கண்ணே கனியமுதே என்ற திரைப்படத்தில் பாரதியார் பாடல் ஒன்றை ஜேசுதாஸ் பாடியிருப்பார்.
நின்னையே ரதியென்று.... என்று தொடங்கும் அந்தப் பாடல்.
அதில் சாயல் பற்றிய ஒரு ஒப்புமை இருக்கும்.
சாயல் என்றால் என்ன?
சாயல் என்ற வார்த்தை ஒருவருடைய அழகைச் சொல்கிறதா? அடையாளத்தைச் சொல்கிறதா?
மீன் போல அழகிய கண், வில் போன்ற புருவம் என்றெல்லாம் சொல்வது இயல்பு. அது போல "சாயல்" என்பதும் ஒப்புமைக்காகச் சொல்லப்படுகிற வார்த்தையா?
சாயல் என்பது ஒருவருடைய அழகை தனித்தனி உறுப்புகளாகப் பார்க்காமல் ஒட்டு மொத்தமாகப் பார்க்கையில் கூறப்படுகிற ஒரு வார்த்தை.
இலக்கியத்தில், சாயல் என்பது மென்மையைக் குறிக்க வருகிற ஒரு சொல்.
ஒரே மாதிரியான தோற்றம் கொண்டிருப்பவர்களை ஒரே சாயலில் உள்ளவர்கள் என்று சொல்வது வழக்கம்.
சாயல் என்பது பெண்ணை மட்டும் சொல்லும் சொல்லா இல்லை ஆண்களுக்கும் வருமா?
இதற்கு விடை தொல்காப்பிய உரைகளில் கிடைக்கிறது.
சாயல் அழகை உணர முடியும் தவிர எழுதிக் காட்ட முடியாது. மூக்கின் அழகை, முகத்தின் அழகை எல்லாம் எழுதிக்காட்டலாம். ஆனால் சாயல் அழகு என்பது ஒட்டுமொத்தமானது. உணரக்கூடியது.
"சாயலாவது ஐம்பொறிகள் நுகரும் தன்மை" என்பார் நச்சினார்க்கினியர்.
இளம்பூரணர் எழுதிய தொல்காப்பிய உரையில் சாயல் என்பதற்கு மிக நுட்பமான உரை விளக்கம் உண்டு.
இளம்பூரணர் தரும் விளக்கம் இது.
"சாயல் என்பது மென்மை. அது நாயும் பன்றியும் போலாது மயிலும் குயிலையும் போல்வதோர் தன்மை" எழுதியுள்ளார்.
அதாவது மயில், குயில் போல இருந்தால் சாயல் என்று சொல்லலாம். நாய், பன்றி போல இருப்பதையெல்லாம் சாயல் என்ற வார்த்தையில் சொல்லக்கூடாது.
ஆக, ஆண்களை சாயல் என்ற வார்த்தையில் சொல்லக்கூடாது என்று புரிந்துகொள்ளவேண்டும்.
நாய், பன்றி என்று சொன்னபோது யாரை மனதில் நினைத்திருப்பார்?
அது இருக்கட்டும்.
நாம் அந்தப் பாட்டுக்கு வருவோம்.
பாரதியார் எழுதிய அந்தப் பாடல் இது தான்.
நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி – கண்ணம்மா
தன்னையே சகியென்று சரணம் எய்தினேன்
பொன்னையே நிகர்த்த மேனி
மின்னையே நிகர்த்த சாயல்
பின்னையே நித்ய கன்னியே
கண்ணம்மா
மாரனம்புகள் என் மீது வாரி வாரி வீச -நீ
கண் பாராயோ வந்து சேராயோ
கண்ணம்மா
யாவுமே சுகமுனிக்கோர் ஈசனாம் எனக்குன் தோற்றம்
மேவுமே இங்கு யாவுமே
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
(பாரதியார்)
Comments
Post a Comment
Your feedback