ஓர் ஊரில் செல்வந்தர்கள் இருக்கிறார்கள். நடுத்தரக் குடும்பங்கள் இருக்கின்றன. செல்வந்தர்களை அண்டி இரந்துண்டு வாழ்கின்றவர்களும் இருக்கிறார்கள்.
இரந்துண்டு வாழ்பவர்களுக்கு தானாக சம்பாதித்த காசு பணம் ஏதும் இல்லை என்பதால், அவர்களின் காசு, பணம் என்பது செல்வந்தர்களின் செல்வம் தான். அந்த செல்வந்தர்கள் அளித்த கொடை தானே அவர்களின் செல்வம்.
செல்வந்தர்கள் காசு பணம் கொடுத்து இரவலர்களை ஆதரிக்காத போது இரவலர்களின் வறுமைநிலை என்பதும் அந்தச் செல்வந்தர்களின் வறுமை நிலையைத் தான் முன்னறிவிக்கிறது.
பழுத்த மரத்துக்கு பறவைகள் வருகின்றன. பழங்களைத் தின்ற பின் மீண்டும் மீண்டும் அந்த மரங்களை நோக்கி பறவைகள் பறந்து வருகின்றன. நேற்றுத் தானே இந்த மரத்தில் பழங்களைத் தின்றோமென்று அந்த மரத்தை தேடி வருவதை நிறுத்திக் கொள்வதில்லை. அன்றாடம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. அப்படி வருகின்ற பறவைகள் தமக்குப் பழம் தந்த மரத்தின் விதைகளை காடெங்கும் விதைத்து அந்த மரத்தின் சந்ததி வளரக் காரணமாகின்றன .
அப்பறவைகளைப் போல பரிசில் நாடிச் செல்லும் இரவலர்கள் அந்த வள்ளல்களின் புகழைப் பல இடங்களிலும் விதைத்து அவர்களைப் போல வள்ளல்களை உருவாக்குகின்றனர்.
ஆலமரத்தை நாடும் பறவைகள் கூட்டம் போலத்தான் வள்ளல்களை நாடும் பரிசிலர் கூட்டமும்...
புலவர் பெரும்பதுமனார் பரிசில் வேண்டுகிறார். யாரிடம் பரிசில் வேண்டுகிறார் என்பது தெரியவில்லை.
கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது, பின்னும்
செலவுஆ னாவே, கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர் 5
உடைமை ஆகும், அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும், அவர் இன்மையே.
(பெரும்பதுமனார்-புறநானூறு - 199)
சொற்பொருள் விளக்கம்:
கடவுள் ஆலம் - தெய்வம் உறையும் ஆலமரம்
சினை - கிளை
நெருநல் - நேற்று
செலவு - செல்லுதல்
கலி - ஒலி
புள்ளினம் - பறவையினம்
புரவு - காத்தல்
உடைமை - செல்வம்
இன்மை - வறுமை
Comments
Post a Comment
Your feedback