சீட்டு விளையாட்டில் (playing cards) சீட்டுக்களைக் கலக்குவதை shuffling என்று சொல்வார்கள்.
சீட்டு விளையாடும்போது ஜோக்கர் வர வேண்டுமே என நினைப்போம். வரவே வராது. நாம் சீட்டு எடுக்கும் போது வராத ஜோக்கர் ஆட்டம் முடிந்து மீண்டும் விளையாடுவதற்கு சீட்டுக்களைக் கலக்கும்போது கண்ணில்படும்.
அப்படிக் கலக்கும்போது இந்த ஜோக்கர் கார்டு எங்கே இருக்கிறது, எங்கே செல்கிறது என கவனிக்க முயற்சிப்போம். ஆனால் கலக்கப்படும் போது அது நம் கவனத்தில் இருந்து தப்பித்துப் போய் விடும். எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி அந்த கார்டு எங்கேயோ போய் ஒளிந்து கொள்ளும்.
நம்மோடு நெடுநாள் இருந்த ஒருவரை எப்போதும் மறக்க முடியாதவர் என பெருமையாகச் சொல்லுவோம். ஆனால் சில ஆண்டுகள் கழித்து நாம் மறந்து விட்டிருப்போம். அப்படி கவனம் பெறாத முகங்கள், கவனம் பெறாத நம் எண்ணங்கள் எல்லாமே காணாமல் போன கார்டுகள் ஆகிவிடும். இதை lost in the shuffle என்று சொல்லுவார்கள்.
கார்டுகளுக்குள் மறைந்து விட்ட ஜோக்கர் கார்டு போல, கால ஓட்டத்தில் மறைந்து போனவை குறித்த பட்டியல் நம் எல்லோருக்கும் இருக்கும். ஆனால் அது மனதுக்குள் எங்கேயோ புதைந்து கிடக்கும்.
பழைய வீட்டில் பக்கத்தில் குடியிருந்தவர், பள்ளியில் கூட படித்தவர், பூக்கடைப் பெண் என கலக்கும்போது கண்டுபிடிக்க முடியாமல் போன முகங்கள் எப்போதாவது நினைவுக்கு வரும்போது நெகிழ்ந்து உருகுவோம். அப்படி நெகிழ்ந்திருக்கும் தருணங்கள் கூட ஒரு சுகம் தான்.
சிலருக்கு அந்த சுகம் கூட lost in the shuffle தான். அப்படிக் கூட ஒரு சுகம் இருக்கிறது என்பது கூட அவர்களுக்கு மறந்திருக்கும்.
Comments
Post a Comment
Your feedback