Skip to main content

காற்றின் மொழி...ஒலியா? இசையா?- நுட்ப அணி

 

 மொழி என்ற படத்தில் 

காற்றின் மொழி என்ற ஒரு பாடலைக் கேட்டிருப்போம்.

இந்தப் பாட்டில் நுட்ப அணி பயன்படுத்தப்பட்டிருக்கும்.


பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளமுடியாத ஒரு பெண். ஓசை பயனளிக்காது என்ற நிலையில் சைககளே மொழியாகிறது. இது பின்புலம்.

பேச்சு மொழி பயன்படாத நிலையில் இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மொழியில்லாமலே புரிதல் நிகழ்கிறதே. இது சிந்தனை.


மொழியில்லாத பூ சொல்லும் செய்தி  வண்டுக்குப் புரிகிறது. 

பூவின் மொழி புரிய வேண்டும் என்றால் பூவோடு தன் வாழ்க்கையைப் பொருத்திக் கொண்ட வண்டின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவேண்டும். 


வண்டின் வாழ்க்கையில் செய்திகள் வந்து போவதெல்லாம்  உடம்பு, வாய், மூக்கு, கண் வழியாகத் தான்.  அதாவது,

தொடுதல் புரியும்.

சுவைத்தல் புரியும்.

முகர்தல் இயலும்.

பார்க்க முடியும். 


இதில் தொடுதலும் சுவைத்தலும் தொலைவில் இருந்து செய்யமுடியாதவை. அதனால் தான் எங்கோ  இருக்கிற வண்டினை வரவழைக்க பூவுக்கு நிறமும் மணமும்.


வண்டினை பூ எந்த மொழியில் அழைக்கிறது?

பகலில் மலரும் பூவுக்கு நிறமும் மணமும் மொழியாக, இரவில் மலரும் பூவுக்கு மணமே மொழியாகிறது. ஒரு நிலையில் பூ   அழைக்காத போது கூட வண்டு வந்துவிடுகிறது. அது instinct. அப்போது மணமும் நிறமும் கூட தேவையில்லாமல் போய்விடுகிறது.  

தேடல் உள்ள உயிர்கள் மொழியைக் கடந்தும் பேசிக்கொள்ள முடியும். இந்த உள்ளுணர்வு வசப்படும் வரைக்கும் பூவுக்கு மொழி மணமா நிறமா என்ற கேள்விக்குப் பதில் தேட நுட்பமாக யோசிக்கவேண்டும்.


ஒலி என்பது போலியில்லாதது. பறவைகள், விலங்குகள் எழுப்புவது ஒலி. இசை என்பது அறிவும் கற்பனையும் கலந்த செயற்கை. இரண்டும் காற்றிலிருந்து பிறந்தாலும் நுட்பமான வேறுபாடு கொண்டவை.


கடலையும் காதலையும் கூட இந்தக் கேள்விகள் யோசிக்க வைக்கின்றன. இயற்கையின் மொழி புரியும் போது அதாவது ஒலியின் மொழி புரியும் போது அதுவே இசையும் ஆவதைப் புரிந்துகொள்ள முடியும் 


இப்படி நன்கு தெரிந்து வேறுபட மொழியாது குறிப்பினாலும் தொழிலினாலும் அரிதாக உணரும் தன்மை கொண்டு விளங்குவது நுட்ப அணியாகும்.


தெரிபு வேறு கிளவாது குறிப்பினும் தொழிலினும்

அரிதுணர் வினைத்திறம் நுட்பம் ஆகும்"-

(தண்டி நூற்பா 63)


பாடல் அடிகளில் சில...


காற்றின் மொழி...ஒலியா? இசையா?

பூவின் மொழி....நிறமா? மணமா?

கடலின் மொழி...அலையா? நுரையா?

காதல் மொழி...விழியா? இதழா?

(இது யாருடைய வரிகள் என்று தெரியவில்லை)


நுட்ப அணி குறிப்பு நுட்பம்,

தொழில் நுட்பம் என இரு வகைப்படும்.


பிறருடைய கருத்தை அறிந்துகொண்டு, அதற்குத் தமது கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனை, அரிதாக நோக்கி உணர்ந்து கொள்ளும் வகையில் குறிப்பால் தெரிவிப்பது குறிப்பு நுட்பம் எனப்படும். 


குறிப்பு என்பது, மனத்தில் கருதியதைக் கண், முகம் போன்ற உடல் உறுப்புகளின் செயல்பாட்டால் தெரிவிப்பது ஆகும்.


தோழியர் கூட்டத்தின் நடுவே இருக்கும் தலைவி, உலகத்தில் படர்ந்த இருளை அடியோடு போக்கும் கதிரவனைப் பார்த்துவிட்டுப் பின்பு மேற்குத் திசையைப் பார்க்கின்றாள். இந்தக் குறிப்பு, தலைவனுடைய மென்மையான உயிருக்குப் பாதுகாவலைத் தந்தது.


