Skip to main content

Posts

Showing posts from December, 2025

மழையிலே கரையுதே மண் பானை

அவள் நினைவில் அவன் ....  தானே தனியே தான் நெஞ்சத்தொடு சொல்லிக்கொள்கிறான். நெஞ்சே! நீ அவளையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறாய். பச்சை மண்ணில் செய்த மண் பானை மழைக்குள் கிடந்து கரைந்து போவது போல கொஞ்சம் கொஞ்சமாக அவள் நினைவில் கரைந்து போகிறாய். பாவம் இப்படி உருகுகிறதே அவன் நெஞ்சம்  என்று நினைத்து  யாராவது நல்ல வார்த்தை சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால்  எல்லாரும்  பழி தான் சுமத்திப் பேசுகிறார்கள். ஆனாலும் என் நெஞ்சே!  உள்ளம் தாங்க முடியாத இந்த வெள்ளத்திலும் நீ எப்படியோ போராடிக்கொண்டிருக்கிறாய். இப்போதும் எனக்கு ஓர் ஆசை.  அதோ பார்!  அந்த உச்சிக் கிளையில் ஒரு தாய்க்குரங்கு தன் குட்டியை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அப்படி யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதமான அரவணைப்பில் நான் சொல்வதை  ஆறுதலாக கேட்டுக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் யாரும் இல்லையே எனக்கு. நல் உரை இகந்து, புல் உரை தாஅய், பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும் பெரிதால் அம்ம நின் பூசல், உ...

25 டிசம்பர்

 25 டிசம்பர் 1741  ஸ்வீடனில் உப்ப சாலா என்னும் இடத்தில் ஆண்டர்ஸ் செல்சியஸ் என்பவர் சென்டி கிரேட் வெப்பமானியை தயாரித்தார்.  25 டிசம்பர் 1796 இராணி வேலுநாச்சியார் மறைந்த தினம். இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை இவர்.   25 டிசம்பர் 1821  மைக்கேல் பாரடேவின் முதல் மின்மோட்டார் ஆய்வு வெற்றிகரமாக நடந்தது.   25 டிசம்பர் 1892   சுவாமி விவேகானந்தர் கன்னியாகுமரியில் கடலின் நடுவில் உள்ள ஒரு பாறையில் அமர்ந்து தனது மூன்று நாள் தியானத்தை தொடங்கினார். 25 டிசம்பர் 1924 முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பிறந்த நாள். 25 டிசம்பர் 1931   பா. வே. மாணிக்க நாயக்கர் மறைந்த தினம்.   தமிழில் பல அறிவியல் நூல்களை எழுதிய தமிழறிஞர் இவர்.  தமிழ் எழுத்துக்களைக் கொண்டு உலகின் எல்லா மொழிச் சொற்களையும் எழுத முடியுமென்று நிரூபித்தவர்.   25 டிசம்பர் 1972 இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் ஆக இருந்தவரும் தமிழக முதல்வராக இருந்தவரும் புகழ்பெற்ற எழுத்தாளரும் அரசியல் சாணக்கியர் என்று அழைக்கப்படுபவருமான ராஜாஜி  (...

24 டிசம்பர்

 24 டிசம்பர் 1582   லண்டனில் இன்று முதன்முதலாக குழாய் மூலம் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம்  தொடங்கப்பட்டது. 24 டிசம்பர்1912  வ. உ. சிதம்பரம்பிள்ளை இன்று சிறையிலிருந்து விடுதலையானார். சிறை வாசலில் அவரை வரவேற்க காத்திருந்தவர்கள் அவரது மனைவி, மகன்கள், சுவாமி வள்ளிநாயகம், கணபதி, சுப்ரமணிய சிவா ஆகியோர் மட்டுமே. 24 டிசம்பர்1921  வேல்ஸ் இளவரசர்  இன்று கல்கத்தாவிற்கு வருகை புரிந்தார். அவரது வருகையை எதிர்த்து நகரில் பொது ஹர்த்தால் நடந்தது. ஒருவரும் பணிக்கு வராததால் ஐரோப்பிய நிறுவனங்களும் அலுவலகங்களும் தங்களது அலுவலகங்களை மூட வேண்டியதாயிற்று 24 டிசம்பர்1973 பெரியார் என்கிற ஈ.வே.ராமசாமி காலமானார். 24 டிசம்பர்1987  தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் ஆட்சி புரிந்த எம்.ஜி.ராமச்சந்திரன் காலமானார். 24 டிசம்பர்1989  நாட்டின் முதல் பொழுதுபோக்கு பூங்கா எஸ் எல் வேர்ல்ட் பம்பாயில் திறந்து வைக்கப்பட்டது  ***** ஆர்டிக் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 24ஆம் தேதி 24 மணி நேரமும் இரவாகவே இருக்கும்.

