பிழையில்லாமல் ஒரு வாக்கியம் எழுத, எழுவாய் பயனிலை செயப்படுபொருள் பற்றித் தெரிந்திருக்கவேண்டும் .
எழுவாய் என்றால்,
ஒரு வாக்கியத்தில் யாரைப் பற்றி அல்லது எதனைப் பற்றிய செய்தி சொல்லப்படுகிறதோ அதைக் குறிக்கும் பெயர் ( பெயர்ச்சொல்) தான் எழுவாய்.
அதாவது, யார்?, எது? என்ற கேள்விக்கு விடையாகக் கிடைப்பது எழுவாய்.
கண்ணதாசன் கவிஞர்.
இதில் கண்ணதாசன் எழுவாய்.
எப்படி?
இது கண்ணதாசனைப் பற்றிய செய்தி. அதனால் கண்ணதாசன் என்பது எழுவாய்.
அவன் பொய் சொல்லமாட்டான்.
இதில் அவன் என்பது எழுவாய்.
எப்படி?
இது அவனைப் பற்றிச் சொல்கிறது என்பதால்.
சில நேரங்களில் எழுவாய் வெளியே தெரியாமல் இருக்கும். அதைத் தோன்றா எழுவாய் என்று சொல்லுவார்கள்.
பொய் சொல்லக்கூடாது.
இது " நாம் பொய் சொல்லக்கூடாது" , " நீ பொய் சொல்லக்கூடாது" என்பதைப் போல புரிந்துகொள்ளப்படுகிறது.
"யார் பொய் சொல்லக்கூடாது ?" என்று கேட்க வேண்டிய அவசியமில்லையல்லவா, அதனால் தான் இது தோன்றா எழுவாய்.
பயனிலை என்றால்...
எழுவாயைப் பற்றிச் சொல்லப்படும் செய்தியை அல்லது ஒரு தொடரை பயனிலை என்று சொல்லுவார்கள்.
இது கணக்குப் புத்தகம்.
இது என்பது எழுவாய்.
கணக்குப் புத்தகம் என்பது பயனிலை.
எப்படி?
எழுவாய் இன்னதென்று சொல்வதால் இது பயனிலை.
கண்ணன் எழுதுகிறான்.
இதில் கண்ணன் என்பது எழுவாய்.
எழுதுகிறான் என்பது பயனிலை.
எப்படி?
எழுவாயின் செயலைக் குறிப்பதால் இது பயனிலை.
மாம்பழம் இனிக்கும்.
மாம்பழம் என்பது எழுவாய்.
இனிக்கும் என்பது பயனிலை.
எழுவாயின் இயல்பாய்க் குறிப்பதால் இனிக்கும் என்பது பயனிலை.
பாரதம் வாழ்க!
பாரதம் என்பது எழுவாய்.
வாழ்க என்பது பயனிலை.
எப்படி?
எழுவாயை வாழ்த்துவதால் இது பயனிலை.
(தலைவர் ஒழிக என்பதில் ஒழிக என்பது பயனிலை)
தம்பி வந்தானா ?
இதில் தம்பி என்பது எழுவாய்.
வந்தானா என்பது பயனிலை.
எழுவாயைப் பற்றி வினவியதால் இது பயனிலை.
ஆக, பயனிலை என்பதை எப்படிப் புரிந்துகொள்ளலாம்?
அது,
எழுவாய் இன்னதென்று கூறலாம்.
எழுவாயின் செயலைக் குறிக்கலாம்.
எழுவாயின் இயல்பு என்னவென்று சொல்லலாம்.
எழுவாயை வாழ்த்தவோ , பழிக்கவோ செய்யலாம்.
எழுவாயைப் பற்றி வினவலாம்.
செயப்படுபொருள் என்றால்...
எது அல்லது யார் செய்கிறார்களோ அது எழுவாய் என்று தெரியும்.
பயனிலை என்றாலும் தெரியும்.
செயப்படுபொருள் என்பது என்ன?
எதை? யாரை? எவற்றை? போன்ற வினாக்களுக்கு விடையாக வருவது செயப்படுபொருள்.
கபிலன் முட்டையை உடைத்துவிட்டான்.
எதை உடைத்துவிட்டான்?
முட்டையை .
எதை? என்பதற்கு விடையாக வரும் முட்டை செயப்படுபொருள்.
கபிலன் முட்டை தின்றான்.
எதைத் தின்றான்?
முட்டையை .
எனவே முட்டை என்பது செயப்படுபொருள்.
கபிலன் தின்றான்.
எதைத் தின்றான்.?
எதை என்று தெரியவில்லை. ஆனால் எதையோ தின்றான்.
எனவே செயப்படுபொருள் மறைந்திருக்கிறது.
கபிலன் தூங்குகிறான் ?
எதைத் தூங்குகிறான் ?
இது என்ன அர்த்தமற்ற கேள்வி என்று கேட்கத் தோன்றுகிறதா?
ஆமாம் இது அர்த்தமற்ற கேள்வி தான்.
அதனால் தான் இதில் செயப்படுபொருள் இல்லை.
Comments
Post a Comment
Your feedback