காதலன் மெல் உயிர்க்குக் காவல் புரிந்ததால்,

பேதையர் ஆயம் பிரியாத - மாதர்

படர்இருள்கால் சீக்கும் பகலவனை நோக்கிக்

குடதிசையை நோக்கும் குறிப்பு


(பேதையர் = மகளிர்; 

ஆயம் = தோழியர் கூட்டம்; 

மாதர் = தலைவி; 

சீக்கும் = போக்கும்; 

குடதிசை = மேற்குத் திசை;

 குறிப்பு = உள்ளக் கருத்து.)


பாடலில் என்ன நுட்பம்?


தலைவன் பகல் பொழுதில் தலைவியைச் சந்திக்க வேண்டி வருகிறான். அப்பொழுது தலைவி தோழியர் கூட்டத்தின் நடுவில் இருக்கிறாள். எனவே மாலை வந்து தன்னைச் சந்திக்குமாறு அவனிடம் கூற விரும்பினாள். 

 ஆனால் தோழியர்கள் தன்னைச் சூழ்ந்திருப்பதால் அதனை அவனிடம் சொற்களால் கூற முடியவில்லை. எனவே குறிப்பாக அதனை உணர்த்த விரும்புகிறாள். 

    கதிரவனைப் பார்த்துவிட்டு உடனே மேற்குத் திசையை நோக்கித் திரும்பிப் பார்க்கின்றாள். இக்குறிப்பினால் கதிரவன் மறைந்த பின்பு வந்து தன்னைச் சந்திக்குமாறு தலைவனுக்கு உணர்த்துகிறாள். தலைவனும் அக்குறிப்பின் உள்பொருளை அறிந்து கொள்கிறான். இவ்வாறு தலைவி தனது கருத்தைத் தலைவனுக்குக் குறிப்பால் நுட்பமாக உணர்த்தியமையால் இப்பாடல் குறிப்பு நுட்பமாயிற்று.


அடுத்தது தொழில் நுட்பம்:


தன்னுடைய கருத்தை வெளிப்படையாகக் கூற முடியாத நிலையில் அதனைத் தான் செய்து கொண்டிருக்கும் செயலின் மூலம் குறிப்பாக உணர்த்தல் தொழில் நுட்பம் எனப்படும்.


பாடல் பயிலும் பணிமொழி தன்பணைத்தோள்

கூடல் அவாவால் குறிப்பு உணர்த்தும் - ஆடவற்கு

மென்தீம் தொடையாழின் மெல்லவே தைவந்தாள்

இன்தீம் குறிஞ்சி இசை.


(பணிமொழி - பணிவான சொற்கள், குளிர்ந்த சொற்கள்; 

பணை - பருத்த; 

கூடல் - புணர்ச்சி; 

அவா - விருப்பம்; 

தொடை - நரம்பு; 

தீம் - இனிய; 

தைவந்தாள் - நரம்பை வருடிப் பாடினாள்.)


பாடலின் பொருள்:

எல்லாரோடும் பாடிக்கொண்டிருக்கும் தலைவி, தலைவனைத் தழுவ வேண்டும் என்னும் விருப்பத்தாலே, அவனுக்குத் தன்னுடைய உள்ளக் கருத்தைக் குறிப்பாக உணர்த்த வேண்டி, தான் இசைத்துக் கொண்டிருந்த மெல்லிய இனிய நரம்பை உடைய யாழில் இனிய குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடினாள்.


இதில் உள்ள நுட்பம் என்ன? 


குறிஞ்சி என்பது புணர்தலும் புணர்தல் நிமித்தமும். அதாவது சேர்ந்திருத்தல். யாழ் மீட்டிப் பாடிக் கொண்டிருக்கிறாள் தலைவி, அந்நேரத்தில் தலைவன் வருகின்றான். தலைவி தலைவனிடம் தனக்குள்ள விருப்பத்தைக் தெரிவிக்க நினைக்கிறாள். ஆனால் அதனைப் பிறர் முன்பாக அவனிடம் நேரிடையாகத் தெரிவிக்க அவளால் முடியவில்லை. எனவே அவள் அதனைக் குறிப்பாக அவனுக்கு உணர்த்த வேண்டி, யாழில் குறிஞ்சிப் பண்ணை மீட்டிப் பாடத் தொடங்கினாள்.  

இந்த மென்மையான உணர்வுகளைப் புரிந்து கொள்வதும் ஒரு வகையில் மனவளம் பேணுதல் தான். அதனால் தான் இன்று தமிழ் இலக்கியங்கள் உளவியல் நோக்கில் ஆராயப்படுகின்றன.

Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...