முத்தை திரு பத்தித் திருநகை..
அருணகிரிநாதரின் நயமான பழம்பாடல்.
இந்தப் பாட்டை டி.எம்.சௌந்தரராஜன் பாடி பட்டி தொட்டி வரை பரப்பினார்.
இந்தப் பாட்டின் இறுதி வரிகள்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
என்று இருக்கும்.
கூகையின் ஒலிக் குறிப்பினை அழகான சொல்லாட்சியுடன் அருணகிரியார் பாடியிருப்பார்.
திருக்குறள், அகநானூறு, குறுந்தொகை, புறநானூறு, நற்றிணை, பதிற்றுப்பத்து, பட்டினப்பாலை, பெருங்கதை, முத்தொள்ளாயிரம், மணிமேகலை என கூகைக் குடும்பத்தைப் பற்றிப் பாடாத இலக்கியங்களே இல்லை.
கூகைகள் பழைய கட்டடங்கள், தானியக் குதிர், கூரைச் சந்துகள் ஆகியவற்றில் குச்சி, துணி, தாள் போன்றவற்றைக் கொண்டு கூடு அமைக்கும்.
அந்திக் கருக்கலில் கூட்டை விட்டுப் புறப்படும் முன்பு எழுப்பப்படும் இதன் கரகரத்த கிரீச்சிடும் குரல் காரணமாக Screech owl என்றும் இதைக் குறிப்பிடுவார்கள்.
அந்தி முதல் வைகறை வரை தனது மென்மையான சிறகு அமைப்பால் அலுங்காமல் பறந்து திரிந்து தங்கள் குடும்ப வழக்கப்படி நான்கு விரல்களால் எலி, சுண்டெலிகளை மட்டும் பற்றிக் கொன்று தின்பவை இவை.
ஒரு கூகை ஒரு இரவில் மூன்று அல்லது நான்கு சுண்டெலிகளை முழுதாக விழுங்கி விடும்.
அதனுடைய சீரண உறுப்புகள் வலிமையானவை.
சுண்டெலிகளை விழுங்கிய சற்று நேரத்தில் எலும்புத் துண்டுகள், முடி, நகம் போன்றவற்றை உருண்டைகளாக வாய்வழியாக வெளியேற்றிவிடும்.
தனக்குப் பிடித்தமான உணவான எலிகளைப் பிடிப்பதில் பாம்புகளை விடத் திறமையானவை.
ஒரு கிராமத்தில் 10 ஆந்தைகள் இருந்தால் ஒரு ராத்திரியில் கிட்டத்தட்ட 40 எலிகளை இவை சாப்பிட்டு விடும்.
இதனால் ஒரே மாதத்தில் 1200 எலிகளும் ஒரு வருடத்தில் 14,400 எலிகளும் ஒழிந்துவிடும். அனேகமாக 10 ஆந்தைகள் இருக்கின்ற ஒரு கிராமத்தில் எலித் தொல்லை என்பது இருக்கவே இருக்காது.
இந்தியாவில் விளையும் தானியத்தில் 25 சதவீத அளவை எலிகள் தான் தின்று தீர்க்கின்றன. வேளாண் தொழிலுக்கு கூகைகள் போல நம்பத்தகுந்த நண்பர்கள் கிடைப்பது அரிது. ஏனென்றால் கெடுதல் செய்யும் உயிரிகளைத் தின்னுமே தவிர வேளாண் பொருளுக்கு ஒரு சிறு குந்தகம் கூட அவை விளைவிப்பதில்லை.
ஆங்கிலேயர்கள் விழிப்பாக இருக்கின்ற போர்ப் படையின் அடையாளச் சின்னமாக ஆந்தையை ஆக்கி வைத்தனர்.
இரவாக இருப்பினும் விழிப்போடு இருக்கின்ற தன்மையின் காரணமாக அப்பெயர் வைக்கப்பட்டது.
பகல் நேரங்களில் சில நேரங்களில் 2, 3 காக்கைகள் சேர்ந்து ஒரு ஆந்தையைத் துன்புறுத்தும்.
இதைத்தான் வள்ளுவர் 'பகல்வெல்லும் காக்கை' என்று ஒரு திருக்குறளில் சுட்டிக் காட்டியிருப்பார்.
பொதுவாக ஆந்தைகள் சகுனத் தடைகளாக நினைக்கப்படுவதால் 'ஆக்கங்கெட்ட கூகை' என்ற சொற்றொடரைப் படுத்துவார்கள்.
நல்ல மனிதர்களையும் பயனுள்ள பறவைகளையும் உயிரிகளையும் பற்றி எதுவும் தெரியாமல் குப்பைகளைக் கொண்டாடும் நாம் தான் 'ஆக்கங்கெட்ட மனிதர்' என்ற சொற்றொடருக்குத் தகுதியானவர்கள்.
அருணகிரிநாதரின் அந்தப் பாடல்.
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர …… எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் …… அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் …… இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் …… ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு …… கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக …… எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென …… முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல …… பெருமாளே.
Nice
ReplyDelete