கடற்கரை மணல் வெளியில் தன் காதலி நினைவில் காத்திருக்கிறான்.
அவனின் கனவில் மட்டுமே வந்து போகிற பெண் அவள்.
கடற்கரையில் தெரிவதெல்லாம் அலையும் நுரையும் ஆர்ப்பரிக்கும் கடலும்தானே.
காண்பதெல்லாம் அவளாகவே தெரிகிறாள் அவனுக்கு.
அந்த மாலையிலும் கனவு வருகிறது. பகல் கனவு தான்.
பின்புறமாக வந்து அவன் கண்களைப் பொத்திக் கொண்டு கேட்கிறாள் அவனிடம்.
அப்படி என்னதான் இருக்கிறது அந்தக் கடலில்?
இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
அப்படி என்னதான் இருக்கிறது அந்த வானத்தில்?
இப்படிப் பார்த்துக் கொண்டிருக்கிறாய்.
அப்படி என்னதான் இருக்கிறது நுரையிலும் அந்த சின்னக் குமிழிகளிலும்?
என்னிடம் சொல்லக் கூடாதா?
அவள் இப்படிக் கேட்க,
அவன் எப்படிச் சொல்லியிருப்பான்?
கனவும் நனவும் கைகோர்க்க பாரதி கண்ட காதல் இது.
அவள் கேட்கிறாள்:
நெரித்த திரைகடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே பெற்ற நலங்கள் என்ன? பேசுதி" என்றாள்.
அவன் சொன்ன பதில் :
நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரித்து நிதம் மேகம் அளந்தே, பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினிலுன் கைவி லக்கியே, திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.
(பாரதியார்)
நான் பார்த்த கடலில் உன் முகம் தான் தெரிந்தது.
நாம் பார்த்த வானில் , அலையில் நுரையில் , கடலில் உன் முகம் தான் கண்டேன்.
அது மட்டும் அல்ல; அங்கு கேட்டதெல்லாம் உன் சிரிப்பொலி தான். அந்தச் சிரிப்பொலி கேட்டுத் தான் என் கண்களைப் பொத்தியிருக்கும் உன் கைகளை விலக்கிப் பார்த்தேன். நீ நின்று கொண்டிருக்கக் கண்டேன்.
எது நிஜம் எது கனவு என்று தெரியாத இந்தக் காதல் பாரதி காட்டும் காதல்.
Comments
Post a Comment
Your feedback