வானத்தில் நட்சத்திரங்கள் தவழ்வது போல தலையில் மண்டையோடுகளை மாலை போல அணிந்திருக்கிறாய்!
வேள்வித்தீயில் வந்த பாம்பை பெரியவீரன் போல கழுத்தில் நீ அணிகலனாக அணிந்திருக்கிறாய்.
எனக்கு அருள் புரியச் சொல்லி உன்னை எல்லா நாளும் நான் வணங்கிக்கொண்டிருக்கிறேன். ஆகவே என்னைக் கைவிட்டு விடாதே.
அப்படி ஒருக்கால் எனக்கு அருள்புரியாமல் என்னை நீ கைவிட்டுவிட்டால் உன்னைப் பார்த்து மட்டுமல்ல; உன் தேவியாரையும் பார்த்து எல்லோரும் ஏளனமாகச் சிரிக்கும்படி செய்து விடுவேன்.
என்ன செய்வேன் தெரியுமா?
நீ என்னைக் கைவிட்டு விட்டால் நான் திக்குத் தெரியாமல் தெருவில் அலைவேன். இல்லையா?
அப்போது என்னைப் பார்க்கும் எல்லோரும் "இப்படிப் பைத்தியம் போல தெருவில் அலைந்து கொண்டிருக்கிறாயே நீ யாரப்பா" என்று என்னைப் பற்றிக் கேட்பார்கள்.
அப்போது அவர்களிடம் நான் உன் அடியவன் என்று சொல்லுவேன். அதுவும் எப்படிச் சொல்லுவேன் தெரியுமா?
"உத்தரகோச மங்கையின் மணாளன் சிவபெருமானின் அடியவர்களின் அடியவன் நான் " என்று சொல்லுவேன்.
அதன் பிறகு அவர்கள் எல்லாம் உன்னைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
எனவே, நீ எனக்கு அருள் புரியவில்லை என்றால் எல்லோரும் உன்னைப் பார்த்துச் சிரிக்கும்படி செய்துவிடுவேன்.
உனக்கு அப்படி ஒரு கேவலம் வரக்கூடாது என்று நினைக்கிறேன். ஆகவே நீ எனக்கு அருள்புரிய வேண்டும் பெருமானே!
தாரகை போலும் தலைத்தலை மாலைத் தழலரப்பூண்
வீரஎன் றன்னை விடுதிகண் டாய்விடி லென்னைமிக்கார்
ஆரடி யான்என்னின் உத்தர கோசமங் கைக்கரசின்
சீரடி யார்அடி யானென்று நின்னைச் சிரிப்பிப்பனே.
(திருவாசகம்)
சொல்லும் பொருளும்
தாரகை - நட்சத்திரம்
போலும் - போல
தலை - தலைகளை அதாவது மண்டை ஓடுகளை
தலைமாலை - தலையில் அணிந்த மாலை
தழலரப்பூண் ( தழல் + அரவு + பூண் )- வேள்வித் தீயில் வந்த பாம்பை அணிகலமாக அணிந்த
வீர -வீரனே
என் றன்னை -என்னை
விடுதி கண் டாய் - விட்டு விட்டாதே
விடி லென்னைமிக்கார் -(விடில் + என்னை + மிக்கார்)- அப்படி நீ விட்டு விட்டால் , மற்றவர்கள்
ஆரடியான் யார் + அடியான்) - நீ யாருடைய அடியவன்
என்னின் - என்று கேட்டால்
நின்னைச் சிரிப்பிப்பனே. = உன்னைப் பார்த்து அவர்கள் சிரிக்கும்படி செய்வேன்
Comments
Post a Comment
Your feedback