ராமாயணத்தின் தாக்கம் உள்ள புதுக்கவிதைகள் பல.
அவற்றுள் ஒன்று.
மாம்பழ ஊரில் மனக்குயில்கள் அழுகின்றன என்பது மு. மேத்தாவின் ஒரு கவிதை. கண்ணீர்ப் பூக்கள் என்ற அவரது தொகுப்பில் உள்ளது இந்தக் கவிதை.
உடைந்து கிடந்த பிரதேசத்
துண்டுகளை
ஒட்ட வைத்தவன் நீ...
தீண்டப்படாததாய்
ஒதுக்கப்பட்டவர்க்கு
தெய்வ மகத்துவம்
தேடிக் கொடுத்தவன்
இருநூறு ஆண்டுகளாய்
அவமானத்தால் குனிந்த எங்கள்
அகலிகைத் தலைகள்
நீ நடந்ததால் நிமிர்ந்தன.
என்பது அந்தக் கவிதை.
காந்தி இதில் ராமனாகத் தெரிவார்.
நடந்த நிகழ்வுகளை எண்ணிப் பார்க்க ராமாயணம் பயன்பட்டுள்ளது.
இடத்தாலும் மொழியாலும் இனத்தாலும் பிரிந்து கிடந்த பாரத மக்களை ஒன்று சேர்த்து தீண்டாமையை விலக்கி அடிமை விலங்கறுத்த காந்தியடிகளை ராமனாக மேத்தா பார்க்கிறார்.
காந்தி ராமனாகத் தோன்றியது எப்படி?
இனவேறுபாடு ஏதுமின்றி குகன், சுக்ரீவன், விபீடணன் போன்றோரைத் தன் உடன்பிறப்பாக ஏற்றுக் கொண்டவன் ராமன்.
அரக்கர் குலத்தை அழித்தவன்.
கல்லாகக் கிடந்த அகலிகைக்கு சாபவிமோசனம் தந்தவன் ராமன்.
சுதந்திர உணர்வு இல்லாமல் அடிமையாக இருந்த அந்த நாள் மக்கள் அகலிகையை நினைவுபடுத்துகின்றனர்.
பாரதத்தின் பெருமை மீண்டுவர யார் காரணமோ அவர் ராமனாகத் தோன்றுவது கூட இராமாயணத்தின் வலிமையாக இருக்கலாம்.
வாழ்க நீ! எம்மான், இந்த வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர் பாரத தேசந் தன்னை
வாழ்விக்க வந்த காந்தி மஹாத்மா! நீ வாழ்க! வாழ்க!
என்ற பாரதிக்கும் காந்தி அப்படித் தெரிந்திருப்பாரோ?
Comments
Post a Comment
Your feedback