'திருவிளையாடல்’ திரைப்படத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்திருப்பவர்களுக்கு இந்தப் பாட்டு மனப்பாடமே ஆகியிருக்கும்.
கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது
மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின்
மயிலியல்
செறி எயிற்று அரிவை
கூந்தலின்
நறியவும் உளவோநீ யறியும்
பூவே
இது தான் எமது செய்யுள் என
சிவாஜி கணேசனின் வசனத்தை ஆறாவது வரியாகச் செய்யுளில் சேர்த்துக் கூறக்கூடாது. இது இறையனார் எழுதியதாக குறுந்தொகையில் இடம்
பெற்றுள்ள செய்யுள்.
பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையிலேயே மணம் உண்டா என்பது சாதாரணமான கேள்வியல்ல. பெண்களின் கூந்தலுக்கு
இயற்கையில் மணம் இல்லை என்று கூறியதால் சிவபெருமானின் நெற்றிக் கண்ணால்
சுடப்பட்டான் நக்கீரன்.
அந்தக் காலத்தில் பெண்கள்
தங்கள் கூந்தலுக்கு அகில்புகையை ஊட்டிக் கொண்டனர். கூந்தலுக்கு நறுமணம் மிகுந்த எண்ணெய் பூசும் பழக்கமுமிருந்தது. எண்ணெய் பூசாத போதும் அவள் கூந்தல் மணங்கமழும்
என்று கூட ஒரு பாடல் கூறுகிறது.
மண்ணா வாயின் மணங்கமழ்
கொண்டு
கார்மலர் கமழும் தாழிருங்
கூந்தல்
என்பன அந்த அடிகள்.
திரைப்படங்களில் நாயகி அறிமுகக் காட்சியிலும் பாடல் காட்சிகளிலும் ஆடுமயில் போலப் பொங்கிப் பறக்கும் கூந்தலைக் காட்டுவர். அது போன்ற சூழலில் பின்னணி இசை, காட்சியைக் கவினுற மாற்றும். எங்கே ரசிக்காமல் விட்டுவிடுமோ என சில படங்களில் மெல்லசைவில் காட்டுவதையும் பார்த்திருப்போம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் இலக்கியங்கள் கூட இந்த அழகைக் கூறுகின்றன.
‘மணிமயில் கலாபம்
அஞ்சிடப் பரப்பிய அம்மென் கூந்தல்’
என கூந்தல் பறக்கும்
அழகை சங்கப் புலவர்கள் பாடியுள்ளனர். அதாவது அன்றிலிருந்தே இந்த ‘முடிஈர்ப்பு
விசை’க்கு புலவர்கள் ஆளாகி இருக்கின்றனர்.
சங்ககாலத்தில் ஒரு பெண்ணின் தாயாரிடம் மற்றொரு பெண் “உன் மகளின் வயது என்ன?” என்று கேட்கிறாள்.
அதற்கு அந்தப் பெண்ணின் தாயார், “தன்னுடைய கூந்தலைத் தானே பின்னிக்கொள்ள முடியாதவள் அவள்” என்று பதில் கூறுகிறாள். இதற்கு இது பதிலில்லையே என்று குழம்பக்கூடாது. கூந்தல்நீளம் பெண்ணின் உயரம் உடல்வாகு எல்லாவற்றையும் மனக்கண்ணில் கண்டு அறிவுத்திறம் கொண்டு நீங்கள் வயதைக் கண்டுபிடித்துக் கொள்ள வேண்டும். இப்படித் தான் கடிகாரத்தில் மணி பார்ப்பதுபோல கூந்தலைப் பார்த்து கல்யாண வயதைத் தீர்மானித்தனர்.
‘பின்னுவிட நெறிந்த
கூந்தல்’ (அகநானூறு 150) பெண்களின் கல்யாண வயதைக் காட்டியது.
பெண்களின் கூந்தலில் நரைமுடி
தோன்றுவது அவர்களுக்கு மரியாதையைப் பெற்றுக்கொடுத்தது. பாண்டி மாதேவியின் தாயாரைக் குறிப்பிடும்போது
‘நரைவிரவிய நறும்மென் கூந்தலாள்’ என
பெருமை பொங்கக் கூறுகிறது. சங்குமணி
போன்ற வெண் கூந்தல் உள்ள பெண்கள் அறிவுத்திறமும் தொழில் அனுபவமும் வாக்குத் திறமும் உடையவர்கள் எனக் கருதப்பட்டது.
மண வயது வரும்வரை
சங்ககாலத்தில் பெண்கள் மணமுள்ள பூக்களைச் சூடுவதில்லை. கன்னிப் பெண்கள் தன் கணவன் அல்லது மணமுடிக்க உள்ளவன்
தந்த பூவை தலையில் சூடும்போது பிறர் அறியச் சூடுவதில்லை. சூடிக் கொண்டபின் பிறர் அறியலாம். தங்கள்
வீட்டிலுள்ளோர் தந்த பூவை பிறரறியச் சூடிக்கொள்வது வழக்கமாக இருந்தது.
பட்டினப்பாலை ஒரு ஆண்மகனைக் காட்டுகிறது. பொருள் தேட மனைவியைப் பிரிந்து போக வேண்டும். ஆனால் அவனுக்கோ தன் மனைவியைப் பிரிந்து போக மனமில்லை. அதற்கு அவன் கூறும் காரணம் தான் ஹைலைட். ஒரு பட்டினத்தையே கொடுத்தாலும் அவளது கருங்கூந்தலைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியாது என்கிறான்.அவனை வேலைக்கு அனுப்ப அந்தப் பெண் என்ன பாடுபட்டிருப்பாளோ!
