அவள் நினைவில் அவன் .... தானே தனியே தான் நெஞ்சத்தொடு சொல்லிக்கொள்கிறான். நெஞ்சே! நீ அவளையே நினைத்து உருகிக்கொண்டிருக்கிறாய். பச்சை மண்ணில் செய்த மண் பானை மழைக்குள் கிடந்து கரைந்து போவது போல கொஞ்சம் கொஞ்சமாக அவள் நினைவில் கரைந்து போகிறாய். பாவம் இப்படி உருகுகிறதே அவன் நெஞ்சம் என்று நினைத்து யாராவது நல்ல வார்த்தை சொன்னால் நன்றாக இருக்கும். ஆனால் எல்லாரும் பழி தான் சுமத்திப் பேசுகிறார்கள். ஆனாலும் என் நெஞ்சே! உள்ளம் தாங்க முடியாத இந்த வெள்ளத்திலும் நீ எப்படியோ போராடிக்கொண்டிருக்கிறாய். இப்போதும் எனக்கு ஓர் ஆசை. அதோ பார்! அந்த உச்சிக் கிளையில் ஒரு தாய்க்குரங்கு தன் குட்டியை மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறது. எனக்கு அப்படி யாராவது இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இதமான அரவணைப்பில் நான் சொல்வதை ஆறுதலாக கேட்டுக் கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? ஆனால் யாரும் இல்லையே எனக்கு. நல் உரை இகந்து, புல் உரை தாஅய், பெயல் நீர்க்கு ஏற்ற பசுங்கலம் போல உள்ளம் தாங்கா வெள்ளம் நீந்தி, அரிது அவாவுற்றனை நெஞ்சே! நன்றும் பெரிதால் அம்ம நின் பூசல், உ...