பாரத நாட்டைப் போற்றிப் பாடிய ‘எந்தையும் தாயும்’ எனத் தொடங்கும் புகழ்பெற்ற இந்தப் பாரதியார் பாடல் 1907 இல் ‘ஸ்வதேச கீதங்கள்’ சிறு வெளியீட்டிலும் 1908 இல் ‘ஸ்வதேச கீதங்கள்’ நூலிலும் 1919 இல் நாட்டுப் பாட்டு நூலிலும் இடம் பெற்றது.
எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யிருந்தது மிந்நாடே -அதன்
முந்தைய ராயிர மாண்டுகள் வாழ்ந்து
முடிந்தது மிந்நாடே -அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ -இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
ளீந்தது மிந்நாடே -எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிந்நாடே -அவர்
கன்னி யராகி நிலவினி லாடிக்
களித்தது மிந்நாடே -தங்கள்
பொன்னுட லின்புற நீர்வினை யாடியில்
போந்தது மிந்நாடே -இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
மங்கைய ராயவர் இல்லற நன்கு
வளர்த்தது மிந்நாடே -அவர்
தங்க மதலைக் ளீன்றமு தூட்டித்
தழுவி திந்நாடே -மக்கள்
துங்க முயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்தது மிந்நாடே -பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்தது மிந்நாடே -இதை
வந்தே மாதரம்,வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
பாரதி, பாரத நாட்டைப் போற்றிப் பாடிய பாடல் தமிழ் மொழியை வாழ்த்திப்பாடுவது போல மாற்றம் பெற்றுள்ளது. மாற்றம் பெற்றுள்ள இப் பாடல், 1919 இல் திருச்சி சண்முக விலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்ட கரந்தைத் தமிழ்ச் சங்கம், ஏழ், எட்டாம் ஆண்டுகளின் அறிக்கையில் (பிங்கள, காலயுக்தி சித்திரை மார்கழி) இடம் பெற்றுள்ளது.
இந்தப் பாடலைக் கண்டதும் இது பாரதியாரின் பாடல் என்று முதலில் தோன்றும். அடுத்துச் சில சொல் வடிவங்கள் மாற்றம் பெற்றுள்ளது தெரிய வரும்.
எந்தையுந் தாயு மகிழ்ந்து குலாவி
யியம்பிய திம்மொழியே -அதன்
முந்துபல் லாயிர மாண்டுகள் வாழ்ந்தோர்
மொழிந்ததும் இம்மொழியே -அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிம்மொழியே -இதை
வந்தனை கூறி மனதி லிருத்தியென்
வாயுற வாழ்த்தேனோ -இதை
செந்தமிழ் வாழிய செந்தமிழ் வாழிய
என்று செபியேனோ?
இன்னுயிர் தந்தெமை யீன்று வளர்த்தரு
ளீந்தது மிம்மொழியே -எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்தது மிம்மொழியே -அவர்
கன்னி யராகி நிலவினி லாடிக்
கழறிய தி ம்மொழியே -தங்கள்
பொன்னுடல் மேவப் புதுப்புன லாடிப்
புகன்றது மிம்மொழியே -இதை
செந்தமிழ் வாழிய செந்தமிழ் வாழிய
என்று செபியேனோ?
மாற்றம் பெற்றுள்ள இப் பாடலின் கீழ் பாரதியார் பெயர் இடம் பெறவில்லை. எனினும் இப் பாடலையும் பாரதியையும் எல்லோர்க்கும் நன்கு தெரியும்.
அப்படியிருக்க இப்பாடலை, ஒரு வேளை பாரதியே மாற்றிக்கொடுத்திருக்கலாம் அல்லது அந்த மாற்றத்தை அறிந்தும் பெருந்தன்மையோடு ஒப்புதல் அளித்திருக்கலாம்.
வாழ்நாளில் ஒரு பாடலேனும் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தில் பாடுவது பெருமையாகக் கருதப்பட்ட காலத்தில் கரந்தைத் தமிழ்ச் சங்கமே பாரதியாரின் புகழ் பெற்ற ஒரு பாடலை, மொழியைப் போற்றுவதற்குப் பயன்படுத்திக்கொண்டதன் மூலம் பாரதியின் பாடல்கள் மக்களிடம் எவ்வளவு புகழ் பெற்றிருந்தது என்பதை அறியலாம்.
புகழ்பெற்ற பாடல்கள் வழியே தங்கள் கருத்துக்களைச் சொல்லுவது நூறு ஆண்டுகளுக்கு முன்பே இருந்திருக்கிறது.
பாடல் எழுதி நூறு ஆண்டுகளுக்கு மேலானாலும் இன்றும் உயிரோட்டமாக உள்ளது இந்தப் பாடல்.
(காலச்சுவடு ஆகஸ்டு 2021 இதழில் இப் பாடல் இடம் பெற்றுள்ளது.)
அருமையான பதிவு ஐயா.நன்றி
ReplyDelete