகும்.
அந்தப் பாடலில் வரும் சரணம் ஒரு குறுந்தொகைப் பாடலின் சொற்களை மாற்றி அப்படியே எடுத்துக் கொண்டதாகும்.
அந்தப் பாடலின் சரணம்.
பெண்:
யாயும் யாயும் யாராகியரோ நெஞ்சு எம் நேர்ந்ததென்ன
ஆண்:
யானும் நீயும் எவ்வழி அறிதும் உறவு சேர்ந்ததென்ன
பெண்:
ஒரே ஒரு தீண்டல் செய்தாய் உயிர்க்கொடி பூத்ததென்ன
ஆண்:
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி போல் அன்புடை நெஞ்சம் கலந்ததென்ன.
அந்த குறுந்தொகைப் பாடல்:
குறிஞ்சித் திணை, தலைவன் கூற்று
யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே.
இந்தப் பாடல் குறிஞ்சித் திணையைச் சார்ந்தது.
திரைப்படத்தில் இந்த வரிகள் வரும்போது மலையும் மலை சார்ந்த இயற்கைப் பின்புலமும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும்.
இன்னொரு அழகான விஷயம் இந்த வரிகள் வரும் பொழுது காட்சி கருப்பு வெள்ளை நிறத்திற்கு மாறும். இது பழைய இலக்கியத்தில் இருந்து எடுத்த பாடல் என்பதைச் சொல்லாமல் சொல்வது போல் இருக்கும்.
குறுந்தொகையில் பாடல் தலைவன் கூற்றாக இருந்தபோதும் குறிஞ்சித் திணையின் உரிப்பொருள் புணர்தலும் புணர்தல் நிமித்தமும் அதாவது தலைவன் தலைவி சேர்ந்து மகிழ்ந்து இருத்தல். அது திரைப்படப் பாடல் காட்சியில் பொருத்தமுற அமைந்திருக்கும்.
இந்தக் காட்சியைப் பார்க்கும் போது இயக்குநருக்கும் ஒளிப்பதிவாளருக்கும் சங்க இலக்கியத்தில் உள்ள ஈடுபாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும். பார்க்கும் நமக்கும் சங்க இலக்கியத்தை நினைவு படுத்துவது போல இருக்கும்.
இது இன்னொரு பாடல் :
ஏ ஆர் ரகுமான் இசையில் காதலன் படத்தில் இந்தப் பாட்டு வரும்.
இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ மோகினியோ – மனம்
முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ எனவே – உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி வீதியிலே – மணிப்
பைந்தொடி நாரி வசந்த ஒய்யாரி பொற்பந்து கொண்டாடினளே!
இந்தப் பாடல் திரிகூடராசப்ப கவிராயர் எழுதிய குற்றாலக் குறவஞ்சியில் இடம்பெற்ற பாடல். இந்தப் பாடலை அப்படியே படத்தில் பயன்படுத்தி இருப்பார்கள்.
வசந்தவல்லி தோழிகளோடு பந்து விளையாடுகின்ற அழகினைக் கூறுகின்ற பாடல் இது.
வசந்தவல்லியின் அழகினை வியந்து,
இவள் இந்திரையோ?
சுந்தரியோ?
தேவலோகத்து ரம்பையோ?
மோகினியோ? என்ற கேள்விகள் வரும்.
அடுத்து வசந்தவல்லி பந்து விளையாடுகின்ற வேகத்தைப் பார்க்கலாம்.
அவள் பந்தை அடிக்கும் போது,
அவளது மனம் முந்தித் தீர்மானிக்கிறதா?
கண்கள் முந்தித் தீர்மானிக்கின்றனவா ?
அல்லது கைகள் தானே சென்று பந்தை அடிக்கின்றனவா?
எப்படி இந்த வேகம்? என்று வியப்பு.
படத்தில் இந்தப் பாட்டு வரும் சூழலைப் பார்க்கின்ற பொழுது, இந்தப் பாட்டுக்கும் பாடல் காட்சிக்கும் ஒரு பொருத்தமும் இருக்காது.
Comments
Post a Comment
Your feedback