இயற்கை என்ற பின்னணியில் எழுந்த இந்த இலக்கியம் தன்னைப் பிரமிக்க வைத்ததாக ஒரு நாவலைப் பாராட்டி சுதேசமித்திரனில் பாரதியார் எழுதியுள்ளார்.
அந்த நாவல் நார்வே நாட்டைச் சேர்ந்த Knut Hamsun (நட் ஹெம்சன்) என்பவரால் எழுதப்பட்டது. நாவலின் பெயர் The growth of the soil.
கடவுள்களால் சூழப்பட்ட இவ்வுலகில் மனிதன் தான் கதாநாயகன். அவனது உழைப்பில் உருவான உன்னதம் தானே இவ்வுலகம். இந்த நிஜத்தைச் சொல்கிறது இந்த நாவல்.
1920 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த நாவலுக்கு வழங்கப்பட்டது.
நாவலின் ஆரம்பத்தில் யாருமே இல்லாத வெட்ட வெளியும் காடும் நதியும் மட்டுமே காணப்படுகின்ற நிலத்தில் நடந்து செல்கிறான் ஒரு மனிதன். அவன் பெயர் ஐசக். அந்த நிலம் அவனை அழைக்கிறது. அந்த பரந்த பூமியை பராமரிக்க மனிதன் எவனும் இல்லை. தனக்குள் பேசிக் கொள்கிறான் ஐசக். கையில் ஒரு சாக்கு மூட்டை வைத்திருக்கிறான். அதில் கொஞ்சம் உணவுப் பொருள்களும் அவசியமான சில ஆயுதங்களும் இருக்கின்றன.அவன் சரியான நிலத்தைத் தேடிக் கொண்டே போகிறான். அது மனிதன் கைபடாத இடம் என்பதைப் புரிந்து கொள்கிறான் . அவன் பலசாலி. உழைப்பை நேசிப்பவன். அந்த இடத்தை சீராக்க உழைக்கிறான்.
தூரத்தே போய் சில பொருட்களை விற்றுவிட்டு மூன்று ஆடுகளையும் ஒரு மண்வெட்டையும் கொண்டு வந்து நிலத்தைப் பண்படுத்த ஆரம்பிக்கிறான். ஒரு வழிப்போக்கன் வருகிறான். அவனிடம் தனக்கு உதவக்கூடிய பெண் யாராவது தெரியுமா என கேட்கிறான் ஐசக். அவனும் "பார்த்தால் சொல்கிறேன்" என்று சொல்லிவிட்டு தன் பயணத்தைத் தொடர்கிறான்.
இப்படி ஆரம்பமாகும் நாவல் வளர வளர அந்த நிலமும் ஒரு பண்ணையாக மாறுகிறது. அந்த நிலத்தைச் சுற்றி ஒரு சமூகம் உருவாகிறது. எப்படி உருவாகிறது என்பதைத் தான் அந்தக் கதை சொல்கிறது. வர்ணனை எதுவும் இல்லாமல் எளிமையான நடையில் அமைந்துள்ளது இந்த நாவல்.
Comments
Post a Comment
Your feedback