சார்லஸ் டார்வின் ஒருமுறை தென் அமெரிக்காவிற்குப் போனார். தென் அமெரிக்காவின் நிலையை ஆராய்ந்து அறிவதற்காகப் போனார். அவருக்குத் துணையாக அமெரிக்க பூர்வகுடிகள் நாற்பது ஐம்பது பேர் கூடவே போனார்கள்.
அவர் ஆராய்ச்சிக்காக கொண்டு சென்ற சாமான்களை தூக்கிக்கொண்டு செல்வது தான் அந்த நாற்பது ஐம்பது பேர்களுடைய வேலை. ஏனென்றால் இப்போது போல ரயிலோ அல்லது போக்குவரத்துக்கு பிற வாகனங்களோ இல்லாத காலம் அது.
அப்படி அவர்கள் போகும் போது அவர்களின் தலைக்கு மேலே கழுகுகளும் பருந்துகளும் வட்டமிட்டு கொண்டு கூடவே வந்தன. சார்லஸ் டார்வின் ஆச்சரியமாக அந்த பருந்துகளைப் பார்த்துக் கொண்டே அந்த பூர்வகுடிகளிடம் அவை தம்மைச் சுற்றிப் பறப்பதற்கான காரணம் என்ன என்று கேட்டார்.
அதற்கு அவர்கள் சொன்னார்கள்.
"சாதாரணமாக இப்படி கூட்டமாக நாங்கள் போகின்றோம் என்றால் யுத்தத்திற்காகத் தான் போவோம். யுத்தம் நடந்த பின்பு பல பிணங்கள் மண்ணில் விழும். அந்தப் பிணங்களை சாப்பிட்டுப் பழகியதால் கூட்டமாக யார் போனாலும் இந்தக் கழுகுகள் கூடவே வரும்" .
விஞ்ஞானியான சார்லஸ் டார்வின் அமெரிக்க பூர்வ பழங்குடி மக்களிடம் இருந்து தெரிந்து கொண்ட இந்த விஷயம் ஒரு பழந்தமிழ்ப் பாடலில் போகிற போக்கில் குறிப்பிடப்படுகிறது.
இந்தப் பாடல் சொல்லும் செய்தி இதுதான்.
கழுகுகள் கூச்சலிடுகின்றன. பருந்துகள் தொடர்ந்து வருகின்றன. நரிகளும் நாலா பக்கத்திலும் பரபரப்பாக ஓடுகின்றன. பிணம் தின்னும் பெண் பேய்கள் உற்சாகத்தோடு 'அலங்கலம்' என்ற நடனத்தை ஆடுகின்றன. இவ்வளவு ஆரவாரத்துக்கு என்ன காரணம் தெரியுமா? வேல் ஏந்திய சோழனது ஆண்யானை புறப்பட்டுச் செல்கிறது.
பாற்றினம் ஆர்ப்ப பருந்து வழிப் படர,
நால் திசையும் ஓடி நரி கதிப்ப,- ஆற்றின்
அலங்கலம் பேய் மகளிர் ஆட, வருமே-
இலங்கு இலை வேல் கிள்ளி களிறு.
(முத்தொள்ளாயிரம்)
பாறு இனம்- கழுகுக் கூட்டம்
ஆர்ப்ப- கூச்சலிட
இலங்கு இலை- பிரகாசிக்கும்
கிள்ளி - சோழன்
களிறு - யானை.
Comments
Post a Comment
Your feedback