இன்னுமொரு வானம்

இந்த நாட்கள் இப்படியே போய்விடாது. நமக்கான நாட்கள் காத்துக்கொண்டிருக்கின்றன.  எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் 'இனிய தருணங்கள் இனி வரப்போகின்றன' என்ற  ஆழமான எண்ணம் தான் வாழ்க்கையை உயிர்ப்போடு வைத்திருக்கிறது.  மழையே இல்லாமல் வறண்ட பூமியில் காய்ந்து சருகாகிப் போன புல்லை அற்பமாக நினைக்க முடியாது. சின்னதாக ஒரு  மழை வந்தாலே போதும். வறண்ட அந்தப் புல் துளிர்க்கும்.  அதில் குட்டிக் குட்டியாக சில பூக்களும் தலைகாட்டும்.  காய்ந்து கிடந்த பூமியில் சருகாகக் கிடந்த புல்லைப் பார்க்கும்போதே நாளைக்கு அது பூவோடு பூரித்து நிற்கும் அழகைப் பார்க்கத் தெரிந்து கொண்டால் அது தான் வாழ்க்கை. எல்லையில்லாத தூரத்தில் சூரிய வெளிச்சம் எட்டாத தூரத்தில் கூட  சூரியன் இருக்கிறது தானே. இங்கிருந்து பார்க்கும்போது வெளிச்சம் மறைந்திருப்பதை இருட்டாக நினைத்துக்கொள்கிறோம். இந்த நாள் இப்படியே நீளாதா என்று சின்ன சந்தோஷத்துக்குப் பெரிதாக ஏங்குகிறோம். இனி வரும் நாட்களில் எத்தனை பெரிய சந்தோஷங்கள் ஒளிந்திருக்கின்றன என்று தெரியாததால். பசுமை மாறாத சிறிய இடத்தைப் பார்க்கிறோம். பசுமை ஆகப்போகும் அகண்ட நிலத...

23 டிசம்பர்

 23 டிசம்பர் 1789  காது கேட்காத, வாய் பேச முடியாதவர்களுக்கான முதல் பள்ளிக்கூடம் அமைத்தவரும் ஒரு கை சைகை மொழியை உருவாக்கிய வருமான பிரெஞ்ச் அறிஞர் சார்லஸ் மைக்கேல் அபிதெல் எப்பா பாரிஸ் நகரில் காலமானார் 23 டிசம்பர் 1922  லண்டன் பிபிசி வானொலி நிலையம் முதன் முதலாக குழந்தைகளுக்காகவே குழந்தைகள் நேரம் என்று ஒரு நிகழ்ச்சியை துவக்கியது. 23 டிசம்பர் 1922  பிபிசி தினமும் செய்திகளை ஒலிபரப்ப ஆரம்பித்தது. 23 டிசம்பர் 1969  அமெரிக்க விண்வெளி வீரர்களான ஆர்ம்ஸ்ராங்கும் ஆல்ரினும் நிலாவிலிருந்து கொண்டு வந்த நிலாப்பாறை டெல்லியில் பொதுமக்கள் பார்ப்பதற்காக காட்சிப் பொருளாக வைக்கப்பட்டது. 23 டிசம்பர் 1981  தியாகி கக்கன் மறைந்த  நாள்.  23 டிசம்பர் 2004    இந்தியாவின்  முன்னாள் பிரதமர் பி. வி. நரசிம்ம ராவ்  மறைந்த நாள். தென் இந்தியாவிலிருந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு வரமுடியும் என்பதை முதன் முதல் நிரூபித்தவர் இவர். இந்தியாவில் பொருளாதார சீர்திருத்தங்களின் தந்தை என அழைக்கப்படுகிறார். பல மொழிகள் அறிந்தபோதும் குறைவாகப் பேசுவது இவரது வெற்றிக்கான சூத்திரம்....

