பொருள் வேற்றுமை அணி
அணி விளக்கம்:
இருவேறு பொருள்களுக்கு இடையே ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமையணி எனப்படும்.
சான்று:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்(து) இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்(று) ஏனையது
தன்னேர் இலாத தமிழ்
பொருத்தம்:
தமிழுக்கும் கதிரவனுக்கும் இடையே உள்ள பயன் சார்ந்த ஒற்றுமையை முதலில் கூறி, அவற்றுள் தமிழ் தன்னிகர் இல்லாதது என்ற தன்மையைப் பின்னர் வேறுபடுத்திக் காட்டுவதால் இது பொருள் வேற்றுமை அணி ஆயிற்று.
நிரல் நிறை அணி
அணி விளக்கம்:
நிரல்- வரிசை
நிறை-நிறுத்துதல்
சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி அவ்வரிசைப்படியே அச்சொற்களோடு தொடர்புடைய சொற்களை அடுத்த வரிசையில் முறை மாறாமல் சொல்வது நிரல்நிறை அணி ஆகும்.
சான்று:
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.
பொருத்தம்:
இக்குறளில் அன்பு, அறன் என்பனவற்றை வரிசையாக நிறுத்தி அவற்றோடு தொடர்புடைய பண்பு, பயன் என்பனவற்றை முறையே அடுத்த வரிசையில் இணைத்துப் பொருள் கொள்ளுமாறு அமைக்கப்பெற்றுள்ளது.
எனவே இது நிரல் நிறை அணி ஆகும்.
ஏகதேச உருவக அணி
அணி விளக்கம்:
ஒரு செய்யுளில் கூறப்படும் இரு பொருட்களுள் ஒன்றை மட்டும் உருவகம் செய்து மற்றொன்றை உருவகம் செய்யாமல் விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
சான்று:
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.
பொருத்தம்:
சினத்தை நெருப்பாகவும் இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த நிலையில் உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டு விட்டதால் இது ஏகதேச உருவக அணி ஆயிற்று.
தொழில் உவமை அணி
அணி விளக்கம்:
தொழில் சார்ந்த உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து போல எனப் பொருள் தரும் உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி ஆகும்.
சான்று:
அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்துஒழுகு வார்.
பொருத்தம்:
இக்குறட்பாவில் தீக்காய்தல் என்னும் தொழில் அரசனோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே இது தொழில் உவமை ஆயிற்று.
உவமை அணி
அணி விளக்கம்:
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமை அணி ஆகும்.
சான்று:
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று.
பொருத்தம்:
குடங்கருள் பாம்போடு உடனுறைதல் என்பது உவமை.
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை என்பது உவமேயம்.
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து அற்று என்னும் உவம உருபு வெளிப்படையாக வந்துள்ளது.
எனவே இது உவமை அணி ஆயிற்று.
எடுத்துக்காட்டு உவமையணி
அணி விளக்கம்:
செய்யுளில் உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகவும் அமைந்து உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி ஆகும்.
சான்று:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.
பொருத்தம்:
துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் என்பது உவமை.
கள்ளுண் பவர் நஞ்சு உண்பவரே என்பது உவமேயம்.
உவமை ஒரு தொடராகவும் உவமேயம் ஒரு தொடராகும் அமைந்து அதுபோல என்ற உவம உருபு மறைந்து வந்துள்ளது. எனவே இது எடுத்துக்காட்டு உவமை அணி ஆயிற்று.
சொற்பொருள் பின்வருநிலையணி
அணி விளக்கம்:
செய்யுளில் முன்னர் வந்த சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளைத் தருவது சொற்பொருள் பின்வருநிலையணி ஆகும்.
சான்று1:
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
பொருத்தம்:
இக்குறட்பாவில் 'பொருள்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து 'செய்தி' என்ற ஒரே பொருளைத் தருகிறது. எனவே இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.
சான்று 2:
எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின்.
பொருத்தம்:
இக்குறட்பாவில் 'எண்ணிய' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து 'நினைத்த' என்ற ஒரே பொருளைத் தருகிறது. எனவே இது சொற்பொருள் பின்வருநிலையணி ஆயிற்று.
Comments
Post a Comment
Your feedback