கார் வாங்கும்போது சாதாரணமாக பயன்படுத்தும் ஒரு வார்த்தை 'கை'
முதல் கேள்வியே "புதுசா? செகண்ட் ஹேண்ட்டா? (Second hand)" என கையோடு துவங்கும்.
ரொம்ப பழைய கார் என்றால் "எத்தனை கைமாறி இருக்கிறது?" என்பது ஒரு கேள்வி.
ஒரு உரிமையாளரிடம் இருந்து மற்றவருக்கு உரிமையாவதைத் தான் 'கை மாறுவது' என்று கூறுகிறோம். இது change hands என ஆங்கிலத்திலும் அப்படியே கூறப்படுகிறது.
பழைய காரை செகண்ட் ஹேண்ட் என ஆங்கில மரபைக் கூறும்போதும் புதுக்காரை at first hand என்று கூறுவதில்லை. 'புதிய' என்பதே செய்தியைத் தெளிவாக கூறுவதால் at first hand அவசியப்படுவதில்லை போல!
'கைக்கு எட்டுவது' என்பது 'பக்கத்தில்' என்பதற்கு மாற்றாக நாம் பயன்படுத்துவது. At hand என்றாலும் 'பக்கத்தில்' என்றுதான் அர்த்தம்.
செய்ய முடியாத வேலை, சுமக்க முடியாத சுமை இவற்றின் போது மற்றவர்களிடம் உதவி கேட்க "ஒரு கை பிடியுங்கள்" என்பது ஒரு நளினமான வேண்டுகோள்.
இது,
Give me a hand
Lend me a hand
போல தமிழ் மரபாக இருப்பது. பசியே இல்லாத போதும் சாப்பிடப் போக வேண்டும் என்ற நிலையில் "போய்க் கையை நனைச்சிட்டு வந்துடுங்க" என்று சொல்வதுண்டு.
அதேநேரத்தில் 'கையை நனைப்பது' வேறு; 'கையைக் கழுவுவது' என்பது வேறு.
இந்த இரண்டும் நுட்பமான அர்த்தம் கொண்ட வேறு வேறு பயன்பாட்டுச் சொற்கள்.
"கையைக் கழுவிட்டு போய் விட்டான்" என்றால் அவனுக்கும் இதற்கும் தொடர்பில்லை என, பொறுப்பில் இருந்து நழுவிச் செல்வதைக் குறிக்கும். ஆங்கிலத்தில் இதே அர்த்தத்தில் தான் Wash his hands of பயன்படுத்தப்படுகிறது.
பெண் பார்ப்பது, மாப்பிள்ளை பார்ப்பது போன்ற புதிய உறவுகளைக் குறித்துச் சொல்லும்போது ,"கை கூடுகிற மாதிரித் தான் இருக்கு" என ஒரு இணக்கமான பதிலை சுருக்கமாகக் கூறுவது வழக்கம்.
பின்னாளில் இன்னும் சுருக்கமாக "கூடுகிற காரியத்துக்கு குறுக்கே சொல்லக்கூடாது" என கை வெளியே தெரியாமல் கூறப்படும் வழக்கம் வந்துவிட்டது.
இப்போது 'கை கூடுதல்' என்பது காரியசித்தி, அதாவது வெற்றிகரமான செயல் என்ற அர்த்தத்திலேயே கூறப்படுகிறது.
கடவுளை வணங்குவதை 'கை எடுப்பதாக' கூறுவதும் உண்டு.
"ஆத்தாவ கையெழுத்திட்டு போனால் எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் ஒருமுறையாவது காதில் விழுந்திருக்கும்.
"என்னதான் அவன் தப்பு பண்ணியிருந்தாலும் வளர்ந்த பையனை கை நீட்டக்கூடாது" என்று அப்பாவிடம் அம்மா சொல்வதை கேள்விப்பட்டிருப்போம்.
இதில் வரும் கைநீட்டுவது என்பது அடிப்பதுதான்.அதாவது manhandling போலத்தான்.
"யாரைப் பார்த்தாலும் கை நீட்டிக்கொண்டு இது என்ன கெட்ட பழக்கம்" என்று யாரையாவது திட்டினால் அவர் எதையாவது யாரிடமாவது எப்போதும்(பிச்சை) கேட்டுக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தம்.
கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பெண்ணை 'கைக்குள் போட்டுக் கொண்டதாக' டிவி சீரியல் நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கும்.
She has the control of her husband என்பதைக் கூற ,
She has the upper hand என்று கூறுவார்கள். இப்போதெல்லாம் பேசும்போது "நான் அப்பர் ஹேண்ட் எடுக்க விரும்பவில்லை" என்பது சர்வ சாதாரணமான பயன்பாடு ஆகிவிட்டது.
"கையிலேயே பிடிக்க முடியவில்லை" என்றால் புதியதாக ஒருவருக்கு முக்கியத்துவமோ வசதியோ வந்து இருக்கிறது என்று அர்த்தம்.
Give a big hand அல்லது give a good hand என்பது கைதட்டி ஒருவரை ஊக்கப்படுத்துவதற்காகக் கூறப்படுவது.
ஒருவன் தானே சொந்தமாக முடிவெடுக்க அனுமதிப்பதற்கு allow him a free hand என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள்.
'கைநிறையக் காசு' என்பதில் கை என்பது குறியீடாக செல்வ வளத்தைக் குறிக்கிறது. அதாவது குறையாத செல்வம் என்பது இதன் பொருள். 'மிகுதியாக' என்பதையும் இந்த 'கைநிறைய வழி' கூறுவார்கள்.
தான் சொல்வது அப்படியே நடக்க வேண்டும் என்பது ஒருவகை ஆதிக்கம். அப்படிப்பட்டவர்களை 'வலுத்த கை' என்பார்கள். சர்வாதிகாரத் தலைவர்களின் முடிவு தவறு என்றாலும் அதைச் செய்தே ஆக வேண்டும் என்பதே ஒரே வழி. இல்லையா?
இதை rule with a heavy hand என்று சொல்வார்கள்.
'முதல் மரியாதை' என்பது சிவாஜி கணேசன் நடித்த ஒரு படம். அந்தப் படத்தில் நடித்ததைப் பற்றி அவர் கூறும்போது "அந்தப் படத்தில் நான் எங்கே நடித்தேன்; கையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடந்து போகச் சொன்னாங்க. அவ்வளவு தான்" என்று ஒருமுறை கூறினார். அதாவது "சிரமப்பட்டு இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை; நடிப்பதற்கு அதில் ஒன்றும் வாய்ப்பில்லாத படம் அது. ஆனாலும் எந்த முயற்சியும் செய்யாமல் அந்த படம் வெற்றி பெற்று விட்டது" என்பது தான் அதன் பொருள்.
அப்படி முயற்சி இல்லாமல் வெற்றி பெறுவதை win hands down என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். அதாவது win easily என்பதுதான் அதன் அர்த்தம்.
Comments
Post a Comment
Your feedback