குறுந்தொகையில் ஆண் பெண் உறவு நிலைகள் தொன்மைச் சிறப்பும் இலக்கிய வளமுமுள்ள மொழி தமிழென்ற பெருமைக்குரிய தகுதிக்கு பாட்டும் தொகையும் இன்றியமையாதவை. ஈராயிரம் ஆண்டுத் தொன்மையும் அக இலக்கியங்களில் முதன்மையானதுமானது குறுந்தொகை. ஓர் இனத்தின் பண்பாட்டையும் பழக்கவழக்கங்களையும் மரபு சார் நம்பிக்கைகள், வரலாற்றுப் பதிவுகள், சமூக நிலை ஆகியவற்றையும் புற இலக்கியங்கள் வழி அறியக் கிடைக்கின்றன. கூற்றுகளில் ஆண் பெண் : அக இலக்கியங்களில் உள்ள பாடல்கள் தலைவன் தலைவி தோழி அல்லது பிற மாந்தர்களுள் ஒருவரது கூற்றாக அமைந்திருக்கும். அல்லது பாடல் சுட்டும் செய்தி, பின்புலம், கூறப்படும் உவமைகள், காட்டப்படும் உள்ளுறை வழி யாருடைய கூற்று என அறிந்து கொள்ளமுடியும். குறுந்தொகைப் பாடல்களுள் தலைவன், தலைவி, தோழி, பரத்தை, இற்பரத்தை, காதற்பரத்தை, செவிலித்தாய், பாங்கன், கண்டோர் என ஒன்பதின்மருடைய கூற்றுக்கள் வந்துள்ளன. இதில் தலைவன், பாங்கன் என்னும் இருவர் மட்டும் ஆண்பாலாக இருக்க தலைவி உள்ளிட்ட எண்மர் பெண்பாலாக அமைந்துள்ளது அக்கால சமூகத்தின் ஆண், பெண் ஆதிக்கம், பெண்ணுரிமை ...