Skip to main content

தேகம் ... யாக்கையாகக் கூடாதா?

  

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்...

உற்ற தேகத்தை உடல் மறந்தாலும்...

எனும்  ராமலிங்க அடிகளாரின் பாடலை பாடிக் கொண்டிருந்தார் மறைமலை அடிகளார்.

அப்போது தேகம் என்பது தமிழ்ச்சொல் அல்லவே என்று தோன்றியது அவருக்கு. 

பெற்ற தாய் தனை மக மறந்தாலும்...

உற்ற யாக்கையை உடல் மறந்தாலும்...

என்று சொல்லிப் பார்த்தார். 

தேகம் என்ற வடமொழிச் சொல் நீங்கி, யாக்கை எனும் தூய தமிழ் சேரும் என்பதால் மகிழ்வுற்றார். 

அந்த தினத்திலிருந்து வேற்று மொழி கலவாமல் தமிழ் பேசுவோம் என்று தன் குடும்பத்தாரிடம் கூறினார். இதுவே, அவரது தனித்தமிழ் இயக்கம் என்ற சிந்தனையின்  முதல் பொறி. 

 சுவாமி வேதாச்சலம் என்ற தனது பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். 

மிழர்கள் அனைவரும் கலப்படமின்றி தமிழ் பேச கடப்பாடு கொண்டால்  நல்ல நல்ல புதிய சொற்கள் கிடைப்பதோடு இன்று  இருக்கும் நல்ல சொற்கள் பயன்பாட்டில் இல்லாமல் போவது தடுக்கப்படும் என்று நினைத்தார்.

 தமிழ்ச்  சொற்களின் பயன்பாடு  குறித்த கவலை வெகு சிலருக்குத் தான் இருந்திருக்கிறது. அந்த வெகு சிலரில்  நிச்சயமாக மறைமலை அடிகளும் ஒருவர்.

1876-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் நாள் நாகப்பட்டினத்திற்கு அருகே அமைந்துள்ள காடம்பாடி எனும் சிற்றூரில் பிறந்தவர் மறைமலை அடிகள். இவரது பெற்றோர் சொக்கநாத பிள்ளை, சின்னம்மாள்.  பெற்றோர் அவருக்கு இட்ட இயற்பெயர் வேதாசலம்.

பெரியவரானதும் அவர் சைவ சமய சொற்பொழிவுகளை ஆற்றி வந்ததால் சுவாமி வேதாசலம் என்று அவரை அழைத்தனர் பொதுமக்கள். 

வெஸ்லியன் மிஷன் என்ற கிறிஸ்துவப் பள்ளியில் தொடக்கக் கல்வியைக் கற்றார் மறைமலை அடிகள். அங்கு ஆங்கிலம் முதல் மொழியாக இருந்ததால் ஆங்கிலத்தை நன்கு கற்றுத் தேர்ந்தார். 

வே. நாரயணசாமி பிள்ளை என்பவரிடம் தமிழ் இலக்கண இலக்கியங்களை கற்றுக் கொண்டார். அதோடு நின்று விடாமல் சமஸ்கிருத மொழியையும் நன்கு கற்றறிந்தார். எனவே அவருக்கு மூன்று மொழிகளில் புலமை இருந்தது. 

தமிழ் இலக்கியத்தில் அவருக்கு இருந்த தனியாத தாகத்தால் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சீவக சிந்தாமணி, பதினெண்கீழ்க்கணக்கு போன்ற  நூல்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்தார். 

சிறு வயதிலிருந்தே தன்னோடு பழகி வந்த செளந்தரம் என்ற பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் மறைமலை அடிகள்.

நாகை மீனலோசனி என்ற செய்தித்தாளுக்கு தகவல் சேகரித்துக் கொடுக்கும் பணியை அவர் மேற்கொண்டார். 