வாழ்க்கை எப்போதும் வரலாறாகாது!

 ஒவ்வொரு நாளும் புதிய புதிய முகங்கள்...புதிய நிகழ்வுகள்... புதியவை படரப் படர... பழைய நினைவுகள் அமிழ்ந்து போகின்றன. நிகழ்காலத்தின் ஆக்கிரமிப்பு கடந்த கால நினைவுகளை மங்கிப் போகவைத்து விடுகிறது.  அனுபவித்த ஒவ்வொரு நாளையும் மீண்டும் நினைவடுக்குகளுக்குக் கொண்டு வந்து அசைபோட நினைத்தாலும் அதை சிந்தாமல் சிதறாமல் அப்படியே கொண்டுவர முடிவதில்லை.  வாழ்ந்து கடந்த நாட்களின் பூரணத்தை நம்மால் மீண்டும் கொண்டுவருவது முடியாதபோது வாழ்க்கை வரலாறு என்பது வாழ்ந்தவர்களின் உண்மை வரலாறு என்று யார் நம்புவார்கள்? அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்களை வைத்துக்கொண்டு கற்பனையில் எழுதப்படுவது தானே வாழ்க்கை வரலாறு! தன்னுடைய வாழ்க்கையையே முழுதாக யாராலும் நினைவுபடுத்த முடியாதபோது யாரைப் பற்றியோ யாரோ எழுதும் வரலாறு எப்படி இருக்கும்? இப்படி ஒரு கேள்வி இந்தக் கவிதையில். இது Walt Whitman (வால்ட் விட்மன்) எழுதிய கவிதை. புத்தகங்களைப் பற்றிப் பேசும் கவிதை இது. ஆனால் பேசப்படுவது புத்தகம் அல்ல வாழ்க்கை.  When I read the book, the biography famous, And is this, then, (said I,) what the author calls a m...

22 டிசம்பர்

  22 டிசம்பர் 1887 அன்னை சாரதாதேவி   பிறந்த நாள்.   22 டிசம்பர் 1887 ராமானுஜன்  பிறந்த நாள்.   கடவுள் கொடுத்தது என்னவோ மிகக்குறைந்த ஆயுளும் வறுமையும் தான். சாதிப்பதற்கு நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் ஒரு பொருட்டல்ல என்பதை உணர்த்திய வாழ்க்கை அது.  அது 1887 டிசம்பர் 22. ஈரோட்டில் ஒரு ஏழை அந்தணர் குடும்பத்தில்  குழந்தை ராமானுஜன்  பிறந்த நாள். அவருடைய தந்தையார் ஒரு துணிக்கடையில்   கணக்கு எழுதும் வேலை செய்து வந்தார். அவர் குடும்பம் கும்பகோணத்திற்கு இடம் பெயர்ந்தது. படித்தது வளர்ந்தது எல்லாம் கும்பகோணத்தில் தான். 7 வயதில் கும்பகோணம் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். அந்த வயதிலேயே கணக்கில் ஏதாவது சூத்திரத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கும்  வழக்கம் அவருக்கு இருந்தது. பன்னிரண்டாம் வயதில் தானே தன்னுடைய பாடத்திட்டத்தில் இல்லாத கணிதப் புத்தகங்களைப் படிக்கும் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டார். அப்படி அவர் படித்த ஒரு புத்தகம்  Loney's  Plane Trigonometry.  ஆசிரியர் உதவியில்லாமலேயே   Sum & Products of Infinite Sequ...

