ஆண் குரங்குகள் பழங்களைப் பறித்து பெண் குரங்குகளுக்குக் கொடுத்துக் கொஞ்சுகின்றன. அப்பழங்களைத் தின்றும் வீணடித்தும் பெண் குரங்குகள் விளையாடுகின்றன. இவ்வாறு சிந்திய பழங்களை எங்களுக்குக் கொடுக்கக் கூடாதா என்று வானுலகில் வாழும் தேவர்கள் கேட்கிறார்கள். அந்தத் தேவர்களை காடுகளில் வாழும் வேடர்கள் தங்கள் கண் பார்வையாலேயே அழைக்கிறார்கள்.
வான் வழியாகச் செல்லும் சித்தர்கள் கீழிறங்கி இம்மலைக்கு வந்து சித்து வேலையைச் செய்கிறார்கள்.
மலையருவி கொட்டும்போது சாரல் மேல் நோக்கி உயர்ந்து பாய்ந்து வானத்தில் தெறிக்கிறது. அந்தச் சாரலினால் செந்நிறச் சூரியனின் தேரில் பூட்டிச் செல்லும் குதிரைகளின் கால்களும் தேர்ச் சக்கரமும் வழுக்குகின்றன. இப்படியாக இருக்கிறது அந்த மலை.
எந்த மலை?
வளைந்த இளம் பிறையைச் சூடிய சடை முடியை உடைய திருக்குற்றாலநாதராகிய சிவபெருமான் எழுந்தருளியுள்ள சிறப்பு மிக்க எங்கள் திருக்குற்றாலமலை.
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்
கானவர்கள் விழிஎறிந்து வானவரை அழைப்பர்
ககனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பர்
தேனருவித் திரையெழும்பி வானின்வழி ஒழுகும்
செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்
கூனல் இளம் பிறைமுடித்த வேணிஅலங் காரர்
குற்றாலத் திரிகூட மலைஎங்கள் மலையே.
(குற்றாலக் குறவஞ்சி)
சொல்லும் பொருளும்
வானரம் - ஆண் குரங்கு
மந்தி - பெண் குரங்கு
வான்கவி - தேவர்
கானவர் - வேடர்
திரை - அலை
பரி - குதிரை
கால் - சக்கரம்
கூனல் - வளைந்த
வேணி - சிவபெருமானின் திருமுடி
Comments
Post a Comment
Your feedback