சைவ சித்தாந்தத்தில் பெயர் பெற்ற சோமசுந்தர நாயக்கரின் சொற்பொழிவுகளைப் பாராட்டி அந்த பத்திரிகையில் அவர் கட்டுரைகள் எழுதினார். அவற்றைப் படித்து ரசித்த நாயக்கருக்கு அவருடைய எழுத்தின் மீது ஈடுபாடு ஏற்படவே சித்தாந்த தீபிகை என்ற மாதப் பத்திரிகையின் ஆசிரியப் பணியில் மறைமலை அடிகளை அமர்த்தினார். அந்தப் பணியை விருப்பமுடன் செய்த அதே வேளையில் தமிழாசிரியராக வர வேண்டும் என்ற தமது விருப்பத்துக்காகவும் உழைத்தார் மறைமலை அடிகள். 

தமிழாசிரியர் பணித் தேர்வுக்கு தம்மை தயார் செய்து கொண்டார். அந்தப் பணிக்காக நடைபெற்ற நேர்முகத் தேர்வில் மறைமலை அடிகளின் புலமையை சோதித்தவர் அப்போது புகழ் பெற்றிருந்த பரிதிமார் கலைஞர் என்ற தமிழறிஞர்.

மறைமலை அடிகளின் புலமை அவருக்கு தமிழாசிரியர் பணியைப் பெற்றுத் தந்தது. மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்தார். 

பின்னர் சொந்தமாக இதழ் நடத்த விரும்பிய மறைமலை அடிகள் 1902-ஆம் ஆண்டு ஞானசாகரம் என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதன் பெயரை பின்னர் அழகு தமிழில் 'அறிவுக்கடல்' என்று மாற்றினார். 

ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள் கலப்படத்திலிருந்து தமிழை மீட்கவும், தனித்தமிழில் பேசவும், எழுதவும் தமிழர்களுக்கு ஊக்கமூட்ட முடிவெடுத்தார்.

 வெறும் பேச்சோடு நின்று விடாமல் அதற்கு ஒரு முன்னுதாரணமாக செயல்படத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தை நிறுவினார். அப்போதுதான் தன் பெயரை மறைமலை அடிகள் என்று மாற்றிக் கொண்டார். அவரைப் பின்பற்றி பல தமிழர்கள் தங்களுக்கு தூய தமிழில் பெயர் சூட்டிக் கொண்டனர்.

முல்லைப்பாட்டு, பட்டினப்பாலை போன்ற நூல்களுக்கு எளிமையான தமிழில் உரை எழுதினார். கடுமையான தமிழாக இல்லாமலும், கலப்புத் தமிழாக இல்லாமலும் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தூயதமிழை அவர் பயன்படுத்தினார். 

வடமொழியில் காளிதாசன் படைத்த சாகுந்தலா எனும் காதல் காவியத்தை தமிழில் மொழி பெயர்த்தார். 

  தமிழ், தமிழ் என்று மட்டும் அவர் கண்மூடி வாழவில்லை. ஆங்கில மொழி அறிவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார். ஆங்கிலத்தில் உள்ள நல்ல நூல்களைப் படித்தறியவும், நல்ல தமிழ் நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கவும் ஆங்கில அறிவு அவசியம் என்று அவரே கூறியிருக்கிறார்.

தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக்கால கட்டத்தில் வழக்கத்திலிருந்த நமஸ்காரம், ஜலம், சந்தோஷம், அபேட்சகர் போன்ற வடமொழி சொற்கள் முறையே வணக்கம், நீர், மகிழ்ச்சி, வேட்பாளர் என்றாயின. 

தமிழையே உயிர் மூச்சாக சுவாசித்த அவர் தம் வாழ்நாளில் மொத்தம் 56 நூல்களை எழுதினார். அவருக்கு கடவுள் பக்தி நிறைய இருந்தாலும் முற்போக்கு சிந்தனையும் அதிகமாக இருந்தது. தம் வாழ்நாளில் அவர் உயிராக மதித்தது  இரண்டு. ஒன்று தமிழ், மற்றொன்று மனைவி செளந்தரம். எனவே மனைவி இறந்த சில மாதங்களிலேயே பிரிவைத் தாங்காமல் அவரும் மரணத்தைத் தழுவினார். 

கடைசி வரை தமிழுக்காக உழைத்த மறைமலை அடிகள் 1950-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ஆம் நாள் தமது 75-ஆவது வயதில் காலமானார்.



Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...