21 டிசம்பர்

21 டிசம்பர் 1871 எத்தனை முறை பழனி மலைக் கோவிலுக்குப் போயிருக்கிறோம்.  திருக்கோவிலில் உள்ள சித்திரங்களைக்  கவனித்திருக்கிறீர்களா?  அந்தச் சித்திரங்கள் அனைத்தும் 'சுப்பிரமணிய பராக்கிரமம்' என்ற நூலின் அடிப்படையில் அமைந்தவை. அந்த ' சுப்பிரமணிய பராக்கிரமம்' நூலை எழுதியவர் கதிரைவேற்பிள்ளை. அவர் வாழ்ந்தது வெறும் 33 ஆண்டுகள் மட்டுமே. 1874 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்த அவர் 1907 ஆம் ஆண்டு குன்னூரில் மறைந்தார். பிறந்தது இலங்கை யாழ்ப்பாணம் என்றாலும் அவர் வாழ்க்கையின் பயனை அனுபவித்தது தமிழகம் தான். சென்னையில் அவர் ஆசிரியராக இறந்த காலத்தில் திருவிக அவருடைய மாணவர். சைவ நெறியில் அளவில்லாத பற்றுக்கொண்டவர்.  சைவத்துக்கு மேல் ஒரு சமயமில்லை.பன்னிரு திருமுறைக்கு மேல் ஒரு அருட்பா இல்லை  என்பது அவர் கொள்கை.   வள்ளலார் தான் எழுதிய பாக்களுக்கு திருஅருட்பா என்ற பெயர் சூட்டியபோதும், அப்பாக்களை சிவபெருமான் திருத்தலங்களில் திருமுறைக்குப் பதிலாக ஒதும் போதும் அதை எதிர்த்தவர். அவை அருட்பா அல்ல மருட்பா என்றார். அப்படிச் சொன்னதால் அவர் மீது சென்னையில் வழக்குப் பதியப்பட்டது.  த...

20 டிசம்பர்

 20 டிசம்பர் 1876  பங்கின் சந்திர சட்டோபாத்தியாயா வந்தே மாதரம் என்னும் தேசியப்  பாடலை எழுதினார். 20 டிசம்பர் 1996 அமெரிக்க வானியல் ஆராய்ச்சியாளரும், பல நூறு ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வெளியிட்டவருமான கார்ல் சாகன் மறைந்த நாள்.   உயிர்களின் தோற்றம் பற்றிய எல்லோருக்கும் புரியும்படியான இவரது ஒரு விளக்கம் கார்ல் சாகன் காலெண்டர் என உலகப் புகழ் பெற்றது. கார்ல் சாகன் (Carl Sagan)  பேரண்டத்தின் வரலாற்றை ஓர் ஆண்டுக்குள் சுருக்கிக் காட்டுகிறார்.  ஜனவரி 1 ஆம் நாள் பிரபஞ்சம் (Big Bang) தோன்றியதாகவும்,  மே 1 ஆம் நாள் ஆகாய கங்கை (Milky Way) தோன்றியதாகவும், செப்டம்பர் 25 ஆம் நாள் முதல் உயிரினம் பூமியில் தோன்றியதாகவும்,  டிசம்பர் 31 ஆம் நாள் இரவு 10.30 மணிக்கு முதல் மனிதன் தோன்றியதாகவும்  கார்ல் சாகன் குறிப்பிடுகிறார்.  அதாவது  உலகத்தின் வயது ஒரு வருடம் என்று கொண்டால் மனிதன் பிறந்து   90நிமிடம்  மட்டுமே ஆகிறது.  இதைத் தான் கார்ல் சாகன் காலண்டர் என்று கூறுகிறார்கள்.

19 டிசம்பர்

  19 டிசம்பர் 1961  கோவா விடுதலை நாள். போர்ச்சுகீசியர்களிடமிருந்து கோவா விடுவிக்கப்பட்டு இந்தியாவோடு சேர்ந்தது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 19 ஆம் தேதி  கோவா விடுதலை நாள் கொண்டாடப்படுகிறது .     19 டிசம்பர் 1994  தமிழறிஞர்  முத்தமிழ்க்   காவலர்  கி.ஆ.பெ ( கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை)     காலமானார். திருக்குறள் மேல் மிகுந்த ஈடுபாடு இவருக்கு உண்டு .  திருக்குறள் ஒன்றே வாழ்வை வளமாக்கும் நூல்  என்று நம்பியவர் இவர்.  தமிழின் சிறப்பு , தமிழ்செல்வம் , திருக்குறள் கட்டுரைகள் , திருக்குறள் புதைபொருள் , திருக்குறளில் செயல்திறன் , வள்ளுவரும் குறளும் , வள்ளுவர் உள்ளம் போன்ற பல நூல்களை எழுதியுள்ளார் .  19 டிசம்பர் 1997  டைட்டானிக் திரைப்படம் அமெரிக்காவில் இன்று வெளியானது. பின்னர் அது உலகம் முழுவதும் வெளியிடப்பட்டு சாதனைப் படங்களுள் ஒன்றானது.

