Skip to main content

எப்படி எல்லாம் கஷ்டப்பட்டேன் ...

 

வேலைக்கு ஆள் கிடைக்கறது கஷ்டம்.

அதிலும் நேர்மையான ஆள் அமைவது அதைவிடக் கஷ்டம்.

செய்யும் வேலைக்கு சம்பந்தமே இல்லாமல் கூலி அதிகமாகக் கேட்பான்.

முன்னர் நாம் செய்த உதவி எதையும் நினைத்துப் பார்க்க மாட்டான்.

 வேலை நிறைய இருக்கிறது என தெரிந்தால் வேலைக்கு வராமல் வீட்டிலேயே இருந்து கொள்வான்.

மறுநாள் வரும் போது  “நேற்று ஏன் வேலைக்கு வரவில்லை?” என்று   கேட்டு விட்டால் போதும்! அவ்வளவு தான் !

 "பானைக்குள்ள தேள் இருந்திருக்குது, நான் அதைப் பார்க்காம உள்ள கைவிட்டுட்டேன்.  அது படக்குனு கொட்டிவச்சுருச்சு .

" வீட்டிலே பொண்டாட்டிக்குப் பேய் பிடித்து விட்டது"

"பாட்டி இறந்த பன்னிரண்டாவது நாள் "

இப்படி சரம் சரமாகப் பொய்கள்.  எங்கிருந்து தான் வருமோ எல்லாம்! 

நான் ஒரு வேலை சொன்னா அவன் வேற ஏதோ செஞ்சுவச்சுருப்பான். வீட்டில் இருக்கற ஒவ்வொருத்தரோடும் தனியாய் பேசிக்கொண்டிருப்பான்.

நம்ம வீட்டு விவகாரங்களையெல்லாம் தெரிந்துகொண்டு நாலு தெருவுக்கும் அதைச் சொல்லிவிட்டு வந்தால் தான் அவனுக்கு நிம்மதி.

எங்க வீட்டில் எள் இல்லைனா அதை எல்லார் வீட்டிலயும் போய்ச் சொல்லணுமா?

இப்படிஎல்லாம் வேலைக்காரர்களால் கஷ்டப்பட்டேன் .

யாரையும் வேலைக்குச் சேர்க்காமல் விட்டு விடலாம் என்றால் எந்த வேலையும் நடப்பதில்லைஎன்னடா செய்யலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.

அப்போது தான் அவன் வந்தான்.

எனக்கு ஒரு வேலை வேண்டும் என்றான்.

 

“நான் ஒரு இடைச்சாதிக்காரன். மாடு மேய்க்கத்தெரியும்

மக்களைக் காக்கத் தெரியும். வீடு கூட்டத் தெரியும்.

துணிமணிகளை எல்லாம் கூட கவனமாகப்  பார்த்துக்கொள்வேன்.

சின்னக் குழந்தைகளுக்கு அழகாகப் பாட்டுச் சொல்லித் தருவேன்.

குழந்தைகள் அழாதபடி விளையாட்டுக் காட்டி மகிழ்விப்பேன்

நீங்கள் காடு மேடு என எங்கே போனாலும்  இரவு பகல் எந்த நேரமானாலும்   உங்களோடு வருவேன்

கள்ளர் பயம் கொஞ்சம் கூட உங்களுக்கு இருக்காது.

எந்தத் துன்பமும் உங்களை அணுகாமல் பார்த்துக்கொள்வேன்.”

 என்றான் அவன்

 "சரிப்பா உன் பேர் என்ன" என்றேன்.

 "கண்ணன்" என்றான்.

 பார்த்தால் வாட்ட சாட்டமாக இருந்தான். அவன் கண்ணைப் பார்த்தால் பொய் சொல்ல மாட்டான் என்று தோன்றியது

அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருந்தது. எனக்கு அவனைப் பிடித்துப் போய்விட்டதுஅவனை என் சேவகனாக வைத்துக் கொள்வது என முடிவு செய்து கொண்டேன்.

"என்ன கூலி எதிர்பார்க்கிறாய் என்னிடம் வேலைக்குச் சேர" என்று கேட்டேன்.

"ஐயா, எனக்கு பொண்டாட்டி , பிள்ளைகள் என்று யாரும் இல்லை. நான் ஒரு தனியாள்.

பார்க்கத் தான் நான் சின்ன வயசு மாதிரி இருக்கிறேன்.

 தலை முடி நரைக்காமல் இருக்கிறது ஆனால்  வயசு எவ்வளவு என்று சொல்லமுடியாத அளவு காலம் ஆச்சு எனக்கு

கூலி இவ்வளவு கொடுங்கனு உங்களை நச்ச மாட்டேன்காசு பணம் எனக்கு முக்கியமில்லை என்னை  உங்ககிட்ட வேலைக்குச் சேர்த்துக் கொண்டால் போதும்" என்றான்.

 இந்தக் காலத்தில் இப்படி ஒருத்தனா? பைத்தியக்காரப் பிள்ளை என்று நினைத்துக் கொண்டேன்

அவனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டேன்.

 அவனை வேலைக்குச் சேர்த்த பின்பு, ஒவ்வொரு நாளும் அவனுக்கு என் மேல் பிரியம் கூடிக்கொண்டே இருக்கிறதை உணர்கிறேன். எனக்கும் இனி அவன் இல்லாமல் எதுவும் செய்ய முடியாது என்றே தோன்றத் தொடங்கிவிட்டது.