முட்டாச் சிறப்பின் பட்டினம்
பெறினும்
வாரிருங் கூந்தல் வயங்கிழை
யொழிய
(பட்டினப்பாலை)
மணமுடிக்க பெண்ணைப் பார்த்துவிட்டு வருகிறார்கள்; உனக்கு அந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறதா என அவன் தோழன் கேட்கிறான். அவனது பதில் தான் இது.
"நான் அந்தப் பெண்ணைப் பார்ப்பதற்காக நிமிர்ந்து பார்த்தேன்.அப்படி நிமிரும்போது அவளது அழகிய கூந்தலைப் பார்த்தேன். அடடா! என்ன அழகு. கூந்தலையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு வந்துவிட்டேன். நான் தான் அந்தப் பெண்ணின் முகத்தையே பார்க்கவில்லையே!"
இப்படியெல்லாம்
கூந்தலுக்குள் கட்டுண்டு கிடந்தனர் சங்ககால மன்னர்களும் வீரர்களும் பிறரும்.
அழகையும் அன்பையும் பரிமாறும் ஊடகமாக விளங்கிய கூந்தல் தீ நிமித்தமாகவும்
கருதப்பட்டது.
பொருள் பெற வேண்டி ஒரு
புரவலரைக் காணப் புறப்படுகிறான் ஒரு யாசகன். எதிரே கூந்தலை விரித்துப் போட்டுக்
கொண்டு ஒரு பெண் வருகிறாள். யாசித்துப் பெறுவதைத் தொழிலாகக் கொண்ட அவனே தலையை
விரித்துப் போட்ட பெண்ணைப் பார்த்ததும் வருந்துகிறான். அதைத் தீச் சகுனம் என
நினைத்து கன்னிமரத்தின் கீழிருந்த கடவுளை வருத்தத்துடன் தொழுதான் என ஒரு பாடல்
கூறுகிறது.அந்தப் பெண்ணுக்கு மட்டும் இவன் செயல் தெரிந்திருந்தால் இனி ஆயுளுக்கும்
கூந்தலை முடியாமல் எங்கும் சென்றிருக்கமாட்டாள்.
அந்தக் காலத்தில் கணவனையும்
கணவனாகப் போகிறவனையும் தவிர யாரும் ஒரு கன்னிப் பெண்ணின் கூந்தலைத் தொட முடியாது.
யார் இவன்? எம் கூந்தல் கொள்வான்? என்பது கலித்தொகை வரி.
போர்ப் பாசறை
எதிரிகளால் நுழைய முடியாதவாறு வேலியிடப்பட்டதைக் கூறும் போது யாராலும் தொட முடியாத கன்னிப் பெண்ணின் கூந்தல் போல முள்வேலி அமைந்த பாசறை என
புறநானூறு கூறுகிறது.
‘குமரி மகளிர்
கூந்தல் புரைய
அமரின் இட்ட அருமுள் வேலிக்
கல்லென் பாசறை’
என்பன அந்த அடிகள். போர்ப்பாசறைக்குள் தெரியாமல் நுழைந்து விட்டால் என்ன நடக்கும்? கன்னிப் பெண்ணின் கூந்தலைத் தொட முயற்சித்தால் என்ன நடக்குமோ அது நடக்கும். அன்றைய சூழலைப் பளிச்செனப் புரிய வைக்கும் வரிகள் இவை.
பெண்ணுக்குத் திருமணம் உறுதி
செய்யப்பட்டிருக்கிறது. விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. வீட்டில் தாய் இருக்க அவளுக்குத் தெரியாமல் அந்தப் பெண் தன் வருங்காலக் கணவனைச் சந்திக்கிறாள். அவன்
கொடுத்த பூவை யாருமறியாமல் தன் கூந்தலுக்குள் மறைத்துச் சூடிக் கொண்டு வீட்டுக்கு
வருகிறாள். சென்று வந்த இடம் பற்றி தாயிடம் ஏதோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே
தலையிலிருந்து அந்தப் பூ அவள் தாயின் முன்பாக விழுகிறது. இப்படி மாட்டிக் கொண்டோமே
என முகம் சிவந்து நிற்கிறாள் அந்தப் பெண்.
வசைச் சொற்களைக் கேட்கத்
தயாராகிறாள். தாயோ நிமிர்ந்து அவளை உற்றுப்பார்க்கிறாள். வேறு எதுவும் கேட்கவில்லை
கோபப்படவும் இல்லை.
அன்னை முன் வீழ்ந்தன்று
அப்பூ
அதனை வினவலும் செய்யாய் சினவலும் செய்யாள் (கலித்தொகை)
பண்பாடு குறித்துப் புரிந்து
கொள்ளும் போது தான் தலையிலிருந்து பூ விழுந்ததற்கு அந்தப் பெண்
பதட்டப்பட்டதன் காரணம் புரியும். பண்பாடு
பற்றித் தெரியாத போது வெறும் பூ விழுந்தது மட்டும் தான் தெரியும். அந்தப் பெண்ணின்
பதட்டத்தைப் புரிந்து கொள்ளமுடியாது.
Comments
Post a Comment
Your feedback