டிசம்பர் 18

 18 டிசம்பர் 1398  தைமூர் டெல்லியை கைப்பற்றி சூறையாடினான்.  18 டிசம்பர் 1822  நல்லூர் ஆறுமுக நாவலர்  பிறந்த நாள்.  ஆறுமுக   நாவலர்  தமிழ் , ஆங்கிலம் , வடமொழிகளில் திறம் பெற்றவர். யாழ்ப்பாணத்தில் பிறந்தவர் .  பாதிரியார் பீட்டர் பெர்சிவல் பைபிளை தமிழில் மொழிமாற்றம் செய்ய இவரிடம் கோரினார் . இப்பணிக்கு ஆறுமுக நாவலரே தகுதியுடையவர் என்று அவர் தீர்மானித்தார் .  சைவ சிந்தாந்தத்தில் கைதேர்ந்த ஆறுமுக நாவலரின் பைபிள் தமிழ் மொழிபெயர்ப்பு அறிஞர்களை வியப்புறச் செய்தது .  தொல்காப்பியம் , நன்னூல் உள்ளிட்ட இலக்கண நூல்களை அச்சேற்றியவர் ஆறுமுக நாவலர். நல்லை நகர் ஆறுமுகநாவலர் பிறக்கிலரேல் சொல்லும் தமிழ்எங்கே !  ( ஆறுமுக நாவலர் பற்றி   சி.வை. தாமோதரனார்  )  18 டிசம்பர் 1932   எழுத்தாளர் தீபம் நா.பார்த்தசாரதி பிறந்த நாள்.  தீபம் என்ற இலக்கிய இதழை நடத்தி வந்ததால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என்ற அடைமொழியுடன் அறிமுகமானவர் இவர்.   18 டிசம்பர் 1988 தமிழ் இலக்கிய உலகில் க.நா.சு என்று குறிப்...

காற்றின் மொழி...ஒலியா? இசையா?- நுட்ப அணி

   மொழி என்ற படத்தில்  காற்றின் மொழி என்ற ஒரு பாடலைக் கேட்டிருப்போம். இந்தப் பாட்டில் நுட்ப அணி பயன்படுத்தப்பட்டிருக்கும். பேச்சு மொழியைப் புரிந்து கொள்ளமுடியாத ஒரு பெண். ஓசை பயனளிக்காது என்ற நிலையில் சைககளே மொழியாகிறது. இது பின்புலம். பேச்சு மொழி பயன்படாத நிலையில் இயற்கையின் ஒவ்வொரு அசைவிலும் மொழியில்லாமலே புரிதல் நிகழ்கிறதே. இது சிந்தனை. மொழியில்லாத பூ சொல்லும் செய்தி  வண்டுக்குப் புரிகிறது.  பூவின் மொழி புரிய வேண்டும் என்றால் பூவோடு தன் வாழ்க்கையைப் பொருத்திக் கொண்ட வண்டின் வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கவேண்டும்.  வண்டின் வாழ்க்கையில் செய்திகள் வந்து போவதெல்லாம்  உடம்பு, வாய், மூக்கு, கண் வழியாகத் தான்.  அதாவது, தொடுதல் புரியும். சுவைத்தல் புரியும். முகர்தல் இயலும். பார்க்க முடியும்.  இதில் தொடுதலும் சுவைத்தலும் தொலைவில் இருந்து செய்யமுடியாதவை. அதனால் தான் எங்கோ  இருக்கிற வண்டினை வரவழைக்க பூவுக்கு நிறமும் மணமும். வண்டினை பூ எந்த மொழியில் அழைக்கிறது? பகலில் மலரும் பூவுக்கு நிறமும் மணமும் மொழியாக, இரவில் மலரும் பூவுக்கு மணமே மொழியாகிறது. ...

