இளமைக் காலம் கடந்து போய்விட்டது.
இப்போது அவனும் அவளும் மட்டும் இருக்கிறார்கள்.
அவள் அவனிடம் சொல்கிறாள்.
உன் மனத்தை நானும் என் மனதை நீயும் முழுதாகப் புரிந்து கொள்ளவில்லை.
என் அழகில் நீயும் உன் அழகில் நானும் திளைத்திருந்தோம். அந்த அழகெல்லாம் எங்கோ போய்விட்டது.
உனக்கு இப்போது 60 வயதாகிவிட்டது. எனக்கோ நறுமணம் கமழும் கூந்தல் என நீ சொன்ன தலைமுடியெல்லாம் நரைத்துக்கொண்டிருக்கிறது.
நம் இளமை இப்போது இல்லை. நாம் நம் அழகில் கண்ட மயக்கம் கூட இப்போது இல்லை.
உன் மனமும் தடுமாறுகிறது.
இந்தப் பிறவியில் உன் மனதை என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம்.
உனக்கேற்ற துணையாக என்னால் வாழ முடிந்ததா என்று தெரியவில்லை. அடுத்த பிறவியில் நான் உன் மனம் போல நடப்பேன். நீ சொல்வதைக் கேட்டு நடப்பேன்.
நம் உள்ளம் நாம்
அறிந்திலம் நம்மை முன்னாள்
மம்மர் செய்த வனப்பு
இங்கு யாங்கு ஒளிந்தன
ஆறு ஐந்து இரட்டி ஆண்டு
உனக்கு ஆயது என்
நாறும் ஐந்து கூந்தலும்
நரை விரவுதல் உற்றன
இளமையும் காமமும் எங்கு
ஒளிந்தனவோ
உள்ளம் இல்லாள எனக்கு
இங்கு உரையாய்
இப் பிறப்பாயின் யான்
நின் அடி அடையேன்
அப் பிறப்பில் யான்
நின் அடி தொழில் கேட்குவன்
(மணிமேகலை)
சொல்லும் பொருளும்
அறிந்திலம் - அறியவில்லை
முன்னாள் - இத்தனை நாளும்
மம்மர் செய்த - மயக்கம் கொள்ளச் செய்த
வனப்பு - அழகு
யாங்கு ஒளிந்தன - எங்கே ஒளிந்து கொண்டது?
ஆறு ஐந்து இரட்டி ஆண்டு - 6 x 5 x 2 = 60 ஆண்டு
உனக்கு ஆயது - உனக்கு ஆகி விட்டது
என் நாறும் ஐந்து கூந்தலும் - மணம் கமழும் என் கூந்தலும்
நரை விரவுதல் உற்றன - நரைக்கத் தொடங்கிவிட்டது
இளமையும் - நம் இளமையும்
உள்ளம் இல்லாள - மனம் தடுமாறும் நீ
இங்கு உரையாய் - சொல்லுவாய்
இப் பிறப்பாயின் - இந்தப் பிறவியில்
யான் நின் அடி அடையேன் - நான் உன்னை அடையவில்லை
அப் பிறப்பில் - அடுத்த பிறவியிலாவது
யான் - நான்
நின் அடி தொழில் கேட்குவன் - நான் நீ சொல்வதை கேட்பேன்.
Comments
Post a Comment
Your feedback