அவசரமான தேவை. ஆனால் கையில் பணம் இல்லை. யாரிடமாவது பண உதவி கேட்க வேண்டி வரும் போது ஒரு மாதிரியாக அவஸ்தைப் படவேண்டி வரும்.
கேட்கவும் சங்கடம்.
கேட்காமல் இருக்கவும் முடியாத நிலை.
காதல் வந்த பெண்களும் அப்படித் தான் அவஸ்தைப் படுவர்களாம்.
ஆசை அவசரமான செலவு போலவாம். நாணம் உதவி கேட்கப் போகும் போது வருமே அவஸ்தை அது மாதிரியாம்.
அந்தப் பெண்ணுக்கு சேர மன்னன் மேல் காதல். அவனுக்கு அது தெரியாது. சேரன் வீதி உலா வரும்போது அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசை.
சேர மன்னன் இப்போது இவள் வீட்டு வழியாகத் தான் போகப் போகிறான்.
அவனைப் பார்க்க அவசரம் அவசரமாக ஓடிப் போய் கதவைத் திறக்க கதவில் கை வைக்கிறாள்.
அப்போது பார்த்து எங்கிருந்து வந்ததோ அந்த வெட்கம். நான் போய் எப்படி அவனை நேரில் பார்ப்பது என்று தயக்கம். அந்த வெட்கத்தில் கதவை அடைத்துவிட்டு வந்துவிட்டாள்.
அவசரச் செலவுக்கு பணம்கேட்டு அடுத்தவனைப் பார்க்கப் போகும் அவஸ்தை தான் அந்தப் பெண்ணுக்கு இப்பொழுது .
ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்
காணிய சென்று கதவுஅடைத்தேன் நாணிப்
பெருஞ்செல்வர் இல்லத்து நல்கூர்ந்தார் போல
வரும்செல்லும் பேரும்என் நெஞ்சு.
(முத்தொள்ளாயிரம்)
சொல்லும் பொருளும்
ஆய்- ஆராய்ந்து
மணி - மாணிக்கம்
பைம் - பச்சை நிறமான
பூண் - பூண் பதித்த
அலங்கு - ஆடும்
தார் - மாலை
கோ - அரசன்
காணிய - காண
நாணி - வெட்கப்பட்டு
நல்கூர்ந்தார் - ஏழை
நல்குரவு - ஏழ்மை
பேரும் - நகரும்
(பேர்த்தல்- நகர்த்தல்)
நெஞ்சு - மனம்.
Comments
Post a Comment
Your feedback