யானை மேல் ரொம்ப அக்கறை

  பெண்கள் , தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்த  நினைத்தால் வெட்கம்  தடுக்கிறது.  பாண்டிய மன்னன் வீதி உலா போகிறான். அவளுக்கு மன்னன் மேல் காதல். சொல்லவா முடியும் ? அவனைப்   பார்க்கவாவது செய்யலாம் என்றால் அவனைச் சுமந்து வரும் அந்த பட்டத்து பெண்  யானை வேக வேகமாக நடந்து சென்று விடுகிறது. யானையிடம் அவள் சொல்கிறாள்... "ஏய் யானை,   நீ இப்படி டங்கு டங்கு என்று வேகமாய் நடந்து போனால், ஊரில் உன்னைப் பற்றி என்ன சொல்வார்கள். இப்படி ஒரு அடக்கம் இல்லாமல் , ஒரு பெண் இருக்கலாமா என்று உன்னைப் பற்றி பழி பேசுவார்கள் அல்லவா? எனவே , மெல்லப் போ " . அந்த யானை மேல் ரொம்ப அக்கறை தான்! பாடல் எலா அ மடப் பிடியே எங்கூடல்க் கோமான் புலா அல் நெடு நல் வேல் மாறன் - உலாங்கால் பைய நடக்கவும் தேற்றாயால் நின் பெண்மை ஐயப் படுவது உடைத்து. (முத்தொள்ளாயிரம்) பொருள்: எலா அ மடப் பிடியே - ஏய் பெண் யானையே   எங்கூடல்க் கோமான் - எங்கள் பாண்டிய மன்னன் புலா அல் நெடு நல் வேல்  - எதிரிகளின் தசை ஒட்டியிருக்கும் நீண்ட வேலைக் கொண்ட மாறன் உலாங்கால் - அவன் உலா வர...

உப்பு வாங்க போக வேண்டாம்

  உப்பு வேணுமா?  ஆமா. போய்ப்  பார்த்து வாங்கிட்டு வாங்க! வாங்கிகிட்டு வந்துட்டேன்.  அதுக்குள்ள வாங்கிட்டு வந்துட்டீங்களா!  ஆமா.  உப்பு விற்றுக் கொண்டு போகிற அந்தப் பெண் நடக்கும் போது அவள் இடையோ இங்குமங்கும் மெல்ல அசைந்தது.   பூமாலை அணிந்த அவள் கூந்தலோ பின்புறம் அவள் இடைக்கும் தாழ்வாக நீண்டிருந்தது.  வாள் போன்ற கண்களோ இங்குமங்குமாய் பக்கங்களில் சென்றன.  அப்பெண் தன் அழகிய வாயைத் திறந்து வீடுகளின் முன்பாக உப்பு வாங்கலையோ உப்பு எனக் கூவியபடியே இருந்தாள்.  அப்பெண்ணின் ஒளிவீசும் புன்னகைக்கு கடலால் சூழப்பட்ட இந்த உலகம் கூட ஒப்பாகாது. நான் பார்த்து வாங்கிகிட்டு வரச்சொன்னது உப்பை! இடைநுடங்க ஈர்ங்கோதை பின்தாழ வாட்கண் புடைபெயரப் போழ்வாய் திறந்து-கடைகடையின்  உப்போஒ எனவுரைத்து மீள்வாள் ஒளிமுறுவற்கு  ஒப்பபோ நீர் வேலி உலகு.

இப்படியெல்லாம் தோன்றுமா?

  புத்தம் புது பூக்கள். பூத்த வாசம் மாறாமல் அவள் கூந்தலுக்கு வந்துவிட்டன. பூ வாசத்தை தேடி செடியென நினைத்து முகவரி தெரியாமல் வந்துவிட்டதால் அவள் கூந்தலில் வண்டுகள் அலை மோதுகின்றன.    கெண்டை மீன் போலத் தோன்றுகின்றன அவள் கண்கள். அது கண்ணா மீனா என்று தடுமாற்றம்.   அழகான அவள் குரல் கேட்டால் அது அவள் மொழியா அல்லது கிளி மொழியா என்று குழப்பம்.    அவள் வாயில் ஊறுவது கற்கண்டா தேனா கனியைப் பிழிந்தெடுத்த சாறா? அமுதா?. அது அமுதம் என்றால் அதை முனிவர்களுக்கும் கூடக் கொடுக்கலாமா?   காதல் வியாதி முத்திப் போனால் இப்படி எல்லாம் தோன்றுமா?     வண்டு மொய்த்தனைய கூந்தல் மதன பண்டாரவல்லி  கெண்டையோடு ஒத்த கண்ணாள் கிளிமொழி வாயின் ஊறல்  கண்டு சர்க்கரையோ தேனோ கனியடு கலந்த பாகோ  அண்டர் மாமுனிவர்க்கு எல்லாம் அமுதம் என்று அளிக்கலாமே!  (விவேக சிந்தாமணி  )