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்;
'ஏனடா, நீ நேற்றைக்கு இங்குவர வில்லை' யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;

வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதியோடு தனியிடத்தே பேசிடுவார்;

உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊர அம்பலத்து உரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமம் மிக உண்டு கண்டீர்;

சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை.

இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;

எங்கிருந்தோ வந்தான், 'இடைச்சாதி நான்' என்றான்;

''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் ... 

வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;

சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;

சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே

ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;

காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; ...

 

இரவிற் பகலிலே எந்நேர மானாலும்

சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே

சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;

கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!

ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் ... 

 

நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''

என்றுபல சொல்லி நின்றான் ''ஏது பெயர்? சொல்'' என்றேன்

''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான்.

கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்

ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; ... 

 

தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,

''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;

கூலியென்ன கேட்கின்றாய்? கூறு'' கென்றேன். ''ஐயனே!

தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;

நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் ... 

 

ஆன வயதிற் களவில்லை; தேவரீர்

ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள

காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான்.

பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே

கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . ... 

 

ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு,

நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்

பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்;

(பாரதியார்)

இது பாரதி பாடிய கண்ணன் பாட்டு

கண்ணன் என் சேவகன் என்ற தலைப்பின் கீழ் உள்ளது.  

 

 


Comments

Popular posts from this blog

செப்டம்பர் 20

 செப்டம்பர் 20,1798: கப்பத்தொகை பாக்கி பற்றிய பேச்சு வார்த்தை நடத்த இராமநாதபுரம் அலுவலகத்தில் வந்து தன்னை சந்திக்கும்படி கலெக்டர் ஜாக்சன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க கட்டபொம்மன் அங்கு சென்றார். ஆனால் கலெக்டரோ குற்றாலம் சென்று விட்டார்.  கட்டபொம்மனும்  ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் விடாமல் அவரைப் பின்தொடர்ந்து குற்றாலம், சிவகிரி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய ஊர்களுக்கு பயணம் செய்து இறுதியில் செப்டம்பர் 19ஆம் தேதி ராமநாதபுரம் வந்து சேர்ந்தார்.  20ஆம் தேதியான இன்று ஜாக்சனை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கட்டபொம்மனும் அவரது வக்கீல் சுப்பிரமணிய பிள்ளையும் உட்காரக்கூட அனுமதிக்கப்படவில்லை. ஏறக்குறைய மூன்று மணி நேரம் நிற்க வைத்தே பேச்சு வார்த்தை நடந்தது.  கட்டவேண்டிய பாக்கி கப்பம் 1080 பகோடாவிற்காக கட்டபொம்மனை கைது செய்ய முற்பட்ட போது மாறுவேடத்தில் வந்திருந்த ஊமைத்துரையும் அவனது போர் வீரர்களும் ஆங்கிலப்படை வீரர்கள் மீது பாய்ந்து கட்டபொம்மனை விடுவித்துச் சென்று விட்டனர். இங்கு நடந்த இக்கலவரத்தில் ஆங்கிலேய அதிகாரி லெப்ட்டினன்ட் கிளார்க் உட்பட பல ஆங்கில வீரர்கள் பலியானார்...

மனங்களை வென்றவர்

 பெரும் சாம்ராஜ்யம்... நூற்றுக்கும் அதிகமான நாடுகளில் டாடாவின் விஸ்வரூபம்... ஆனால் எந்தக் காலத்திலும் உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலில் அவர் பெயர் வந்ததில்லை... லாபத்தில் 3இல் 2 பங்கை அறம் சார்ந்த பணிகளுக்கு செலவிட்டவர்... கோவிட் காலத்தில்  அரசாங்கத்துக்கும் அறப்பணிகளுக்கும்  என அவர்  அள்ளி வழங்கிய செல்வத்துக்கு எந்தக் கணக்கிலும் அளவு காண முடியாது... அஜ்மல் கசாப் உள்ளிட்ட பாகிஸ்தான் தீவிரவாதிகள்  கண்ணில்பட்ட மனிதர்களையெல்லாம் கொன்று குவித்த போது மும்பையிலேயே பெரியதான அவருடைய தாஜ் ஹோட்டல் தீயிடப்பட்டது. உள்ளே தீவிரவாதிகளிடம்  சிக்கிகொண்டவர்களைக் காப்பாற்ற ராணுவம், காவல்துறை எல்லாம் போராடிக்கொண்டிருந்த வேளையில் தன் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல்  தீயணைப்பு வீரர்கள் அருகே அவர்  தெருவில் இறங்கி நின்ற காட்சியை யாராலும் மறக்க முடியாது.  தன்னலம் மறந்த அந்த மாமனிதர் இன்று இல்லை.  அளவிட முடியாத செல்வத்திலும் சராசரி மனிதனாகவே வாழ்ந்து வந்தவர்... இந்தியாவால் எதுவும் முடியும் என்ற சிந்தனையை  ஒவ்வொருவர் மனதிலும் ஆழப்பதித்தவர்... எளிய மனிதர்களைப்...

இதே நாளில்

  இதே நாளில் ஜனவரி    1    2     3    4     5     6     7    8     9    10    11     12     13  14     15     16     17     18     19     20      21    22     23   24   25     26     27     28     29     30    31 பிப்ரவரி 1    2    3   4      5      6      7       8      9    10     11      12     13   14   15      16      17     18      19     20    21      22   23      24    25 ...